திருக்குறள், இனிய எளிய உரை/2. இல்லற வியல்

1. இல்லற வியல்

5. இல்வாழ்க்கை


1.இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை.

மனைவி மக்களோடு இல் வாழ்க்கை நடத்தும் ஒருவன் இயல்பாகவே உதவ வேண்டிய நிலையில் இருப்பவர் பிரமசாரி, வானப் பிரஸ்தன், சந்நியாசி ஆகிய மூவகையினர் ஆவர். அம்மூவகையினருக்கும் அவன் நல்வழியிலேயே தகுந்த துணையாக இருக்க வேண்டும்.

இயல்புடைய மூவர் பெற்றோர், பிள்ளைகள், உடன் பிறந்தார் ஆகிய மூவர் என்றும் கூறுவர் ; நல்லாறு-நல்வழி. 41

2.துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துணை.

சுற்றத்தாரால் காக்க முடியாமல் கை விடப்பட்டவர், வறுமையால் வருந்துகின்றவர், நோய் நொடி மூப்பு முதலியவற்றால் வருந்தி ஆதரவற்று இறந்தவர் ஆகிய இம்முப்பகுதியினருக்கும் இல்லற நிலையில் இருப்பவன் ஆதரவாக இருந்து செய்யத் தக்கனவற்றைச் செய்தல் வேண்டும். 42

3.தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தான்என்றாங்கு
ஐம்புலத்தா றோம்பல் தலை.
.

நீத்தார் வழிபாடு, கடவுள் வணக்கம், புதியவராக வந்தவரை ஆதரித்தல், சுற்றம் தழுவுதல், தன்னைத்தான் காப்பாற்றிக் கொள்ளுதல் என்னும் ஐந்து பகுதிகளையும் பாதுகாப்போடு செய்தல் இல்வாழ்வானுக்கு முதன்மையான செயல் ஆகும்.

தென்புலத்தார்-இறந்து தென் திசையில் கடவுளாக விளங்குபவர்; விருந்து-புதியவர்; ஒக்கல்-சுற்றத்தார்; ஐம்புலம்-ஐந்து இடம்; ஆறு-வழி; ஓம்பல்-பாதுகாத்தல். 43

4.பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

உலக நிந்தனைக்குப் பயந்து நேர்மையான வழியிலே பொருளைத் தொகுத்தல் வேண்டும். அப்பொருளை ஏனையவர்க்குப் பகுத்து உதவுதல் வேண்டும். மிகுந்ததனைத் தானும் தன் குடும்பத்தாரும் உண்ணுதல் வேண்டும். இல்லற வாழ்க்கை ஒருவனுக்கு இவ்விதம் நிகழ்ந்தால் அவன் குடும்பக் கால்வழி இவ்வுலகில் என்றும் நிலைத்திருக்கும்.

பாத்தூண்-பகுத்து உண்ணுதல்: வழி - கால்வழி, பரம்பரை; எஞ்சல் -ஒழிதல்; எஞ்ஞான்றும்-எப்போதும். 44

5.அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

இல்வாழ்வான் என்பவன் எல்லோரிடத்தும் அன்பாக இருக்கும் தன்மையும், நல்வழியில் ஒழுகும் -செயலும் உடையவனாக இருத்தல் வேண்டும். அவ்விதம் இருத்தலே இல்வாழ்க்கையின் சிறந்த தன்மை ஆகும். அவ்வாழ்க்கையில் அடையும் பயனும் அதுவே ஆகும். 45

6.அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவது எவன்?

நீதி நூல்களில் கூறியுள்ளபடி ஒருவன் இல் வாழ்க்கையைத் தவறாது நடத்தி வருவானானால் அவன் பிறகு துறவறத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமே இல்லை. இவ்வுலக இன்பம், மறுவுலக இன்பம் எல்லாவற்றையும் இல்வாழ்க்கையிலிருந்தே அவனால் அடைய முடியும். 46

7.இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.

இவ்வாழ்க்கையில் இருந்து அவ்வில்வாழ்க்கைக்கு உரிய இயல்போடு கூடி வாழ்வது சிறப்புடையது. அவ்வாறு வாழ்பவன் ஐம்புலன்களையும் அடக்கித் தம் வயப்படுத்த முயற்சி செய்யும் எல்லாரினும் சிறந்தவன் ஆவான்.

முயல்வார்-ஐம்புலன்களையும் அடக்கித் தம் வயப்படுத்த முயற்சி செய்பவர்; அறிய முயல்பவர் என்றும் கூறுவர். 47

8.ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.

தவம் செய்பவர்களைத் தவ ஒழுக்கத்தில் நிலைத்திருக்கச் செய்பவன் இல்வாழ்க்கை நடத்துபவனே ஆவன். அவன் அங்ஙனம் செய்தலோடு அவ்வில்வாழ்க்கைக்குக்குரிய நெறியிலிருந்து தவறாமலும் இருப்பானாயின் அவனது இல்வாழ்க்கை தவம் செய்பவர்களுடைய நிலையைக் காட்டிலும் மிக்க பொறுமையை உடையதாகும்.

ஆறு-தவ ஒழுக்கம்; ஒழுக்கி-நடத்தி, அறன்-இல்லற நெறி; இழுக்காத-தவறாத ;நோற்பார்-தவம் செய்வோர்; நோன்மை-பொறுமை; வலிமை என்றும் கூறுவர். 48.

9.அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.

இல்லறம், துறவறம் ஆகிய இரண்டனுள் அறன் எனச் சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையேயாகும். துறவறமும் பிறனால் பழிக்கப்படாத பெருமையுடையதானால் இல்வாழ்க்கையைப் போலவே சிறப்புடையதாகும்.

'அஃதும்'- என்னும் சொல் துறவறத்தைக் குறிக்கும். இச்சொல் இல்வாழ்க்கையையே குறிக்கும் என்றும் கூறுவர். 49

10.வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

இந்நிலவுலகத்தில், இல்வாழ்க்கையில் இருந்து வாழ வேண்டிய முறைப்படி ஒருவன் வாழ்வானாயின் அவன் மனிதனே யானாலும், வானுலகத்தில் வாழ்கின்ற தேவருள் ஒருவனாக மதிக்கப்படுவான். 50

6. வாழ்க்கைத் துணைநலம்


1.மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

ஒரு நல்ல மனைவி இல்லற வாழ்க்கைக்குத் தகுந்த நற்குண நற்செய்கைகளையும், தன் கணவனது வருவாய்க்குத் தக்க வாழ்க்கையையும் உடையவளாய் இருத்தல் வேண்டும். அத்தகைய மனைவி இல்லற வாழ்க்கைக்கு ஒரு சிறந்த துணையாவாள். 51

2. மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.

இல்லற வாழ்க்கைக்குத் தகுந்த நற்குண நற்செய்கைகள் ஒரு மனையாளிடத்தில் அமைந்திருத்தல் வேண்டும். இல்லையானால் அந்த இல்லற வாழ்க்கை எப்படிப்பட்ட பெருமையை உடையதானாலும் பயனற்றதாகும். 52

3.இல்லதென் இல்லவள் மாண்பானால்? உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?

நற்குண நற்செய்கைகளையுடைய மனைவியைப் பெற்ற கணவனிடத்து இல்லாத செல்வம் இல்லை. மனைவினிடத்து நற்குண நற் செய்கைகள் இல்லையானால் கணவனிடத்து எந்தச் செல்வமும் இருப்பதாகக் கொள்ள முடியாது.

இல்லது - இல்லாத பொருள்; இல்லவள்-வீட்டிற்கு உரியவள் (மனைவி); உள்ளது-இருக்கின்ற பொருள்; மாணாக்கடை-நற்குண நற்செய்கைகளால் பெருமையடையாத போது. 53

4.பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்?

அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றினையும் அடைவதற்குத் துணையாய் இருப்பவள் கற்புடைய மனைவி. ஒருவன் அடையக் கூடிய பொருள்களுள் அப்படிப்பட்ட கற்புடைய மனைவியினும் உயர்வாகிய பொருள் வேறு ஒன்றும் இல்லை.

பெருந்தக்க-பெரிய தகுதியினையுடைய பொருள்கள்; யா-எவை: திண்மை-கலங்கா நிலைமை. 54

5.தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

ஒரு மனைவி கடவுளை வழிபடா விட்டாலும் எல்லாத் தெய்வமும் தன் கணவனே என்று கருதி அவனை முறை தவறாது வழிபடுவாளாயின், அவள், பெய்” என்று சொல்ல மழை பெய்யும்.

மழை மட்டுமல்லாமல் பிற இயற்கைப் பொருள்களும் அவள் சொல்வழிப் பணியாற்றும் என்றும் கூறுவர். 55

6. தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

கற்பினின்றும் வழுவாமல் தன்னைத் தானே காத்துக் கொள்வது ஒரு மனைவியின் கடமை. தன்னை மனைவியாகக் கொண்ட கணவனை உணவு முதலியவற்றால் உபசரிப்பது அவளது இயல்பு. தன்னிடத்தும் தன் கண்வனிடத்தும் நன்கமைந்த புகழ் தம்மை விட்டு நீங்காத வகையில் நற்குண நற்செயல்களை மறவாது இல்வாழ்க்கை நடத்துதல் அவளது பெருமை. இத்தகைய இயல்புகள் வாய்ந்தவளே பெண்.

பேணுதல்-உபசரித்தல்; தகைசான்ற-நன்மையமைந்த; சொல்-புகழ்; சோர்வு-மறத்தல். 56

7.சிறைகாக்கும் காப்பெவன் செய்யும்; மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.

மதில், வாயிற் காவல் முதலியவற்றால் பெண்களைக் காவல் செய்வது என்ன பயனைத் தரும்? அவர்கள் தமது நெஞ்சைக் கற்பு நெறியில் நிறுத்தித் தம்மைத் தாமே காத்துக் கொள்ளும் காவலே மேலான காவலாகும்.

சிறை-மதிற் காவல், வாயிற் காவல் முதலியன; நிறை- நெஞ்சைக் கற்பு நெறியில் நிறுத்துதல்; தலை-மேன்மையுடையது. 57

8.பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.

தம் கணவரை முறையோடு உபசரிக்கும் இயல்பினைப் பெற்ற மனைவியர் தேவர்கள் வாழ்கின்ற உலகத்திலே இருப்பதாகக் கூறப்படும் பெரிய சிறப்புக்களையும் இவ்வுலகத்திலேயே பெறுவர்.

பெற்றான்- (மனைவியாகப்) பெற்றவன், கணவன்; பெறின்-(உபசரிக்கும் இயல்பைப்) பெற்றால்; புத்தேளிர்- தேவர்கள்.

இக்குறட்பாவினுக்குக் "கணவரை உபசரிக்கும் மனைவியர் தேவருலகத்தில் தேவர்களால் மிக்க சிறப்புச் செய்யப்படுவர்" என்றும் பொருள் கூறுவர். 58

9.புகழ்புரிந்த இல்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீறு நடை.

புகழை விரும்புகின்ற மனைவியைப் பெறாதவர்கள் தம்மை இகழும் தம் பகைவர் முன்னே சிங்க ஏறு போலப் பெருமிதத்தோடு நடக்க முடியாது.

புரிந்த-விரும்பிய; இல்-மனைவி; ஏறு-ஆண் சிங்கம்; பீடு-பெருமை. 59

10.மங்கலம் என்ப மனைமாட்சி; மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.

ஒரு கணவனுக்கு அவனுடைய மனைவியின் நற்குண நற்செய்கைகளே நன்மை தருவன என்பர். அந்த நற்செய்கைகளுக்கு அழகு செய்யும் அணியாவது நல்ல புதல்வரைப் பெறுதல்.

மங்கலம்-நன்மை; மனை-மனைவி; மாட்சி-பெருமையைத் தரும் நற்குண நற்செயல்கள்; கலம். அணி. 60

7. புதல்வரைப் பெறுதல்


1.பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.

ஒருவன் அடைதற்குரிய செல்வங்களுள் சிறந்தது அறிவிற் சிறந்த குழந்தைகளைப் பெறுதலேயாகும். குழந்தைச் செல்வம் அல்லாத, மண், பொன் முதலிய பிற செல்வங்களைக் குழந்தைச் செல்வத்திலும் சிறந்த செல்வமாக மதிப்பதற்கில்லை.

பேறு-செல்வம்; அறிவு அறிந்த-அறிய வேண்டியவைகளை அறிதற்குரிய; மக்கள்-ஆண், பெண் குழந்தைகள். 61

2.எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.

.
பிறரால் பழிக்கப்படாத நற்குணங்களையுடைய புதல்வர்களைப் பெற்றவர்களை ஏழு பிறப்புக்களிலும் துன்பங்கள் அணுகா.

எழு பிறப்பு-ஏழு வகைப் பிறப்பு. ஏழு தலைமுறைகள் எனவும் பொருள் கூறுவர்; பிறங்குதல்- அதிகரித்தல். 62 .

3.தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தந்தம் வினையான் வரும்.

மக்களுடைய நல்வினையினாலே விளையும் பொருள் அவர்தம் பெற்றோரைச் சேரும். எனவே, மக்கட் செல்வமே ஒருவருக்குச் சிறந்த செல்வமாகும். அச்செல்வம் பெற்றோர் செய்த நல்வினைப் பயனால் அவரை வந்து அடையும். 63

4.அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.

தாய் தந்தையர் உண்ணும்போது அவர்தம் குழந்தைகள் உடனிருந்து தம் சிறிய கைகளால் துழாவிய உணவானது சுவையினால் மிகுந்த அமிழ்தத்தினும் மிக்க இனிமை யுடையதாம். 64

5.மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம்; மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

தம்முடைய குழந்தைகளின் உடம்பைத் தொடுவது தாய் தந்தையரின் உடம்புக்கு இன்பம் தரும். குழந்தைகள் பேசும் சொற்கள் அவர்தம் தாய் தந்தையரின் செவிக்கு இன்பம் அளிக்கும்.

தம் குழந்தைகள் தம் உடம்பைத் தொடும்போது தாய் தந்தையரின் உடம்பு இன்பமடையும் என்று பொருள் கூறுவர். 65

6.குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

குழலோசையும் யாழிசையும் இனிமையுடையன. ஆனால், தம் குழந்தைகளின் மழலைச் சொற்களைக் கேட்டு இன்புற்ற பெற்றோர் அம்மழலைச் சொற்கள் குழலோசையினும் யாழிசையினும் இனிமையுடையன என்பர் தம் குழந்தையின் மழலைச் சொற்களைக் கேளாதவரே குழலோசையும் யாழிசையும் இனியன என்பர். .66

7.தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.

தந்தை தன் மகனுக்குச் செய்யும் நன்மை ஒன்று உண்டு. அது கற்றவர் கூடிய அவையிலே தன் மகன் மேம்பட்டிருக்கும்படி அவனைக் கல்வி யறிவுடையனாக்குதல். .67

8.தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

தம் மக்கள், இயல்பாகிய அறிவோடு கல்வியறிவையும் பெற்றிருத்தலைக் கண்டு பெற்றோர் மகிழ்வர். ஆனால்; அவ்வறிவுடைமையை அறிந்து. இந்நிலவுலகத்தில் நிலை பெற்ற கல்வி யறிவுடையார், பெற்றோரினும் பெருமகிழ்ச்சி கொள்வர்.

தம்மில்-தம்மைக் காட்டிலும்; மாநிலம்-பெரிய உலகம்; மன்னுயிர்-நிலைபெற்ற கல்வி யறிவுடையோர். தம்மில் தம் மக்கள் அறிவுடைமை-'தம்மினும் தம் மக்கள் அறிவிற் சிறந்து விளங்குதல்’ என்றும் பொருள் கூறுவர். .68

9.ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

குழந்தையைப் பெறும் போது தாய் அடையும் துன்பம் பெரிது ஆயினும், தான் பெற்ற குழந்தை ஆண் குழந்தை என்பதை அறிந்ததும் அவள் அடையும் மகிழ்ச்சியும் பெரிது. இம்மகிழ்ச்சியிலும் தன் மகன் கல்வி கேள்விகள் நிறைந்தவன் எனச் சான்றோர் சொல்லக் கேட்கும் போது அந்தத் தாயின் மகிழ்ச்சி அளவு கடந்து நிற்கின்றது. .69

10.மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.

தன்னைக் கல்வியுடையவனாக்கிய தன் தந்தைக்கு மகன் செய்யும் நன்மை ஒன்று உண்டு; அது தன் அறிவையும், ஒழுக்கத்தையும் கண்டவர். "இவனைப் பெறுதற்கு இவன் தந்தை என்ன நல்வினை செய்தானோ?” என்று சொல்லும்படியாகத் தன்னை ஆக்கிக் கொள்ளுதலாம். .70

8. அன்புடைமை


1.அன்பிற்கு முண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்.

எவரும் தம்மிடத்திலுள்ள அன்பினைப் பிறர் அறியாதவாறு மறைத்துத் தாழ்ப்பாள் இட முடியாது. ஒருவர் எவரிடத்து அன்பு கொண்டுள்ளாரோ, அவர் துன்பப்படுவதைக் காணும் போது அன்புடையவருடைய கண்களிலிருந்து நீர் வழியும். அக்கண்ணீரே அவரிடத்துள்ள அன்பைப் பலரும் அறியக் காட்டி விடும். 71

தாழ்-தாழ்ப்பாள்; பூசல் தரும்-வெளிப்படுத்தும்.

2.அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

அன்புடையார் பிறர்க்குப் பயன்படுவார்; தமக்கென ஒன்றையும் விரும்பார்; தமது உடம்பும் பிறர்க்குப் பயன் படுமாயின் அவ்வுடம்பையும் அவர்க்கு அளிப்பார். அன்பில்லாதவர் பிறர்க்குப் பயன்படார்; எல்லாப் பொருள்களும் தமக்கு உரியனவென்று கொள்வார்.

என்பு-எலும்பு; (இங்கு எலும்போடு கூடிய உடம்பைக் குறிக்கும்.) 72

3.அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.

மக்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் பிறரிடத்து அன்பாய் இருக்க வேண்டும். மக்கள் அவ்வாறு அன்பு செய்தல் பொருட்டே உயிர் உடலோடு தொடர்பு கொண்டுள்ளது. 73

4.அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.

அன்பு பிறரிடத்து விருப்பத்தைத் தோற்றுவிக்கும்; அவ்விருப்பம் எல்லாரும் அவருக்கு நண்பர் என்று சொல்லும்படியான அளவிறந்த சிறப்பையும் அளிக்கும். 74

5.அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.

இவ்வுலகத்தில் தம் உற்றார் உறவினரோடு அன்பினால் பிணைக்கப்பட்டு இனிதே இல்வாழ்க்கை நடத்தி மகிழ்ந்தவர் விண்ணுலகத்தும் இன்புறுவர். அவர் வானுலகத்தே அடையும் சிறப்பு, அவர் மண்ணுலகத்தே நடத்திய அன்பு வாழ்க்கையின் விளைவேயாம்.

இக்குறளுக்கு "இவ்வுலகத்தில் இன்பத்தோடு வாழ்வார் அடையும் பெருஞ் சிறப்பு அவர் முற்பிறவியில் பிறர் பால் செலுத்திய அன்பின் விளைவேயாம்," என்றும் பொருள் கூறுவர். 75

6.அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

அறியாதார் அறச்செயல்கள் மட்டுமே அன்பின் விளைவு எனக் கூறுவார். மறச்செயலை நீக்கவும் அன்பு துணை செய்கிறது. ஒருவன் செய்த பகைமை பற்றி மனத்திலே மறச் செயல் தோன்றிய போது அவனை நட்பாகக் கருதி அம்மறச் செயல் எண்ணத்தைப் போக்குவதும் அன்பேயாம்.

அறத்திற்கு - அறச்செயல்கள் செய்வதற்கு; சார்பு-துணை; மறத்திற்கு-மறச்செயல்களை நீக்குவதற்கு. 76

7.என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.

எலும்பே யில்லாத உடலையுடைய புழுவைக் காய்ந்து கொல்லும் வெயில் போல் அன்பில்லாதவர்களை அறக் கடவுள் வருத்தும்.. 77

8.அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.

அன்பில்லாத ஒருவன் இல்வாழ்க்கை நடத்துதல் பாலை வனத்தில் உலர்ந்ததாகிய மரமொன்று தளிர்ப்பது போன்றது. பட்டுப் போன மரம் பாலைவனத்தில் தளிர்க்காது. அது போலவே அன்பில்லாத இல்வாழ்க்கையும் நடைபெற முடியாது.

வன்பால்-வலிய பாலை நிலம்; தளிர்த்தற்று-தளிர்த்தது போன்றது.. 78

9.புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப் பன்பி லவர்க்கு?

ஒருவனுடைய மனத்தின் கண் இருக்க வேண்டிய சிறந்த உறுப்பு அன்பேயாம். இடமும், பொருளும், ஏவல் செய்வோரும் ஆகிய வெளியுறுப்புக்கள் அன்பின் துணை கொண்டே பயன்படுவன. அந்த அன்பு ஒருவனிடத்து இல்லையாயின் அவற்றால் பயன் இல்லையாம்.

புறத்துறுப்பு-கை, கால், கண், செவி முதலிய உறுப்புக்களுமாம். 79

10.அன்பின் வழிய துயிர்நிலை அஃதுஇலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

அன்பின் வழி நின்ற உடலே உயிரோடு கூடிய உடலாகும். அன்பின் வழிச் செல்லாதவருடைய உடல் உயிரோடு கூடிய உடலன்று; அஃது எலும்பைத் தோலால் போர்த்த உடலாகும்.

வழியது-வழி நிற்பது (இங்கு வழி நிற்கும் உடல்); உயிர்நிலை-உயிர் நிலைத்திருக்கும் இடம், உடல். 80

9. விருந்தோம்பல்


1.இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.

மனைவி மக்களோடு வீட்டில் இருந்து, பொருள் சம்பாதித்து நாம் வாழ்ந்து வருவது எதற்காக எனில் நம் வீட்டிற்குப் புதிதாக வருகின்றவர்களைப் பெருமைப்படுத்தி அவர்கட்கு வேண்டிய உதவிகளைப் புரிதற் பொருட்டே ஆகும்.

ஓம்புதல்-பாதுகாத்தல்; விருந்து-நமக்கு முன் பின் தெரியாத அயலார்; வேளாண்மை-உதவி. 81

2விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

புதிதாக நம்மை நோக்கி வந்த ஒருவர் நம் வீட்டின் வெளிப்புறத்திலே பசியோடிருக்க, நாம் உண்ணும் உணவு என்றும் இறவாமலிருக்கச் செய்யும் தேவாமிர்தமாக இருந்தாலும் விரும்பத்தக்கது அன்று. 82

3.வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.

தன்னை நாடி வருகின்ற விருந்தினர்களை நாள் தோறும் வரவேற்று, அவர்கட்கு வேண்டுவன அளித்து, அவர்களைப் போற்றி வரும் இயல்புடையவனின் இல்வாழ்க்கை எந்தக் காலத்திலும் வறுமையால் வருந்திக் கெடுவதில்லை. 83

4.அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந் தோம்புவான் இல்.

நல்ல விருந்தினர்களை முகமலர்ச்சியோடு உபசரிக்கும் இயல்புடையவனின் இல்லத்தில் திருமகள் உள்ளம் மகிழ்ந்து தங்கியிருப்பாள்.

அகன் அமர்ந்து-மனத்தில் மகிழ்ச்சி பொருந்தி. 84

5.வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.

விருந்தினரை உண்ணும்படி செய்து உபசரித்து அவர் உண்டு மிகுந்ததைத் தானும் தன் குடும்பத்தாரும் உண்ணும் இயல்புடையவன் நிலத்துக்கு விதை விதைத்தலும் வேண்டுமோ? (வேண்டுவதில்லை; தானே விளையும்.) 85

6.செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.

தன்னிடத்து வந்து செல்லும் விருந்தினர்களை உபசரித்து அவர்களை வழி கூட்டி அனுப்பி விட்டு, மேலும் வரக் கூடிய விருந்தினருக்காக எதிர்பார்க்கும் இயல்புடையவனை மேலுலகத்திலுள்ள இந்திரன் முதலிய தேவர்கள் ஒரு விருந்தினனாகப் பாவித்து அவனுக்கு மதிப்புத் தந்து அவனைப் போற்றிப் புகழ்வார்கள். 86

7.இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.

விருந்தினரை உபசரித்தலால் ஆகிய பயன் இன்ன அளவினது என்று அளவிட்டுச் சொல்வதற்கில்லை. அவ்விருந்தினரின் குண நலன்களுக்குத் தக்கபடி அந்தப் பயன் விளையும்.

இனைத்துணைத்து - இன்ன அளவினை யுடையது; துணை-அளவு; துணைத்துணை-(குணநலன்களின் அல்லது தகுதியின்) அளவே அளவாகும்; வேள்வி-உதவி. 87

8.பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.

விருந்தினரை உபசரித்து, அதனால் ஆகிய பலனை அடைய முயலாதவர்கள் வருந்தித் தேடிப் பாதுகாத்த தம் பொருளை இழந்து, "எத்தகைய ஆதரவும் இல்லாதவராய் இருக்கின்றோம்" என்று சொல்லி வருந்தக்கூடிய நிலையில் இருப்பர்.

பற்றற்றேம்-ஆதரவற்ற நிலையில் இருக்கின்றோம்; விருந்தினருக்கு உதவாத பொருள் தம்மாலும் அனுபவிக்கப் படாமல் தொலைந்து போகும் என்பது கருத்து. 88

9.உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.

விருந்தினரை உபசரியாமல் இருக்கும் அறியாமையை உடைய ஒருவன் செல்வத்தைப் பெற்றிருந்தாலும் அச்செல்வம் அவனிடத்து இல்லாமைக்குச் சமமாகும். விருந்தினரை உபசரியாமல் இருக்கும் பேதைமையான செயல் அறிவில்லாதவர்களிடத்திலே இருக்கும். 89

10.மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

அனிச்ச மலரானது மோந்தால்தான் வாடிப் போகும். விருந்தினரின் முகமாகிய மலரோ, முகம் வேறுபாட்டோடு ஒருமுறை நோக்கிய உடனே வாடிப் போய் விடும்.

விருந்தினர் அனிச்ச மலரினும் மென்மையான உள்ளழ் வாய்ந்தவர் என்பது பொருள். 90

10. இனியவை கூறல்


1.இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

இன்சொற்களாவன அன்பு கலந்து வஞ்சனை அற்றவைகளாய், மெய்ப்பொருள் உணர்ந்தவர்களின் வாயிலிருந்து வரும் சொற்களாகும்.

ஈரம்-அன்பு; அளைஇ-கலந்து; படிறு-வஞ்சனை; செம்பொருள்- உண்மைப் பொருள். 91

2.அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.

முகமலர்ச்சியோடு இனிமையான சொற்களைச் சொல்லுங் குணமானது வாய்க்கப் பெற்றால், அது மனமகிழ்ந்து ஒரு பொருளை உதவும் ஈகைக் குணத்திலும் சிறந்ததாகும்.

அகன்-மனம்; அமர்ந்து-விரும்பி, மகிழ்ந்து. 92

3.முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.

முகத்தினால் மகிழ்ச்சி பொருந்தி இனிமையாகப் பார்த்து, மனம் உவந்து தோன்றும் இனிய சொற்களைச் சொல்வதே அறமாகும்.

அமர்ந்து - (மகிழ்ச்சி) பொருந்தி; அகத்தான் ஆம்- மனத்தினிடத்ததாகிய; சொலினது-சொல்லைச் சொல்லுதலின் கண்ணது. 93

4.துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.

எல்லாரிடத்தும் மகிழ்ச்சியை விளைவிக்கும் இனிய சொற்களைச் சொல்ல வல்லார்க்குத் துன்பத்தை விளைவிக்கும் வறுமை நிலை இல்லையாகும். 94

5.பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.

ஒருவனுக்கு அழகினை அளிப்பது அவன் பிறரிடம் வணக்கம் உடையவனாகவும், இன்சொல் பேசுபவனாகவும் இருத்தலே ஆகும். இவையல்லாத மற்றவை அவனுக்கு அழகைத் தாரா. 95

6.அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.

ஒருவன் பிறருக்கு நன்மை உண்டாகும் சொற்களை ஆராய்ந்து அவைகளை இனிமையான தன்மையில் சொல்லுவானேயானால், அதனால் அவனுக்குத் தீமைகள் குறைய, நன்மைகள் மிகும்.

அல்லவை-நன்மையல்லாதவை, தீமைகள்; அறம்- நன்மையைத் தரும் செயல்கள். சிலர் அறம் என்பதற்குப் புண்ணியம் என்றும், அல்லவை என்பதற்குப் பாவம் என்றும் பொருள் கொள்வர். 96

7.நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.

நன்மையும் தந்து, இனிமையான தன்மையிலிருந்தும் நீங்காமலிருக்கும் சொல்லானது அச்சொல்லைக் கேட்போருக்கு நன்மையைத் தருவதோடு, சொல்லுவோனுக்கும் இன்பத்தை அளித்து நன்மையைத் தரும்.

நயன் - நன்மை, இனிமை, இன்பம்; நீதி என்றும் பொருள் கூறுவர்; பயன் ஈன்று-நன்மையைத் தந்து; பண்பு - குணம் (இங்கே இனிமைக் குணம்); தலைப்பிரியா - நீங்காத. 97

8.சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.

பிறரால் இகழப்படாத, நன்மையைத் தரத்தக்க, இனிமையான சொற்கள் அவற்றைச் சொல்லுவோனுக்கு இந்தப் பிறவியிலும், இதற்கு அடுத்த பிறவியிலும் இன்பம் தரும்.

சிறுமை-இழிவு; மறுமை-மறுபிறப்பு; இம்மை-இந்தப் பிறப்பு. 98

9.இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது?

பிறர் கூறும் இனிய சொற்கள் தனக்கு இன்பம் விளைவிப்பதை உணரும் ஒருவன் அத்தகைய இனிமையான சொற்களைச் சொல்லாமல் அவற்றிற்கு மாறாக உள்ள கடுஞ்சொற்களைப் பிறரிடம் வழங்குவது என்ன காரணம் கருதியோ? 99

10.இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

நன்மையைத் தரத்தக்க இனிமையான சொற்கள் இயல்பிலேயே அமைந்திருக்க, அத்தகைய சொற்களைக் கூறாது, தீமையைத் தரத்தக்க இனிமையல்லாத சொற்களைக் கூறுதல் நன்றாகப் பழுத்த பழம் கையிலே இருக்க அவற்றை விடுத்து, மரத்திலே உள்ள காயினைப் பறித்துத் தின்பதற்கு ஒப்பாகும்.

இன்னாத-துன்பத்தைத் தரத்தக்க; கவர்தல்-பறித்தல்; அற்று - அப்படிப்பட்டது.

இனிய கனிகள் என்பதற்கு ஒளவையுண்ட நெல்லிக் கனி போல் உண்டாரை நீண்ட நாள் வாழச் செய்யும் அமிழ்த மயமான கனிகள் என்றும், இன்னாத காய்கள் என்பதற்கு உண்டவரைக் கொல்லும் எட்டிக் காய் போன்ற நஞ்சான காய்கள் என்றும் கூறலாம். 100

11. செய்ந்நன்றி அறிதல்


1. செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

தான் எத்தகைய உதவியும் முன்பு செய்யாமலிருக்கத் தனக்கு மற்றொருவன் செய்த உதவிக்குப் பதில் உதவியாக அவனுக்கு இந்த மண்ணுலகத்தையும், விண்ணுலகத்தையும் கொடுத்தாலும் அவன் செய்த உதவிக்கு அவை ஈடாக மாட்டா.

செய்ந்நன்றி அறிதல் - தனக்குப் பிறர் செய்த நன்மையை மறவாமை. 101

2.காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

ஒருவனுக்கு மிகவும் அவசியமான காலத்தில் பிறனொருவன் செய்த உதவியானது சிறியதாக இருந்தாலும் அவன் உதவி செய்த நேரத்தை நோக்கும் போது அச்சிறிய உதவி உலகத்தினும் மிகவும் பெரியது ஆகும்.

காலம்-(ஒருவனுக்கு மிகவும் இன்றியமையாத) சமயம்; ஞாலம்-பூமி; மாணப் பெரிது-மிகவும் பெரியது. 102

3.பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது.

இதைச் செய்தால் இன்ன பயன் நமக்குக் கிடைக்கும் என்ற பயனை ஆராய்ந்து பார்க்காமல் செய்த உதவியின் தன்மையை ஆராய்ந்து பார்த்தால், அவ்வுதவியினால், வரும் நன்மை கடலை விடப் பெரியது ஆகும்.

தூக்குதல்-ஆராய்ந்து பார்த்தல்; நயன்-நன்மை. 103

4.தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.

ஒருவன் தமக்குத் தினை அரிசி போன்ற மிகச் சிறிய அளவுள்ள நன்மையைச் செய்தான் எனினும் அந்த நன்மையினால் விளையத் தக்க பயனை அறிந்து கொள்ளத் தக்கவர் அதனைப் பனம் பழம் போன்ற பெரிய அளவுள்ள உதவியாகக் கொண்டு அவனைப் பெருமைப்படுத்துவர்.

தினை-தினை அரிசி; தினை, பனை - சிறுமைக்கும் பெருமைக்கும் எடுத்துக்காட்டுக்கள்; துணை-அளவு. 104

5.உதவி வரைத்தன்று உதவி; உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

ஒருவர் மற்றவருக்குச் செய்யும் உதவியை அவ்வுதவியின் அளவாகக் கருதுதல் கூடாது. அவ்வுதவியைப் பெற்றுக் கொண்டவருடைய தகுதியின் அளவையே அவ்வுதவியின் அளவாகக் கருதுதல் வேண்டும்.

வரைத்து-அளவுடையது; சால்பு- தகுதி, குணம். 105

6.மறவற்க மாசற்றார் கேண்மை; துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.

அறிவு ஒழுக்கங்களில் குற்றமற்றவருடைய நட்பினை மறவாமல் இருப்பாயாக. துன்பம் வந்த காலத்திலே உனக்கும் பேராதரவாய் இருந்தவரது நட்பை நீங்காமலிருப்பாயாக.

துறவற்க. நீங்காமலிருப்பாயாக; துப்பாயார்-பேராதரவாக இருப்பவர். 106

7.எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு.

தமக்குற்ற துன்பத்தை நீக்கியவருடைய நட்பினை ஏழு வகையாகத் தொடர்ந்து வரும் எல்லாப் பிறப்புக்களிலும் மறவாமல் நினைப்பர் நல்லோர்.

எழுமை எழு பிறப்பும்-ஏழுவகையாகத் தோன்றும் எல்லாப் பிறப்புக்களும்; விழுமம்-துன்பம். 107

8.நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

ஒருவர் செய்த உதவியை மறப்பது நல்ல குணம் அன்று. பிறர் செய்த தீமையை அப்பொழுதே மறந்து விடுவது நல்லதாகும். 108

9.கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.

முன்பு நமக்கு ஒரு நன்மையைச் செய்தவர் பிறகு நம்மைக் கொல்வதைப் போன்ற பெரிய துன்பங்களைச் செய்தாராயினும், முன்பு அவர் செய்த அந்த ஒரு நன்மையை நினைத்துப் பார்த்தால், பின்பு அவர் செய்த அந்தத் தீமைகளெல்லாம் தீமையில்லாதனவாக ஒழிந்துவிடும்.

கொன்றன்ன இன்னா - கொலை செய்தாலொத்த துன்பங்கள்; உள்ள-நினைத்துப் பார்க்க. 109

10.எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

எத்தகைய நற்செயல்களை அழித்துத் தீமைகள் செய்தவர்க்கும் அத்தீமைகளிலிருந்து தப்பிப் பிழைச்க வழி உண்டாகும். ஒருவர் செய்த உதவியை மறந்து, அவருக்குத் துன்பத்தைச் செய்தவனுக்கு அத்துன்பத்திலிருந்து தப்பிப் பிழைக்க வழியே இல்லை.

நன்றி கொன்றார்-நற்செயல்களை அழித்தவர்; உய்வு-தப்பிப் பிழைக்கும் வழி; மகற்கு-மகனுக்கு. 110

12. நடுவு நிலைமை


1.தகுதி எனஒன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.

வேண்டியவர், வேண்டாதவர், அயலார் ஆகிய மூவகையினரிடத்தும், ஒருவர் நடுவு நிலைமைக்குரிய முறைமையோடு இருந்து நடப்பதாக இருந்தால், நடுவு நிலைமை என்னும் அந்த ஒன்றே நன்மையைத் தரும்.

தகுதி-நடுவு நிலைமை; பகுதி-அயலார், நண்பர், பகைவர் என்னும் பாகுபாடு; பாற்பட்டு-முறைமையோடு, பொருந்தி; நடுவு நிலைமை- நண்பர், பகைவர், அயலார் எல்லாரிடத்தும் அறத்தில் வழுவாது ஒரே தன்மையாக நடத்தல். 111

2.செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து.

நடுவு நிலைமை உடையவனது செல்வம் மற்றவர் செல்வம் போல் அழிந்து போகாமல் அவன் சந்ததியாருக்கும் உறுதி தர வல்லது .

செப்பம்-நடுவு நிலைமை; எச்சம்-சந்ததி; சிதைவு-அழிவு; ஏமாப்பு- உறுதி. இன்பம். 112

3.நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்.

நடுவு நிலைமை தவறியதால் கிடைத்த செல்வம் தீங்கு செய்யாமல் நன்மையே தருவதாக இருந்தாலும் அது கிடைத்த அப்போதே அதனை ஒழிய விடுதல் வேண்டும். 113

4.தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்.

இவர் நடுவு நிலைமை உடையவர், இவர் நடுவு நிலைமை இல்லாதவர் என்பதனை அவரவருக்குப் பின் எஞ்சி நிற்கக் கூடிய புகழைக் கொண்டும், பழியைக் கொண்டும் தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.

தக்கார்-நடுவு நிலைமை உடையவர்; தகவிலர்-நடுவு நிலைமையில்லாதவர்; எச்சம்-மிகுந்து நிற்பது; இங்கே புகழ்ச்சி, இகழ்ச்சிகளைக் குறிக்கும்.'எச்சத்தாற் காணப்படும்'என்பதற்கு நன்மக்கள் உண்மையானும், இன்மையானும் அறியப்படும் என்று பொருள் கூறுவர். 114

5.கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க்கு அணி.

தாழ்வும், உயர்வும் ஒருவரது வாழ்வில் இல்லாதவை அல்ல; அவரவர் செய்த தீவினை, நல்வினைகளின் பயனாக அவை வந்தே தீரும். .ஆதலால், தாழ்வு வந்த போதும், வாழ்வு வந்த போதும் நடுவு நிலைமையிலிருந்து தவறாமல் இருத்தலே அறிவு ஒழுக்கங்கள் அமைந்த சான்றோர்கட்கு அழகாகும்.

கேடு-கெடுதி,தாழ்வு; பெருக்கம்-செல்வம், நல்ல, நிலை; கோடாமை- தவறாமை; அணி-அழகு, ஆபரணம். 115

6.கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுஒரீஇ அல்ல செயின்.

தன் மனம் நடுவு நிலைமையிலிருந்து நீங்கி, நடுவு நிலைமையல்லாத செயலைச் செய்ய நினைத்தாலும் "இதனால் நான் அழிந்து போவேன்" என்று ஒருவன் தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.

கெடுவல்-அழிந்து போவேன்; நடுஒரீஇ-நடுவு நிலைமையிலிருந்து தவறி. 116

7.கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

நடுவு நிலைமையிலே இருந்து நீதி நெறியிலே நிலைத்து நிற்பவனுக்கு, அதனால் கேடு வருவதாக இருந்தாலும் அந்தக் கெடுதலை உலகத்திலுள்ள பெரியோர்கள் கேடாகக் கொள்ள மாட்டார்கள். 117

8.சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.

துலாக்கோல் முதலில் தான் சமமாக இருந்து, பிறகு தன்னிடம் வைத்த பொருளின் எடையினைச் சமமாக அளந்து காட்டும். அது போல நடுவு நிலையைக் கடைப்பிடித்து ஒரு பக்கமாகச் சாயாமல் இருத்தல் அறிஞர்களுக்கு அழகாகும்.

சமன் செய்து-சமமாக இருந்து; சீர்தூக்கும்-அளவினைச் சரியாகக் காட்டும்; கோல்-துலாக்கோல், தராசு; ஒருபால் கோடாமை-ஒரு பக்கமாக இல்லாதிருத்தல். 118

9.சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.

நடுவு நிலைமையாவது சொல்லில் குற்றமில்லாமலிருப்பது. ஒருவரது உள்ளம் நடுவு நிலைமையில் உறுதியாக இருக்குமானால் சொல்லில் குற்றமில்லாத நடுவுநிலைமை ஏற்படும்.

சொற் கோட்டம்-சொல்லால் விளையும் குற்றம்; செப்பம்- நடுவு நிலைமை; ஒரு தலையா-உறுதியாக; உட்கோட்டம் இன்மை - மனத்தில் குற்றம் இல்லாமல் இருக்கும் தன்மை. இங்கே நடுவு நிலைமையைக் குறிக்கும். 119

10.வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.

வாணிகம் செய்பவர்கள் பிறர் பொருளையும் தம் பொருளைப் போலக் காப்பாற்றி வாணிகஞ் செய்வார்களேயானால், அவர்களுக்கு அதுவே சிறந்த வாணிகம் ஆகும்.

பிறவும் தம்போல்-பிறர் பொருளையும் தம் பொருளைப் போல். 120

13. அடக்கமுடைமை


1. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

அடக்கம் என்னும் குணம் ஒருவரைத் தேவர்களுள் ஒருவராகச் சேர்க்கும்; அடங்காமல் இருக்கும் குணம் ஒருவரை இருள் சூழ்ந்த இடத்தின் கண் கொண்டு போய்ச் சேர்க்கும்.

அடக்கம்-மனம், மொழி, உடல் முதலியவைகளால் அடங்கி இருத்தல்; ஆர் இருள்-இருள் நிறைந்த இடம், துன்பம் நிறைந்த இடம்; நரக லோகம் என்றும் கூறுவர்; உய்க்கும்-செலுத்தும். 121

2.காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங்கு இல்லை உயிர்க்கு.

அடக்கம் என்னும் குணத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு காப்பாற்ற வேண்டும். ஏனென்றால் அந்த அடக்கத்தை விடச் சிறந்த செல்வம் உயிருக்கு வேறொன்றும் இல்லை.

பொருள்-உறுதிப் பொருள்,அழியாத பொருள்; ஆக்கம்-செல்வம்; அதனின் ஊஉங்கு-அதைக் காட்டிலும். 122

3.செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.

அடக்கம் உடைமையே அறிவுடைமை என்று ஒருவன் நல்ல வழியில் அடங்கி நடப்பானானால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு, அவனுக்குச் சிறப்பைத் தரும். 123

4.நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.

இல்லற நெறியிலிருந்து மாறுபடாது அடங்கி நடப்போனுடைய உயர்ச்சி, மலையின் உயர்ச்சியிலும் மிகவும் பெரியதாகும்.

திரியாது அடங்குதல்-ஐம்பொறிகளும் நல்ல நிலையில் இருக்கத்தான் அவைகளின் வழியே தன் மனத்தைச் செலுத்திக் கேடு அடையாமல் அடங்கி இருத்தல்; தோற்றம்-உயர்வு; மாண-மிகவும். 124

5.எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.

பிறரிடத்துப் பணிவாக நடந்து கொள்ளுதல் பணக்காார், ஏழை முதலிய எல்லார்க்கும் நன்மையே தருவது, ஆனாலும் இந்தப் பணிவாக நடந்து கொள்ளும் குணம் செல்வமுடையவர்க்கே மேலும் ஒரு செல்வமாக இருக்கும் சிறப்பினை உடையது. 125

6.ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து.

ஆமை துன்பம் நேராமல் தன் தலை,கால்கள் ஆகியவைகளைத் தன் ஓட்டுக்குள் அடக்கிக் காத்துக் கொள்ளும். அது போல், ஒருவன் ஒரு பிறப்பிலே தன் ஐம்பொறிகளையும் பாவம் நேராமல் அடக்கத் தக்க வல்லமையுடையவனாக இருந்தால், அவ்வல்லமை அவனுக்கு ஏழு பிறப்புக்களிலேயும் உறுதியை அளிக்கும்.

ஒருமை-ஒரு பிறப்பு; எழுமை- ஏழு பிறப்பு; ஐந்து-ஐம்பொறிகள்; ஆற்றின்-வல்லவன் ஆயின்; ஏமாப்பு-உறுதி, பாதுகாப்பு. 126

7.யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

காக்க வேண்டிய பலவற்றையும் காத்துக் கொள்ளா விட்டாலும் நாவினால் வரும் குற்றத்தினையேனும் காத்து, நாவடக்கம் கொள்ளல் வேண்டும். ஒருவர் தம் நாவினைக் காக்கத் தவறுவாரானால், அவர் சொற்குற்றத்திற்கு உள்ளாகித் துன்புறுவர்.

யா- எவற்றை; சோகாப்பர்- துன்புறுவர்; இழுக்கு- குற்றம். 127

8. ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.

நல்ல சொற்களையே சொல்லும் பழக்கமுடைய ஒருவன் எப்போதேனும் ஒரே ஒரு தீமையான சொல் சொல்லுவானே யானாலும், அந்தத் தீமையான சொல்லினது பொருளின் பயனால், அவன் அதற்கு முன்பு சொல்லிய நல்ல சொற்களின் பயனும் நன்மையைத் தாராமல் போய் விடும். 128

9.தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.

நெருப்பிலே சுட்ட புண்ணின் வடு மேலே காணப்பட்டாலும், அப்புண் உள்ளே ஆறி விடும். ஆனால், ஒருவன் உள்ளம் வருந்தும்படி நாவினால் உரைத்த சொல்லால் ஏற்பட்ட மனப்புண் என்றும் ஆறாது நிலைத்து இருக்கும்.

நாவினால் சுடுதல்-கடுஞ்சொற்களைக் கூறி ஒருவன் மனத்தை வருந்த வைத்தல்; வடு-காயம். 129

10.கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

மனத்திலே கோபம் உண்டாகாதபடி காத்துக் கொண்டு, கற்க வேண்டிய நூல்களைக் கற்று, அடங்கி இருக்க வல்லவனை அடைதற்கு உரிய காலத்தை அறக் கடவுள் எதிர் பார்த்து இருக்கும்.

கதம்-கோபம்; செவ்வி-நேரம், காலம்; அறம்-தரும தேவதை, அறக் கடவுள்; ஆறு-வழி; நுழைந்து பார்த்தல்-கூர்ந்து பார்த்துக் கொண்டிருத்தல். 130

14. ஒழுக்கமுடைமை


1.ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

ஒழுக்கம் எல்லாருக்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அஃது உயிரினும் சிறந்ததாகப் பாதுகாக்கப்பட வேண்டும்.

ஒழுக்கம். அறிவிற் சிறந்தோர்களால் ஒப்புக் கொள்ளப் பட்ட நல்ல நடத்தை; விழுப்பம்-மேன்மை, சிறப்பு; ஓம்பப்படும்-பாதுகாக்கப்படும். 131

2.பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.

அறங்கள் பலவற்றையும் ஆராய்ந்து, அவற்றுள் இம்மையிலும், மறுமையிலும் துணையாக இருக்கக் கூடியது எது என்று போற்றித் தெரிந்தாலும், ஒழுக்கமே ஒருவர்க்குத் துணை என்பது தெரிய வரும். ஆதலால், அவ்வொழுக்கத்தையே போற்றிப் பாதுகாக்க வேண்டும். 132

3.ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.

ஒழுக்கம் உடைமையே ஒருவர் உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர் என்பதை அறிவிக்கும். ஒழுக்கத்திலிருந்து தவறுதல் அவரைத் தாழ்ந்த குடிப் பிறப்பாக ஆக்கி விடும்.

குடிமை-குடிப்பிறப்பு; இங்கே உயர்ந்த குடிப்பிறப்பைத் தெரிவிக்கும். இழிந்த பிறப்பு-இழிவாகக் கருதத்தக்க குடும்ப நிலை. 133

4.மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.

பார்ப்பான், தான் கற்ற மறைப்பொருளை மறந்து போனாலும், அவன் மறுபடியும் அதைக் கற்றுக் கொள்ள முடியும். ஆனால், அந்தப் பார்ப்பான் நல்லொழுக்கத்திலிருந்து தவறி விடுவானே ஆனால், மீண்டும் அவன் நல்ல குடிப்பிறப்பு உடையவனாக எவராலும் கருதப்பட மாட்டான்.

ஓத்து-மறை அல்லது வேதம்; பிறப்பொழுக்கம்-நல்ல குடும்பத்தில் பிறந்ததனால் உண்டாகிய நல்ல ஒழுக்கம். 134

5.அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு.

பொறாமை உடையவனிடத்தில் செல்வம் இல்லாமல் ஒழிந்து போவது போல், ஒழுக்கம் இல்லாதவனிடத்தில் உயர்வு இல்லாமல் போய் விடும். 135

6.ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.

ஒழுக்கத்திலிருந்து தவறுவதனாலே தமக்குக் குற்றம் உண்டாவதை அறிந்து, அறிவுடையோர் ஒழுக்கத்திலிருந்து தவறாமல், தம்மைக் காத்துக் கொள்வர்.

ஒல்குதல்-சுருங்குதல், குறைதல்; உரவோர்.அறிவுடையோர்; இழுக்கம்-தவறுதல்; ஏதம்-குற்றம்; படுபாக்கு- உண்டாதல். 136

7.ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.

நல்ல ஒழுக்கத்தினால் எவரும் மேன்மையை அடைவர்; அவ்வொழுக்கத்திலிருந்து தவறுவதால், அடையத் தகாத பெரிய பழியை அடைவர். 137

8.நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.

நல்ல ஒழுக்கம் இன்பமான இல்லற வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும். தீய ஒழுக்கம் பாவத்துக்குக் காரணமாக இருந்து, எப்போதும் துன்பத்தைத் தரும். 138 .

9.ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.

தீய சொற்களை மறந்தும் தம் வாயால் சொல்லுதல், நல்லொழுக்கமுடையவர்களுக்கு இயலாது. 139 .

10.உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.

உலகத்திலுள்ள உயர்ந்த குணமுடைய மக்களோடு சேர்ந்து ஒழுகுதலைக் கல்லாதவர், பல நூல்களைக் கற்றிருந்தும் அறியாதவர்களே ஆவர்.

உலகம்-உயர்ந்த குணமுடைய மக்கள்; ஒட்ட ஒழுகல் கல்லார்-சேர்ந்து பழக அறியாதவர். 140 ,

15. பிறனில் விழையாமை


1.பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.

பிறனுக்கு உரிமையாகிய மனைவியை விரும்பி வாழ்ந்து வரும் அறியாமைக் குணம் உலகத்தில் அறமும், பொருளும் ஆய்ந்து அறிந்தவரிடம் இல்லை.

பொருளாள்-பொருள் போல உரிமையானவள்; பெட்டு-விரும்பி; ஒழுகல்-நடத்தல்,வாழ்ந்து வருதல்; பேதைமை-அறியாமை; ஞாலம்-உலகம்; அறம் பொருள் கண்டார்-அறநூலையும், பொருள் நூலையும் ஆராய்ந்து அறிந்தவர். 141

2.அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரிற் பேதையார் இல்.

பிறன் மனைவியை விரும்பி, அவனுடைய வாயிலிற் சென்று, தன் எண்ணம் நிறைவேறுதலுக்குத் தக்க சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அறிவில்லாத ஒருவன், தீய செயல் செய்பவர்களுள் எல்லாம் மிக இழிந்தவனாகக் கருதப்படுவான்.

அறன் கடை நின்றார்-அறநெறியில் கீழானவராகக் கருதப்படுவர்; பிறன்கடை-பிறன் ஒருவன் வீட்டின் வாயில் புறம். 142

3.விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்தொழுகு வார்.

சந்தேகம் சிறிதும் இல்லாமல் தம்மை நிச்சயமாக நம்பியவருடைய மனைவியின் மீது இச்சை கொண்டு, தீய செயல்களைச் செய்து நடப்பவர், செத்தவரை விட வேறு பட்டவரல்லர்.

விளித்தார்-செத்தார்; மன்ற-நிச்சயமாக; தெளிந்தார்-நம்பினவர்; இல்-மனைவி. 143

4.எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.

ஒருவர் தினை அளவேனும் தம் பிழையை எண்ணிப் பார்க்காமல், பிறனுடைய மனைவியினிடம் செல்லுவாராயின் அவர் எவ்வளவு பெருமையுடையவராயினும் என்ன பயன்? (அவர் இழிவானவராகவே கருதப்படுவர்.) 144

5.எளிதென இல்லிறப்பான் எய்தும்எஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.

மிகவும் இலகுவான செயல் என்று எண்ணிப் பிறன் மனைவியிடம் முறைமை தவறி நடக்க முயலுபவன், எக்காலத்திலும் அழியாத பழியை அடைவான்.

இறப்பான்-(நீதி நெறியை) கடப்பவன்; எஞ்ஞான்றும்-எந்தக் காலத்திலும்; விளியாது-அழியாது. 145

6.பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.

பிறன் மனைவியினிடத்து நீதி முறை தவறி நடந்து கொள்பவனிடம் பகைமை, பாவம், அச்சம், பழி இந்த நான்கு குற்றங்களும் நீங்காமல் இருக்கும். 146

7.அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.

பிறனுக்கு உரிமையாக உள்ளவளின் பெண்மைக் குணத்தை விரும்பாதவனே, அறத்தின் இயல்போடு இல்வாழ்க்கையை நடத்துகிறவன் என்று சிறப்பித்துச் சொல்லுதற்குரியவன் ஆவான்.

அறன் இயல்-இல்லறத்தின் இயல்பு; பிறன் இயலாள்-பிறனுக்கு உரிமையானவள்; பெண்மை-பெண் தன்மை. 147

8.பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு.

பிறனுடைய மனைவியை விரும்பி, அவள் மீது தன் கருத்தைச் செலுத்தாத பெரிய ஆண் தன்மை, பல நற் குணங்களும் அமைந்த பெரியோர்களுக்கு அறநெறி மட்டுமன்று சிறந்த ஒழுக்கமுமாகும். 148

9.நலக்குரியார் யாரெெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.

அச்சத்தைக் தரத் தக்க கடலால் சூழப்பட்ட இவ்வுலகத்திலே, எல்லா நன்மைகளும் அடைவதற்குரியவர் எவர் என்றால், பிறருக்கு உரிமையானவளின் தோள்களைச் சேராதவரே ஆவர். 149

10.அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.

ஒருவன் இல்லற நெறிக்கு அடங்கி நடக்காமல், அறம் அல்லாத பாவச் செயல்கள் பலவற்றைச் செய்பவனாக இருந்தாலும், பிறனுக்கு உரியவனின் பெண்மைக் குணத்தை விரும்பாமல இருப்பது நன்று.

அறன் வரையான்-அறநெறியைத் தனக்கு உரிமையாகக் கொள்ளாதவனாய்; பிறன் வரையாள்-பிறனுக்கு உரியவள். 150

16. பொறையுடைமை


1.அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

நிலம் தன்னைத் தோண்டுவார் கீழே விழாமல் அவரைத் தாங்கிக் கொள்கிறது. அது போலத் தம்மை அவமதிப்போர் துன்புறாத வண்ணம், அவர்கள் செய்த தீமையைப் பொறுத்துக் கொள்வதே (அறநெறியில்) முதன்மையானது ஆகும்.

அகழ்வார்.தோண்டுபவர்; தலை-சிறந்தது, முதன்மையானது. 151

2.பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.

ஒருவன் அளவு கடந்த தகாத செயல்களைச் செய்யின், அதற்காகத் தாம் அவனைத் தண்டிக்க முடிந்த காலத்தும், அவன் மீது கோபம் கொள்ளாமல் அவன் செய்த குற்றத்தைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். அதனோடு நில்லாமல், அக்குற்றத்தை உடனே மறந்து விடுவது பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும் சிறந்தது. 152

3.இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.

ஒருவனுக்கு மிகவும் துன்பமான நிலை வறுமை நிலையேயாகும். அவ்வறுமை நிலையைக் காட்டிலும் இழிவாகக் கருதப்படுவது, அவன் தன்னை நாடி வந்த விருந்தினரைப் பாதுகாவாமல் நீக்குதலே ஆகும். அது போல, ஒருவனுக்கு அமைந்துள்ள பல சிறந்த குணங்களுள்ளும் சிறந்ததாகக் கருதப்படுவது அறிவிற் குறைந்தவர்கள் தனக்குப் புரியும் தீங்குகளைப் பொறுத்துக் கொள்ளுதலே யாகும். 153

4.நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்.

பல நல்ல குணங்களும் தம்மிடம் என்றும் நிலைத்து இருக்க வேண்டுமென்று ஒருவர் விரும்பினால், அவர் பொறுமையாக இருத்தல் என்னும் குணத்தினை மிகவும் பாதுகாப்போடு, கடைப்பிடித்து நடத்தல் வேண்டும்.

நிறையுடைமை-பல சிறந்த குணங்களும் நிரம்பப் பெற்று இருக்கும் தன்மை; நிறை-உள்ள உறுதியுமாம். 154

5.ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து.

தமக்குப் பிறர் செய்த தீமையைப் பொறுத்துக் கொள்ளாமல், அவரைத் தண்டிப்பவரை உலகத்தவர் சிறந்தவர்களுள் ஒருவராக மதிக்க மாட்டார்கள்: அவ்விதம் தண்டிக்காமல், அத்தீமையைப் பொறுத்துக் கொள்ளும் குணம் வாய்ந்தோரைப் பொன்னைப் போற்றிக் காப்பது போலத் தம் உள்ளத்தின்கண் வைத்துப் போற்றிப் பாதுகாப்பர்.

ஒறுத்தாரை-தண்டித்தவரை; ஒன்றாக-சிறந்தவர்களுள் ஒருவராக, ஒரு பொருளாக;: வையார்-மதிக்க மாட்டார்; பொதிந்து வைப்பர்-தம் உள்ளத்தின் கண் வைத்துப் பாதுகாப்பர். 155

6.ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்.

பிழை செய்த ஒருவனைத் தண்டித்தவருக்கு அந்த ஒரு நாள் மட்டும் இன்பம் உண்டாகலாம். அவ்விதம் தண்டிக்காமல், அவன் செய்த குற்றத்தைப் பொறுத்துக் கொள்ளும் குணமுடையவர்க்கு இவ்வுலகம் அழியும் வரையிலும் புகழ் நிலைத்து நிற்கும் 156

7.திறன்அல்ல தன்பிறர் செய்யினும் நோநொந்து
அறன்அல்ல செய்யாமை நன்று.

தகுதியில்லாத செயல்களைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அவருக்கு அதனால் நேரக்கூடிய துன்பத்திற்காக வருந்தி அறம் அல்லாத செயல்களைச் செய்யாதிருத்தல் நல்லது 157

8.மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.

செருக்கினால் தீய செயல்களைப் புரிந்தவர்க்கும் நன்மையே புரிந்து தம்முடைய பெருந்தன்மை என்னும் குணத்தினால் அவரை வென்று விடுதல் வேண்டும்.

மிகுதி-அளவிற்கு மேற்பட்ட செயல்; இங்கே செருக்கு என்னும் குணத்தினைக் குறிக்கும்; மிக்கவை-அளவுக்கு மீறியவை; தகுதி-சிறந்த குணம். 158

9.துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.

ஒழுங்கு முறையைக் கடந்து நடப்பவரின் வாயிலிருந்து வரும் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்ள வல்லவர் இல்லறத்தில் இருப்பவரேயாயினும், துறந்தாரைப் போல் தூய்மையுடையவராகவே கருதப்படுவர். 159

10.உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரிற் பின்.

உணவு கொள்ளுதலை வெறுத்து விரதங்கள் பலப்பல ஆற்றி வாழ்பவர் பெரியாரே எனினும், பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்ளுதலை நோன்பாகக் கொண்டொழுகும் பெரியாருக்கு அடுத்த நிலையில்தான் இருக்க வேண்டியவராவார்.

‘உண்ணாது’ என்பதற்கு மாமிசம் முதலியவைகளை உட்கொள்ளாது என்றும் பொருள் கூறுவர். 160

17. அழுக்காறாமை


1.ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.

ஒருவன் தன் உள்ளத்தின் கண்ணே பொறாமை இல்லாமல் வாழத்தக்க நல்ல தன்மையைச் சிறந்த ஒழுக்கத்திற்குரிய வழியாகக் கொள்ளுதல் வேண்டும்.

ஒழுக்காறு-நல்லொழுக்கத்திற்கு உரிய சிறந்த வழி; அழுக்காறு-பொறாமை; இயல்பு-தன்மை. 161

2.விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.

யாராயிருப்பினும் அவரிடத்தில் பொறாமை கொள்ளும் குணம் இல்லாமையை ஒருவன் பெற்று இருப்பானேயானால், அவன் பெறுதற்குரிய சிறந்த செல்வங்களுள் அதற்கு ஒப்பாக இருப்பது வேறொன்றுமில்லை.

விழுப்பேறு-சிறந்த செல்வம்; யார்மாட்டும்-யாவரிடத்தும்; அன்மை-இல்லாதிருத்தல்; பெறின்-பெற்றிருந்தால். 162

3.அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன்ஆக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.

மறுமைக்கு வேண்டிய அறச்செயலையும், இம்மைக்கு வேண்டிய செல்வத்தையும் விரும்பாதவன் என்று எண்ணத் தக்கவனே மற்றவருடைய செல்வத்தைக் கண்டு மகிழாமல், பொறாமைப்படுவான்.

அழுக்கறுத்தல் - பொறாமைப்படுதல்; பேணாது-மகிழாமல் 163

4.அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.

தவறான வழியில் நடப்பதால் துன்பம் உண்டாதலை அறிந்து அறிவுடையோர் (தவறான வழியாகிய) பொறாமையினாலே அறச்செயல் அல்லாத தீய செயல்களைச் செய்யா.

அழுக்காறு-தவறான வழி; ஏதம்-துன்பம்; படுபாக்கு-படுதல், உண்டாதல். 164

5.அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன் பது.

பொறாமை உடைய ஒருவரைத் துன்புறுத்த அவரிடமுள்ள பொறாமைக் குணம் ஒன்றே போதும். பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும், பொறாமைக் குணம் தன்னை உடையவருக்குக் கேட்டினைத் தவறாது புரியும். 165

6.கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.

பிறருக்குக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப் படுகிறவனுடைய குடும்பமும், அக்குடும்பத்தைச் சார்ந்தவர்களும் உடுப்பதற்கு உடையும், உண்பதற்கு உணவும் இல்லாமல் அழிந்து ஒழிவர்.

சுற்றம்-ஒருவன் குடும்பமும், அக்குடும்பத்தைச் சார்ந்தவர்களாகிய ஏவலாளர், நண்பர், உறவினர் முதலிய அனைவரும்; உடுப்பது-உடுத்திக் கொள்ளத்தக்க உடை; உண்பது-உண்ணத்தக்க உணவு. 166

7.அவ்வித்து அழுக்கா றுடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.

பொறாமையுடைய ஒருவனிடத்துத் திருமகள் இருக்கப் பொறாள். ஆதலால், அவள் தனக்கு மூத்தாளாகிய மூதேவிக்கு அவனைக் காட்டித் தான் நீங்கி விடுவாள்.

அவ்வித்து- மனம் பொறாமல்; செய்யவள்-திருமகள்; தவ்வை-திருமகளுக்கு மூத்தவள் மூதேவி. 167

8.அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.

பொறாமை என்று சொல்லப்படும் ஒப்பற்ற பாவி, தன்னை உடையானது செல்வத்தையெல்லாம் அழித்து, அவனைத் தீய வழியிலும் கொண்டு போய்ச் சேர்த்து விடும். 168

9.அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.

பொறாமையுள்ளம் உடையவனுக்கு நிரம்பச் செல்வமும், பொறாமை இல்லாத, நல்ல உள்ளம் வாய்ந்தவனுக்கு மிகவும் வறுமையும் அமையுமானால், அவை இரண்டும் இவ்விருவர் தம் எண்ணங்களாலேயே இல்லாமல் ஒழிந்து விடும்.

பொறாமையுடையவன் செல்வமுடையவனாய் இருப்பதற்கும், பொறாமை இல்லாதவன் வறுமையில் வாடுவதற்கும், அவரவர் முன் பிறப்பில் செய்த நல்வினை, தீவினைகளே காரணம் என்றும், 'நினைக்கப்படும்' என்பதற்குச் சான்றோரால் ஆராய்ந்து பார்க்கப்படும் என்றும் பொருள் கொள்வர்.

அவ்விய நெஞ்சம்-பொறாமை உள்ளம்; செவ்வியான்-(பொறாமை யில்லாத) சிறந்த குணம் வாய்ந்தவன்; நினைக்க-அறிவினால் எண்ணிப் பார்க்க; படும்-இல்லாமல் அழியும்; பொறாமையால் செல்வம் அழியும். பொறாமை இல்லாத மனத் துாய்மையால் வறுமை அழியும். 169

10.அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதில்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.

பிறருடைய உயர்வினைக் கண்டு பொறாமைப்பட்டுப் பெரியோராக விளங்கிப் பெருமையை அடைந்தவர் இவ்வுலகில் ஒருவரும் இலர். அவ்விதமே அப்பொறாமைக் குணம் இல்லாத நல்ல உள்ளம் வாய்ந்தவர் எவரும் மேன்மையடைவதிலிருந்து, நீங்கியவரும் இலர்.

அழுக்கற்று - பொறாமைப்பட்டு; அகன்றார் - பெருமையை அடைந்தவர்; பெருக்கத்தில்-மேம்பாடு அடைவதில்; தீர்ந்தார்-நீங்கி இருந்தவர். 170

18. வெஃகாமை


1.நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.

அறநெறி வழுவாது தொகுத்த நல்ல பொருளை நடு நிலைமை இல்லாமல் ஒருவன் அபகரிக்க விரும்பினால், அவனுடைய குடும்பம் அழிவதோடு, அவனுக்குத் தீங்கும் வந்து சேரும்.

நடு-நடு நிலைமை; நன் பொருள்-நியாய வழியாகத் தொகுத்த பொருள்; வெஃகின்-அடைய ஆசைப்பட்டால்; குடி- குடும்பம்; பொன்றி- அழிந்து. 171

2.படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.

நடு நிலைமை அல்லாத செயலைச் செய்ய :நாணும் குணமுடையவர் பிறர் பொருளைக் கவர்வதால் வரும் பயனை விரும்பிப் பழியைத் தரும் செயல்களைச் செய்ய மாட்டார்.

படுபயன்-பெறக்கூடிய நன்மை; பழிப்படுவ-பழியைத் தரத் தக்க செயல்கள்; நடுவன்மை - நடுநிலையற்ற தன்மை. 172

3.சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.

அறநெறியால் அடையத் தக்க அழியாத இன்பத்தை விரும்புகின்றவர்கள், அழிந்து போகத் தக்க உலக இன்பத்திற்காக ஆசைப்பட்டு நியாயமில்லாதவற்றைச் செய்யமாட்டார்.

சிற்றின்பம்-(அழிந்து போகத் தக்க) சிறிய இன்பம், உலக இன்பம்; மற்றின்பம் - மற்றதாகிய அழியாத பேரின்பம். 173

4.இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.

ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி பெற்ற குற்றமற்ற அறிவினை உடையவர், தம்மிடத்தில் ஒரு பொருள் இல்லை என்ற காரணத்தால் அதனை நியாயமற்ற முறையில் பெறுவதற்கு விரும்ப மாட்டார்.

இல - இல்லாதவராக இருக்கின்றோம்; புலன்-ஐம்புலன்; புன்மை-குற்றம்; காட்சி- அறிவு. 174

5.அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.

எத்தகையவரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாத செயல்களை ஒருவன் செய்வானேயானால், அவனுடைய கூர்மையும், விசாலமும் பொருந்திய அறிவினால் என்ன பயன்?

அஃகி- கூர்மையுடையதாகி; அகன்ற அறிவு-(பல நூல்களையும் கற்றதால் உண்டான) விரிந்த அறிவு. 175

6.அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.

கருணையை விரும்பி அதைப் பெறுதற்குரிய நன்னெறியில் ஒழுகுகின்றவன், பிறனுடைய பொருளை விரும்பித் தீய செயல்களைச் செய்ய எண்ண, அதனால் தன் அருட்குணத்தை இழப்பான். 176

7.வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.

பிறர் பொருளை விரும்பிக் கவர்ந்து கொள்ளுதலினாலே உண்டாகும் செல்வத்தை விரும்பாது இருக்க வேண்டும். ஏனென்றால் அது பயன்படும் போது அப்பயன் நமக்கு நல்லதாக இருப்பது அரிது.

ஆம்-ஆகின்ற; விளைவயின்-பயன்படும் காலம்; ஆம்பயன்- ஆகும் பயன்; மாண்டதற்கு-மாட்சிமைப்படுதற்கு; அரிது- அருமையுடையது; நல்லதாக இருப்பது அரிது. 177

8.அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.

ஒருவன் செல்வம் சுருங்காமலிருப்பதற்கு வழி எதுவென்றால் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலே ஆகும். 178

9.அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் துஆங்கே திரு.

அறம் இது என்று தெரிந்து, பிறர் பொருளை இச்சிக்காத அறிவுடையாரிடம் திருமகள் தானே-தகுதி அறிந்து போய்ச் சேர்வாள். 179

10.இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு.

பின் விளைவதை எண்ணாமல், பிறர் பொருளை விரும்பினால் அவ்விருப்பம் ஒருவனுக்கு அழிவைத் தரும்..அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருந்தன்மை வெற்றியைத் தரும். 180

19. புறங்கூறாமை


1.அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது.

ஒருவன் அறநெறியைப் படிக்காதவனாய், அறம் அல்லாத பாவச் செயலையே செய்து வருவானாயினும், அவன் மற்றவனைப் பற்றிப் புறங் கூறாமல் இருக்கின்றான் என்று பிறரால் சொல்லப்படுவது நல்லது.

புறங்கூறல்-பிறரை மறைவில் இகழ்ந்து கூறுதல். 181

2.அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.

ஒருவனை அவன் இல்லாத இடத்தில் பழித்துக் கூறி, அவனை நேரில் கண்ட போது பொய்யாக நகை செய்தல், அறன் என்பதே ஒன்று இல்லை என்று கூறி, அறம் அல்லாத பாவத் தொழிலைச் செய்தலினும் தீமையைப் பயப்பதாகும்.

அழீஇ-அழித்து; இங்கு மறுத்துரைத்து என்னும் பொருளில் வந்துள்ளது; புறன்-(புறத்தே), காணாத இடத்தில்; அழீஇ-இகழ்ந்துரைத்து; பொய்த்து நகை-பொய்யாகச் சிரித்தல. 182

3.புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும்.

ஒருவனைக் காணாத போது இழிவாகக் கூறி, அவனைக் கண்ட போது பொய்யாகப் புகழ்ந்துரைத்து உயிர் வாழ்வதைக் காட்டிலும் இறந்து போதல் அற நுால்களில் புகழ்ந்து கூறப்படும் நல்வினைப் பயனை அளிக்கும். 183

4.கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்இன்று பின்நோக்காச் சொல்.

ஒருவன் முகத்திற்கு எதிரே நின்று சிறிதும் தாட்சண்யமில்லாமல் கடுஞ்சொற்களைச் சொன்னாலும், அவனுக்கு முன்பாகப் பேசாமல் புறத்தே சென்று சொல்லும் பழிச் சொற்களைப் பேசாமல் இருத்தல் வேண்டும்.

கண்நின்று-கண்களுக்கு எதிரே நின்று; கண் அற-கண்ணோட்டம் இல்லாமல்; முன்இன்று-முகத்திற்கு எதிரே நின்று பேசாமல்; பின்நோக்காச் சொல்-பின்னால் நேரும் விளைவினைக் கருதாத சொற்கள்; அஃதாவது பழிச் சொற்கள். 184

5.அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையால் காணப் படும்.

நீதி நெறியைப் பிறருக்கு விளக்கிக் கூறத்தக்க நற்குணம் ஒருவனிடம் சிறிதும் இல்லாமையை அவன் பிறரைத் குறித்துப் புறம் கூறுகின்ற இழி குணத்தால் தெரிந்து கொள்ளலாம். 185

6.பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்.

பிறன் குற்றத்தை அவன் இல்லாத போது பிறரிடம் கூறுகின்ற பழக்கமுடைய ஒருவன், தன் குற்றத்தையும் அவ்வாறு பிறர் கூறுவார்களே என்பதை அறிந்து கூறுதல் வேண்டும்.

தன்பழி உள்ளும்-தான் புரிந்த தீமைகளையும்; திறன் தெரிந்து-பிறர் தன்னைப் போல் புறம் கூறுவார்களே என்பதைப் பகுத்தறிந்து. 186

7.பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.

பிறர் மகிழும் வண்ணம் இனிய சொற்களைச் சொல்லி நட்புக் கொள்ளுதல் சிறந்தது என்பதை அறியாதவர், தம்மை விட்டு நீங்கும்படியாகப் புறங் கூறி நண்பரையும் பிரித்து விடுவர். 187

8.துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.

நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் தூற்றும் பழக்கமுடையவர், பழகாத அயலாரிடத்து உள்ள குற்றத்தை எப்படித் தூற்றாமலிருப்பர்? 188

9.அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறம்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை.

பிறர் எதிரில் இல்லாதது கண்டு புறங் கூறுவோனுடைய உடலினது சுமையை, நிலமானது இத்தனை கொடியோனையும் தாங்கிக் கொண்டிருத்தலே தனக்கு அறம் என எண்ணிப் பொறுத்துக் கொண்டு இருக்கிறது போலும்.

அறம் நோக்கி - அறநூல்களில் கூறியுள்ள பெருமையை எண்ணிப் பார்த்து; ஆற்றுங்கொல் -பொறுத்துக் கொண்டிருக்கிறது போலும்; பொறை - பாரம், உடற்சுமை. 189

10.ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு?

அயலாருடைய குற்றத்தைக் காண்பது போலப் புறம் கூறுவார் ஒருவர், தம் குற்றத்தையும் காண வல்லவரானால் நிலை பெற்ற உயிர் வாழ்க்கைக்கு என்ன துன்பம் நேர்ந்துவிடும்? (சிறிதும் துன்பம் இராது). 190

20. பயனில சொல்லாமை


1.பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.

அறிவுடையார் பலரும் கேட்டு வெறுக்கும்படி பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன் எல்லாராலும் வெறுக்கப்படுவான்.

பயனில சொல்லுதல்-கேட்டார்க்கும், தனக்கும் நல்ல பயனைத் தராத சொற்களைச் சொல்லுதல். 191

2.பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலின் தீது.

பயனில்லாத சொற்களை அறிவிற் சிறந்த பெரியோர்கள் முன்பு சொல்லுதல், விரும்பத்தகாத செயல்களைத் தன் நண்பர்களிடத்தில் செய்தலைவிடத் தீமையுடையதாகும். 192

3.நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.

பயன் சிறிதும் இல்லாதவைகளைக் குறித்து ஒருவன் விரிவாக உரைத்துக் கொண்டிருப்பானாயின், அவன் விரும்பத் தகாதவன் என்பதை அவ்வுரையே தெரிவித்து விடும். 193

4.நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து.

பயனற்றதும், நல்ல தன்மையற்றதும் ஆகிய சொற்களை ஒருவன் பலரிடமும் சொல்லுவானானால், அவன் சொற்கள் சிறப்பில்லாதனவாய் அவனை நன்மையிலிருந்து நீக்கி விடும்.

நயன்-சிறப்பு, அறநெறியுமாம்; பண்பில் சொல்-நல்ல தன்மையில்லாத சொற்கள். 194

5.சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.

பயனற்ற சொற்களை நற்குணமுடையவர் கூறுவாராயின், அவருடைய பெருமை அவருக்குரிய மதிப்போடு நீங்கி விடும். 195

6.பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி எனல்.

பயனில்லாத சொற்களைப் பல முறையும் சொல்லுகின்ற ஒருவனை மக்களுள் ஒருவன் என்று சொல்லுதல் கூடாது. மக்களுள் பதர் என்று சொல்லுதல் வேண்டும். பாராட்டுதல் - பல முறை சொல்லுதல்; பதடி - பதர். 196

7.நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.

கல்வி அறிவு ஒழுக்கங்களால் நிறைந்தோர் இனிமையில்லாத சொற்களைச் சொல்ல வேண்டியிருப்பினும் சொல்லக் கடவர். ஆனால், பயனில்லாத சொற்களை அவர் சொல்லாதிருத்தல் நன்மையாகும். சான்றோர் - நற்குணம் பலவும் அமைந்த பெரியோர்; நயன் இல - இனிமையல்லாத சொற்கள். 197

8.அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.

அறிதற்கரிய பொருள்களை ஆராயும் அறிவினையுடையவர் மிகவும் பயன் உடையன அல்லாத சொற்களை ஒரு போதும் சொல்ல மாட்டார். 198

9.பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.

மயக்கத்திலிருந்து தெளிந்த குற்றமற்ற அறிவினையுடையவர்கள், பயனற்ற சொற்களை ஒருகால் மறந்தும் சொல்ல மாட்டார்கள்.

பொச்சாந்தும் - மறந்தும்; மருள் . மயக்கம்; மாசறு -குற்றம் நீங்கிய; காட்சி - அறிவு. 199

10.சொல்லுக சொல்லின் பயனுடைய சொல்லற்க
சொல்லின் பயனிலாச் சொல்.

சொற்களில் பயனுடைய சொற்களை மட்டும் நாம் சொல்லுதல் வேண்டும். பயனற்ற சொற்களைச் சொல்லுதல் கூடாது. 200

21. தீவினையச்சம்


1.தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.

தீவினை செய்தலாகிய அகந்தையான செயலைச் செய்வதற்கு, முன்பே தீய செயல்களைச் செய்து பழகிய பாவிகள் அஞ்ச மாட்டார்கள்; ஆனால் நற்குண சீலர்கள் அஞ்சுவார்கள்.

விழுமியார்-சிறந்த குணம் வாய்ந்த நல்லோர். 201

2.தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.

தீய செயல்கள் (நன்மையைச் சிறிதும் விளைவிக்காமல்) தீமையையே விளைவிப்பனவாய் இருத்தலால், அச் செயல்கள் தீயைப் பார்க்கிலும் கொடியன எனக் கருதி அஞ்சுதல் வேண்டும். 202

3.அறிவினுள் எல்லாம் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.

தம்மைத் துன்பப்படுத்துவோருக்கும் தீமையானவற்றைச் செய்யாதிருத்தல் அறிவோடு செய்யும் செயல்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது ஆகும் என்று அறிஞர் கூறுவர்.

செறுவார்க்கும்-தமக்குத் தீமையைச் செய்பவர்க்கும். 203

4.மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.

பிறனுக்குத் தீமையை விளைவிக்கும் செயலை ஒருவன் தன்னை அறியாமலும் செய்ய எண்ணுதல் கூடாது.

அவ்வாறு எண்ணினால், அறக் கடவுள் அவனுக்குக் கெடுதியை உண்டாக்கும் செயலை எண்ணுவர்.

மறந்தும்-தன்னை அறியாமலும்; சூழற்க-எண்ணாதிருக்க;; அறம்-தரும தேவதை, அறக் கடவுள். 204

5.இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து.

தன்னிடம் பொருள் இல்லை என்று எண்ணி ஒருவன் தீய வினைகளைச் செய்தல் கூடாது. அவ்வாறு அவன் செய்வானானால், அதனால் அவன் பொருள் உடையவன் ஆகாமல் மறுபடியும் ஏழையாகவே ஆவான்.

இலன்-பொருள் இல்லாதவன்; பெயர்த்து-மறுபடியும். 205

6.தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.

துன்பத்தைச் செய்யும் தீவினைகள் தன்னைத் துன்புறுத்தலை விரும்பாதவன், தான் பிறர்க்குத் தீமையான செயல்களைச் செய்யாதிருத்தல் வேண்டும்.

தீப்பால - தீமையான பகுதிகள்,தீயவைகள்; நோய்ப்பால-துன்பம் செய்யும் பகுதிகள், பாவங்கள்; அடல்-துன்புறுத்தல். 206

7.எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.

எத்தகைய பகைமையினையுடையாரும் அப்பகையிலிருந்து தப்பிப் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால், தீவினையாகிய பகையோ ஒருவனை நீங்காது தொடர்ந்து சென்று வருத்தும். 207

8.தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று.

நிழல் ஒருவனை விடாமல் தொடர்ந்து வந்து அவன் அடியில் தங்கியிருத்தல் போன்று, தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல் நிச்சயம்.

அடி உறைந்தற்று-அடியில் வந்து தங்கியிருத்தல் போன்றத. 208

9.தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.

ஒருவன் தன்னிடத்தில் அன்புடையவன் ஆயின், தீவினைப் பகுதியான செயல்களுள் ஒரு சிறிதும் பிறர்க்குச் செய்யாது ஒழிவானாக. 209

10.அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.

ஒருவன் தவறான வழியிற் சென்று, தீய செயலினைச் செய்யாதிருப்பானேயானால், அவன் சிறிதும் துன்பம் இல்லாதவன் என்று அறிக. 210

அருங்கேடன்-கேடு அற்றவன்; மருங்கு-பக்கம்.

22. ஒப்புரவறிதல்


1.கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு.

நீரினைப் பொழிந்து உயிர்களைக் காப்பாற்றுகின்ற மேகக் கூட்டங்களுக்கு இவ்வுலகத்தில் உள்ள உயிர்கள் என்ன பிரதி உபகாரம் செய்கின்றன? ஒன்றும் இல்லை. ஆதலால், அம்மேகத்தைப் போன்றவர்கள் புரியும் உதவிகளும், பிரதி உபகாரங்களை எதிர்நோக்குவன அல்ல.

ஒப்புரவு-உலக நடையினை அறிந்து அதற்கேற்ற வண்ணம் செய்தல்; அஃதாவது ஒருவருக்கொருவர் பிரதி உதவியை எதிர்பாராமல் உதவி செய்து வாழ்தல்.

கைம்மாறு- ஒருவர் செய்த உதவிக்குப் பதில் உதவி; கடப்பாடு- ஒப்புரவு; மாரி-மேகம், மழை; ஆற்றும்-செய்யும். 211

2.தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.

ஒருவன் பல வகையிலும் முயற்சி செய்து சேர்க்கும் பொருள்கள் எல்லாம் தகுதியுடையவர்களுக்கு உதவி செய்தற் பொருட்டே ஆகும்.

தாள் ஆற்றி-முயற்சி செய்து; வேளாண்மை-உபகாரம். 212

3.புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.

பிறருக்கு உதவி செய்து வாழ்தலாகிய ஒப்புரவு என்னும் செயலே எல்லா நல்ல செயல்களிலும் சிறந்தது. இதைப் போன்ற வேறொரு நல்ல செயலை இந்த உலகத்திலும், தேவருலகத்திலும் பெறுதல் அரிது.

புத்தேள் உலகம்-தேவர் உலகம்; ஈண்டு - இவ்வுலகம். 213

4.ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.

உலக நடையை அறிந்து உபகாரஞ் செய்பவன் உயிரோடு இருந்து வாழ்பவனாக மதிக்கப்படுவான். அவ்விதம் ஒழுகாதவன் உயிர் உடையவனாக இருந்தும், இறந்தவர்களுள் ஒருவனாகவே கருதப்படுவான்.

ஒத்தது அறிதல்-உலக நடையை அறிந்து உதவி வாழ்தல். 214

5.ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.

உலக இயல்பு அறிந்து நடப்பதால் உலகத்தாரால் விரும்பப்படும் பேரறிவாளன் பெற்றுள்ள செல்வம், ஊரார் நீர் உண்ணுதற்கு இடமான குளம் நீரால் நிறைந்துள்ளதற்குச் சமம் ஆகும்.

ஊருணி-ஊரார் நீர் உண்ணுதற்கு இடமான குளம்; அவாம்- அவாவும், விரும்பும்; திரு-செல்வம். 215

6.பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.

உலகத்தவர்க்குப் பயன்படும் மரம் ஒன்று ஊரின் நடுவே பழங்களையும் உடையதாய் இருந்தால், அதனால் மக்களுக்குப் பெரிதும் நன்மை ஏற்படுவது போல், ஒப்புரவறிதலாகிய நற்குணம் வாய்ந்தவனிடம் செல்வம் சேர்ந்தால் அச்செல்வம் ஊரில் உள்ள பலருக்கும் பயன்படும்.

பயன் மரம்-மக்களுக்குப் பயன்படும் மரம்; நயன் உடையான்-ஒப்புரவறிதல் என்னும் நற்குணம் உடையவன். 216

7.மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.

ஒரு மரத்தின் வேர், அடி மரம், கிளை, இலை, பூ, காய், கனி முதலிய எல்லாப் பாகங்களும் மக்களுக்கு நோயை நிச்சயமாகத் தீர்ப்பதில் மருந்தாக இருந்து, அஃது ஊரின் பொது இடத்திலும் இருந்தால், எவ்விதம் பலர்க்கும் பயன்படுமோ அவ்விதமே ஒப்புரவறிதல் என்னும் குணம் வாய்ந்த பெருந்தகையாளனிடம் செல்வம் சேர்ந்தால் அச்செல்வம் பலருக்கும் பயன்படும். 217

8.இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.

தம் கடமையை அறிந்த அறிஞர்கள் பிறருக்கு உதவுவதற்கு வசதி இல்லாத காலத்திலும், பலருக்கு உதவி செய்வதற்குத் தளர மாட்டார்கள்.

இடனில் பருவம்-பிறருக்கு உதவுவதற்குரிய செல்வம் இல்லாத சமயம்; ஒல்கார்-உள்ளம் தளரார்; கடன்-கடமை. 218

9.நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.

பிறருக்கு உதவி செய்யும் நற்குணமுடையான் வறுமையடைதல் என்பது செய்ய வேண்டிய தன்மையில் உள்ள செயல்களைச் செய்ய முடியாமல் வருந்துகின்ற நிலைமையை அடைதலேயாகும்.

நல்கூர்ந்தான் ஆதல்-வறுமை அடைந்தவனாக இருத்தல்; செயும் நீர -செய்ய வேண்டிய தன்மையை உடையன; அமைகலா ஆறு- அமைய மாட்டாத இயல்பு. 219

10.ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.

பிறருக்கு உபகாரம் செய்தலினால் தனக்குத் துன்பம் வருமென்று யாரேனும் சொல்வார்களானால், அந்த உபகாரத்தைச் செய்வதற்காகத் தன்னைப் பிறருக்கு அடிமைப்படுத்தியேனும், அந்த உபகாரச் செயலை மேற்கொள்ளுதல் தகுதியுடையதாகும்.

பிறருக்கு உபகாரம் செய்தலில் எத்தகைய துன்பம் நேர்ந்தாலும், அதனைப் பொருட்படுத்தாது செய்தல் வேண்டும். அதுவே இவ்வுலகத்தில் பிறந்ததன் பயனாம். 220

23. ஈகை


1.வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.

ஒரு பொருளும் இல்லாத ஏழையாகிய ஒருவருக்கு அவர் வேண்டிய பொருளைக் கொடுப்பதே ஈகையாகும். அவ்விதம் இல்லாத பிற கொடைகளெல்லாம் பிறிதொரு பயனை எதிர்பார்த்துக் கொடுப்பவைகளே.

வறியார் - ஒரு பொருளும் இல்லாதவர், ஏழை; ஈகை- உதவி: குறி யெதிர்ப்பு - பிறிதோர் பயனை எதிர்பார்த்துக் கொடுப்பது;: நீரது - தன்மையை உடையது.

குறிப்பு: ஒப்புரவு என்பது பிறர் நம்மைக் கேளாமல் இருந்த போதும் நம்முடைய கடமையைச் செய்யும் உபகார குணம். ஈகை என்பது இல்லை என்று வந்து கேட்டவர்க்கு இரக்கங்கொண்டு உதவும் குணம். 221

2.நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.

பிறரிடமிருந்து ஒரு பொருளைப் பெறுதல் நன்மை விளைவதற்கு வழியாக இருந்தாலும், அது தீயதே ஆகும். பிறருக்கு உதவுவதால் மேலுலகம் இல்லை என்று கூறுவார் உளராயினும் கொடுப்பதே நல்லது. 222

3.இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே உள.

'நீ கேட்கும் பொருள் என்னிடத்தில் இல்லையே’ என்று தன் துன்ப நிலையைத் தெரிவிக்காமல் இருந்தாலும், எங்ஙனமேனும் கொடுத்துதவுங் குணமும் நல்ல குடும்பத்தில் பிறந்தானிடத்தில் உள்ள குணங்கள் ஆகும்.

'இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்' என்பதற்கு, 'யான் வறியவன்’ என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்குக் கொடுத்துதவும் குணம் என்றும் பொருள் கூறலாம். எவ்வம் - துன்ப நிலை; குலனுடையான் - நல்ல குடும்பத்தில் பிறந்தவன். 223

4.இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு.

நம்மிடம் வந்து ஒன்றைக் கேட்கும் ஒருவர், அப்பொருளைப் பெற்று இன்புறும் வரையிலும் நாம் அவருடைய நிலையைக் கண்டு இரக்கப்பட வேண்டியிருத்தலால் அது நமக்குத் துன்பத்தையே தருகின்றது. 224

5.ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.

பசித் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளும் வல்லமையே தவம் செய்வோரின் வல்லமையாகும். அவ்விதம் பசியாக இருப்போர்க்கு உணவையளித்து, அவர்தம் பசியை நீக்குகின்றவர் பசியை அடக்கும் வித்தையில் வல்ல தவசியினும் சிறந்தவர் ஆவர்.

பிறர் பசியை ஆற்றுகின்றவர் தம் பசியை ஆற்றிக் கொள்ளும் தவ முனிவரினும் சிறந்தவர் ஆவர் என்பது கருத்து. ஆற்றுவார்-தவம் செய்பவர்; ஆற்றல்-வல்லமை. 225

6.அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

வறியவர்களின் கொடிய பசியைப் பொருள் பெற்றவன் தீர்த்தல் வேண்டும். அவ்விதம் பசி தீர்த்தல், பொருளைப் பெற்றவன் அப்பொருளைப் பிற்காலத்தில் தனக்கு உதவும் படி சேமித்து வைக்கும் சேம நிதிக்குச் சமம். 226

7.பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.

தான் பெற்ற உணவைப் பலருக்கும் சமமாகப் பங்கிட்டுத் தந்து, உணவு கொள்ளும் பழக்கமுடையவனைப் பசி என்று கூறப்படும் கொடிய நோய் அணுகுதல் அரிது. 227

8.ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.

தாம் சேர்த்து வைத்துள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் மறைத்து வைத்திருந்து, முடிவில் இழந்து விடும் கன்னெஞ்சம் படைத்தவர்கள் பிறருக்குக் கொடுத்து, அதனால் அடையும் மகிழ்ச்சியினை அறிய மாட்டார்கள் போலும். 228

9.இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.

தமக்குள்ள பொருளை மேலும் அதிகரிக்கச் செய்வதற்காகத் தாமே தனித்தவராக இருந்து, பிறருக்குக் கொடுக்காமல் உணவு கொள்ளுதல் பிச்சை எடுப்பதைப் பார்க்கிலும் துன்பம் தருவதாகும். 229

10.சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.

இறப்பதைக் காட்டிலும் துன்பமானது வேறொன்றுமில்லை. எனினும், தம்மிடம் வந்து ஓர் எளியவன் ஒரு பொருளைக் கேட்க, அப்பொருளைத் தம்மால் கொடுக்க முடியாத போது இறத்தலும் இன்பமானதே ஆகும். 230

24. புகழ்


1.ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.

வறியவர்களுக்கு அவர்கள் வேண்டுவனவற்றைக் கொடுத்தல் வேண்டும்; அதனால் புகழ் உண்டாகும்படி வாழ வேண்டும். அவ்விதம் புகழ்பட வாழ்வதல்லது மக்கள் உயிர்க்குப் பயன் வேறொன்றும் இல்லை. 231

2.உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்.

வறுமையால் இரப்பவர்க்கு அவர் வேண்டிய பொருளைக் கொடுத்து உதவுகின்றவர் மேல் நிற்கும் புகழையே பேச்சில் வல்லவர்கள் எல்லாம் புகழ்ந்து பேசுகின்றார்கள்.

உரைப்பர் - பேச்சில் வல்லவர், புலவர்; பலவழிகளிலும் புகழ் பெறலாம் எனினும், கொடுப்பதால் உண்டாகும் புகழே சிறந்தது என்பது கருத்து. 232

3.ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்.

நிலையற்ற இந்த உலகத்திலே என்றும் அழியாமல் நிற்பது உயர்வு தங்கிய புகழே ஆகும். மற்றவை நிலைத்து நிற்க மாட்டா. 233

4.நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.

நிலவுலகத்தில் ஒருவன் என்றும் அழியாத பெரும் புகழைப் பெற்று விடுவானானால், தேவலோகத்தில் உள்ளவர்கள் அங்கே உள்ள தேவர்களைப் போற்றாமல் நிலவுலகத்தில் புகழ் பெற்றுள்ள ஒருவனையே போற்றிப் புகழ்வார்கள்.

நிலவரை-நிலவுலகம்; நீள் புகழ்-அழியாத பெரும் புகழ்: புலவர்- தேவர்: புத்தேள் உலகு-தேவலோகம். 234

5.நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.

அறிவுடையோர் துன்பம் அடைந்த காலத்திலும், செல்வம் பெற்றவர் போல் வளர்ச்சி பெற்றே விளங்குவர். அவர் இறந்த போது புகழுடம்பு தாங்கி என்றும் இறவாமல் இருப்பார். இத்தகைய தன்மையை மற்றவர்கள் அடைய முடியாது.

நத்தம்-வளர்ச்சி, ஆக்கம்; சாக்காடு-இறப்பு; உளதாகும் சாக்காடு-இறந்தும் இறவாமல் இருப்பது. 235

6.தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

உலகத்தில் பிறந்தால் பிறர் புகழ்ந்து பேசுதற்குரிய சிறப்போடு பிறத்தல் வேண்டும். அவ்விதம் பிறந்து சிறந்து விளங்க இயலாதவர்கள், இவ்வுலகில் பிறக்காமலே இருந்திருந்தால் நலமாக இருக்கும்.

ஓர் இடத்துக்குச் சென்றால் பலரும் புகழும்படியான தன்மையில் செல்லுதல் வேண்டும். தம்மைப் பலரும் இகழும் வகையில் செல்லுதலை விட அவ்விடத்திற்குச் செல்லாமல் இருத்தலே நலம்;என்றும் பொருள் கொள்ளுவர். 236

7.புகழ்பட வாழாதார் தம்நோவார் தம்மை
இகழ்வாரை நோவ தெவன்?

தமக்குப் புகழ் உண்டாகும்படி வாழ முடியாதவர் தம்மைத் தாம் நொந்து கொள்ளாமல் தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்வதால் என்ன பயன்? 237 .

8.வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசைஎன்னும்
எச்சம் பெறாஅ விடின்.

தாம் இறந்த பின்னரும் எஞ்சி நிற்பதாகிய புகழைப் பெறா விட்டால் உலகத்தில் பிறந்த எத்தகையோர்க்கும் அஃது ஒரு பெரிய இகழ்ச்சியாகும் என்று அறிஞர் கூறுவர். 238

.

9.வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.

புகழில்லாத உடம்பைச் சுமந்த நிலமானது குற்றமற்ற வளப்பத்தையுடைய விளைச்சல் இல்லாமல் குன்றி விடும். 239

10.வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.

தம்மைப் பிறர் இகழாமல் வாழக் கூடியவரே இவ்வுலகில் உயிரோடு வாழ்பவர் ஆவர். புகழைப் பெறாமல் உயிர் வாழ்கின்றவர்களை வாழாதவர் என்றே சொல்லுதல் வேண்டும். 240

</div