திருக்குறள், இனிய எளிய உரை/1. பாயிரம்அறத்துப்பால்

1. கடவுள் வாழ்த்து1.அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

“அ” என்னும் எழுத்தில் இருந்தே எல்லா எழுத்துக்களும் தோன்றின. வரிசை முறையிலும் அகரமே முதல் இடத்தைப் பெற்றிருக்கிறது. அவ்வாறே எல்லாவற்றிற்கும் முற்பட்டவராகிய கடவுளையே இவ்வுலகம் முதலாக உடையது. 1

2.கற்றதனால் ஆய பயன்என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்?

துய்மையான அறிவினையுடைய கடவுளின் சிறந்த திருவடிகளை நாம் வணங்க வேண்டும். அவ்விதம் வணங்காவிட்டால் நாம் கற்ற கல்வியால் பயனில்லை. 2

3.மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

அன்பர்களுடைய மனமாகிய தாமரையில் கடவுள் அமர்ந்திருக்கிறார். அக் கடவுளின் பெருமை வாய்ந்த திருவடிகளை நாம் வணங்கினால் நம் உள்ளத்திலும் அவர் எழுந்தருளியிருப்பார். அதனால் நாம் இந்த உலத்திலே நெடுங்காலம் இன்பமாக வாழலாம்.

‘நிலமிசை’ என்பதற்கு மேலுலகம் என்றும் பொருள் கூறுவர். சேர்தல்-இடைவிடாது நினைத்தல். 3

4.வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

கடவுள் விருப்பு வெறுப்பு இல்லாதவர்; அக் கடவுளை இடைவிடாது வணங்குவதால் நாமும் விருப்பு வெறுப்பு அற்ற சிறந்த குணத்தை அடையலாம். அதனால் எத்தகைய துன்பங்களும் எந்தக் காலத்தும் நம்மை வந்து அடைய மாட்டா. 4

5.இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

கடவுளுடைய உண்மையான சிறப்புக்களை உணர்ந்து, நாம் அவரை இடைவிடாது வணங்குதல் வேண்டும். அவ்வாறு வணங்கினால் நாம் சென்ற பிறப்பில் செய்த வினைகள், இந்தப் பிறப்பில் செய்த வினைகள் ஆகிய இரண்டும் நம்மை வந்து துன்புறுத்தமாட்டா.

இருள் சேர் - துன்பம் பொருந்திய ‘இருவினை’ என்பதற்கு நல்வினை, தீவினை என்றும் பொருள் கூறுவர்; புரிதல் - எப்பொழுதும் சொல்லுதல். 5

6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

மெய், வாய், கண், மூக்கு, செவி யென்னும் ஐந்தின் வழியாகத் தோன்றத்தக்க ஐவகை ஆசைகளையும் இயல்பாகவே வென்று விளங்குபவரே கடவுள். அக்கடவுளின் நல்லொழுக்க வழியைக் கடைப்பிடித்து ஐவகை ஆசைகளையும் அடக்கி வாழ்பவர் இவ்வுலகின் கண் நெடுங்காலம் இனிது இருப்பர்.

‘நீடு நிலமிசை வாழ்வார்’ என்பதற்கு விண்ணுலகத்தில் நிலைத்து வாழ்வார் என்றும் பொருள் கூறுவர். 6

7.தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

அறிவு, ஆற்றல், குணம் முதலியவைகளில் தனக்குச் சமம் எவரும் இல்லாத கடவுளின் பாதங்களை இடைவிடாது சிந்தித்தால் நாம் மனக் கவலை சிறிதும் இன்றி வாழலாம். அவ்விதம் நினையாதவர்க்கு மனக் கவலை நீங்குதல் அரிது. 7

8.அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீங்தல் அரிது.

கடவுள் கடல் போன்று பரந்துள்ள அறச்செயலே வடிவாக உடையவர்; கருணையும் வாய்ந்தவர். அவருடைய பாதங்களை நாம் இடைவிடாது நினைத்தல் வேண்டும். அவ்விதம் நினைத்தால் கடல் போன்று பரந்துள்ள எல்லாத் துன்பங்களையும் நாம் கடந்து விடலாம். மற்றவர் இத்துன்பங்களைக் கடத்தல் அரிது. 8

9.கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

ஒருவனுக்குக் கண், காது, மூக்கு முதலிய பொறிகள் இருந்தும் அவை பார்த்தல், கேட்டல், முகர்தல் முதலிய தொழில்களைச் செய்யாவிட்டால் அவற்றால் அவனுக்குச் சிறிதும் பயனில்லை. அவ்வாறே எண்வகைக் குணங்களையும் உடைய கடவுளின் பாதங்களை வணங்காத் தலை, கை முதலியன சிறிதும் பயன் அற்றவையே ஆகும்.

கோள் இல் பொறி - (புலன்களைக்) கொள்ளுதல் இல்லாத பொறி; எண் குணம் - மேல் எட்டுப் பாடல்களிலும் கடவுளுக்குக் குறிப்பிட்டுள்ள குணங்கள். 9

10.பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

பிறப்பாகிய பெரிய கடலை நாம் கடக்க விரும்பினால் கடவுளின் திருவடிகளை இடைவிடாமல் தியானம் செய்தல் வேண்டும். அவ்வாறு துதிக்காதவர்கள் பிறந்து பிறந்து துன்புறுவர்.

கடவுள் திருவடியாகிய தெப்பத்தைக் கொண்டு பிறவிக் கடலைக் கடத்தல் வேண்டும். 10

2. வான் சிறப்பு


1. வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

இவ்வுலகத்தில் உள்ள உயிர்கள் யாவும் மழையால் உயிர் வாழ்ந்து வருகின்றன. ஆதலால், மழையானது அவ் வுயிர்களுக்குச் சாவா மருந்து போன்றது. 11

2.துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

மழையானது உயிர்களுக்குத் தூய்மையான உணவுப் பொருள்களை உண்டாக்கித் தருகிறது; தானும் ஓர் உணவுப் பொருளாக இருந்து உதவுகிறது.

துப்பார்க்கு - உண்பவர்க்கு; துப்பு ஆய - சுத்தமான; துப்புஆக்கி - உணவுப் பொருள்களை உண்டாக்கி; துப்பாய தூஉம்-உணவாகி இருப்பதும். 12

3.விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.

மழை பெய்யவேண்டிய காலத்தில் தவறாது பெய்தல் வேண்டும். அவ்வாறு பெய்யத் தவறுமானால் கடலால் சூழப்பட்ட இந்தப் பெரிய உலகத்தில் பசி மக்களை வருத்தும். 13

4. ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.

உழவர்கட்கு நீர் வருவாய் மழையின் மூலமாகவே கிடைக்கிறது. மழை பெய்வதில் குறைவு நேர்ந்தால் உழவர்கள் ஏர் உழுது பயிர் செய்யமாட்டார்கள். 14

5. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

மழை, பெய்யவேண்டிய காலத்தில் பெய்யாமல் இருந்து மக்களைக் கெடுக்கவும் வல்லது; அங்ஙனம் நீரின்மையால் வருந்தும் மக்களுக்குத் துணையாக இருந்து நீரைப் பொழிந்து அவர்களை வாழ்விக்கவும் வல்லது. 15

6. விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.

ஆகாயத்திலிருந்து மழைத் துளிகள் விழுதல் வேண்டும்; இன்றேல் மழை பொழியாத அந்த இடத்திலே பசும் புல்லின் சிறு முனையையும் காணமுடியாது. 16

7.நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.

மேகமானது கடலில் உள்ள நீரை முகந்து மழையாகப் பெய்து அக்கடலை நிரப்புகிறது. அஃது அவ்விதம் செய்யாவிடில் நீண்டு பரந்துள்ள கடல் நீரும் தன் இயல்பில் குறைந்து விடும். அந்தக் கடலில் உள்ள உயிர்களும் வாழ மாட்டா.

தடிதல் - குறைத்தல்; எழிலி-மேகம்; நீர்கை - தன்மை; முத்து முதலியன தோன்றுவதற்கும் மழைநீர் காரணம். 17

8. சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

பெய்ய வேண்டிய காலங்களில் மழை பெய்யாவிட்டால் மேலுலகத்தில் உள்ள தேவர்களுக்கும் அன்றாடப் பூசைகள் விழாக்கள் முதலியன இங்கே செய்யமுடியாது.

பூசனை - அன்றாட வழிபாடு; சிறப்பு - திருவிழா. 18

9. தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்காது எனின்.

மழை பெய்யவேண்டிய காலங்களில் பெய்யாவிட்டால் இந்தப் பெரிய உலகத்திலே தானம், தவம் என்னும் இரண்டும் நிலைபெற்று நடைபெற மாட்டா. 19

10. நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.

எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது. அத்தகைய சிறப்பு வாய்ந்த நீரின் பெருக்கு மழை இல்லாமல் உண்டாகாது. 20

3. நீத்தார் பெருமை


1. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.

அறநெறியில் வழுவாது நின்று செய்ய வேண்டிய கடமைகளையெல்லாம் செய்து பின் இல்லற வாழ்விலிருந்து நீங்கித் துறவறத்தை மேற்கொள்ளும் துறவிகளுடைய பெருமையை எல்லா நூல்களும் மேலானதாகப் போற்ற விரும்பும்.

ஒழுக்கம்-(இங்கே) இல்வாழ்க்கை; நீத்தார்-துறந்தவர்; விழுப்பம்-மேன்மை; பனுவல்-நூல். 21

2. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

துறந்தவர்களுடைய பெருமையின் அளவைக் கண்டறிந்து கூறமுடியாது; கண்டறிய முயல்வது, இவ்வுலகம் தோன்றியதிலிருந்து எத்தனை உயிர்கள் பிறந்து இறந்தன எனக் கணக்கிட முயல்வதற்குச் சமம் ஆகும். 22

3.இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.

இல்லறம், துறவறம் இவ்விரண்டின் தன்மைகளையும் நன்கு ஆராய்ந்து அறிந்து இல்லறத்தில் தாம் செய்ய வேண்டிய கடமைகளைக் குறைவறச் செய்து துறவறத்தை மேற்கொண்ட பெரியோர்களின் பெருமையே உலகில் உயர்ந்ததாக இருக்கிறது.

இருமை-இல்லறம், துறவறம்; சிலர் பிறப்பு, வீடு எனவும் சிலர் இம்மை, மறுமை எனவும் பொருள் கூறுவர். 23

4. உரன்என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரன்என்னும் வைப்பிற்கோர் வித்து.

மெய், வாய், கண், மூக்கு, செவி என்பவைகளின் வழியாக வரும் ஐந்து ஆசைகளும் மதம் பிடித்த யானைகளைப் போன்றவை அவைகளை மன உறுதி என்னும் அங்குசத்தால் அடக்கிக் காக்கவேண்டும். அவ்வாறு காக்க வல்லவர் வான் உலகம் என்னும் நிலத்திற்கு ஒரு விதை போன்றவர்.

உரன்-மன உறுதி; அறிவு எனினுமாம்; தோட்டிஅங்குசம்; வரன் - உயர்வு; வைப்பு- நிலம். 24

5. ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலும் கரி.

ஐந்து ஆசைகளையும் அடக்கியவன் வல்லமைக்கு, இடம் அகன்ற தேவலோகத்தை ஆட்சி புரியும் இந்திரனே சிறந்த உதாரணமாக விளங்குகின்றான். தவத்திற் சிறந்தவர்க்குத் தேவேந்திர பதவியும் எளிதில் கிடைக்கும். 25

6. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

ஐம்பொறிகளின் வழியாக வரும் ஆசையினை அடக்குதல் போன்ற செய்தற்கு அருமையான செயல்களைச் செய்வோர் பெரியோர் ஆவர். செய்வதற்கு அருமையான செயல்களைச் செய்யாதவர்கள் துறந்தோர் என்று சொல்லிக்கொண்டு இருப்பினும் சிறியோரே ஆவர். 26

7. சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.

மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்தின் மூலமாகத் தொட்டறிதல், சுவைத்தல், பார்த்தல், முகர்தல், கேட்டல் என்னும் ஐந்து ஆசைகள் தோன்றுகின்றன. இந்த ஐந்து ஆசைகளாலும் வரும் நன்மை தீமைகளை யறிந்து, அவைகளை அடக்கி ஆள வல்லவனிடமே இவ்வுலகம் அடங்கிக் கிடக்கிறது. இந்த உலகத்தால் அடையவேண்டிய நற்பயனை அவனே அடைய வல்லவன். 27

8. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

துறவிகள் அறிவு நிறைந்த மொழிகளையுடையவர்கள். இவ்வுலகில் அவர்களால் இயற்றப்பட்டுள்ள சிறந்த அறிவு நூல்களே அவர்கள் பெருமையை நன்கு விளக்கிக் காட்டி விடும்.

மறை மொழி-அறிவு நூல். மந்திர நூல், வேத நூல் என்றும் பொருள் கூறுவர். 28

9.குணம்என்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

நற்குணத்தினை ஒரு குன்றுக்குச் சமமாகச் சொல்லலாம். நற்குணத்திற் சிறந்த துறவிகள் ஒரு குன்றின் மேல் ஏறி நின்றவர்களைப்போல் எல்லாராலும் அறிந்து பாராட்டப்படக் கூடியவர்கள். அத்தகையோருக்குக் கோபம் சிறிதும் வாராது. வந்தாலும் அக்கோபம் ஒரு கண நேரத்திற்குள் அடங்கிவிடும்.

துறவிகளின் கோபம் கணநேரமே இருக்கக்கூடியதாயினும் அதனை நம்மால் சிறிதும் தடுத்துக்கொள்ள முடியாது என்றும் பொருள் கூறுவர். 29

10. அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

அந்தணர் என்பதற்கு மிக்க கருணையை உடையவர் என்பது பொருள். துறவிகள் எல்லா உயிர்களிடத்தும் கருணை கொண்டு வாழும் குணமுடைவர்கள். ஆதலால், அந்தணர. என்னும் சொல் மிக்க கருணையுடைய் துறவி களுக்கே சிறப்பாகப் பொருந்தும். 30

4. அறன் வலியுறுத்தல்


1.சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு?

அறம் ஒருவனுக்கு நல்ல மதிப்பினைத் தரும்; செல்வங்களையும் அளிக்கும். ஆதலால், உயிர்களுக்கு நன்மையைத் தருவதில் அறத்தினும் மேம்பட்டது வேறு ஒன்றும் இல்லை. 31

2.அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.

அறம் செய்வதைக் காட்டினும் மேம்பட்ட செல்வமும் இல்லை. அதனைச் செய்யாது மறத்தலைக் காட்டலும் மிக்க துன்பமும் இல்லை. 32

3.ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாம் செயல்.

நாம் நமக்கு முடிந்த அளவில் சமயம் நேர்ந்த போதெல்லாம் அறச் செயலினை இடைவிடாமல் செய்து வர வேண்டும் 33

4.மனத்துக்கண் மாசிலன் ஆதல்; அனைத்துஅறன்
ஆகுல நீர பிற.

மனத்தில் சிறிதும் குற்றமில்லாமல் இருத்தலே அறம் ஆகும். மனத்தில் பொறாமை, கோபம் முதலிய குற்றங்களை யெல்லாம் வைத்துக் கொண்டு, நீதி நூல்களில் கூறியுள்ள பிற அறச்செயல்களைச் செய்வதில் சிறிதும் பயன் இல்லை. அப்படிப்பட்ட அறச்செயல்கள் வீண் பெருமைக்காகச் செய்கின்ற ஆரவாரச் செயல்களாகவே முடியும். 34

5.அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களையும் நீக்கி நடப்பதே அறமாகும். 35

6.அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.

‘நமக்கு நல்ல காலம் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்.’ அல்லது ‘நாம் இப்போது இளமை வாய்ந்திருப்பதால் வயது முதிர்ந்தபோது பார்த்துக் கொள்ளலாம்’ என்றெல்லாம் காலம் போக்காமல் அறத்தினை உடனே செய்தல் வேண்டும். அவ்வாறு செய்தால் நமக்கு வறுமை, பிணி, மூப்பு முதலியவற்றால் அழிவு நேர்ந்தபோதும் அஃது அழியாத துணையாக இருந்து அந்தத் துன்பங்களைப் போக்கும். 36

7.அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை.

அறத்தின் பயன் இது என்று நாம் நூல்களைக் கொண்டு ஆராய்ந்து அறிய வேண்டியதில்லை. பல்லக்கினைச் சுமப்பவனுக்கும் ஊர்பவனுக்கும் இடையில் தோன்றும் உயர்வு தாழ்வு வேறுபாடுகளே அறத்தின் பயனை நமக்கு நேரில் விளக்கிக் காட்டும். 37

8.வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.

நம் நாளை வீணாக்காமல் என்றும் அறஞ் செய்தல் வேண்டும். அவ்விதம் செய்தால் அந்த அறம் நாம் பிறந்து பிறந்து துன்பம் அடைவதற்குள் வழியை அடைக்கும் கல்லாக இருந்து, என்றும் இன்பம் அடையும்படி செய்யும். ஒழிவில்லாமல் அறம்செய்வோர் இல்வுலகில் துன்புற்றிராது மேல் உலகில் இன்புற்றிருப்பர். 38

9.அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல.

அறநெறியில் நின்று அதனால் அடையும் இன்பமே இன்பமாகும். அவ்வாறு அறவழியில் அல்லாமல் வேறு தீயவழிகளில் வருவன எல்லாம் இன்பத்துக்குப் புறம்பானவை, துன்பத்தைத் தருபவை. அவற்றால் புகழும் இல்லை. 39

10.செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.

ஒருவன் தன் கடமையாகக் கொண்டு தவறாமல் செய்ய வேண்டியது அறச்செயல் ஒன்றேயாகும். அவன் செய்யாமல் நீக்க வேண்டியது தீவினையே ஆகும். ஓரும் என்பது அசை நிலை, உயற்பாலது-செய்யாமல் காத்துக் கொள்ள வேண்டியது. 40