திருக்குறள், இனிய எளிய உரை/4. ஊழ் இயல்


ஊழ் இயல்

38. ஊழ்


1.ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி.

கைப்பொருள் உண்டாவதற்குக் காரணமான ஊழ்வினையால் சோம்பலின்மை உண்டாகும். கைப்பொருள் அழிவதற்குக் காரணமாகிய ஊழ்வினையால் சோம்பல் ஏற்படும்.

ஆகூழ்-பொருள் ஆதற்குரிய ஊழ்; ஊழ்-முறை, நியதி, ஒழுங்கு, விதி, தெய்வம்; அசைவு-சோம்பல்; அசைவின்மை-சோம்பலின்மை; மடி-சோம்பல். 371

2.பேதைப் படுக்கும் இழவூழ்; அறிவகற்றும்
ஆகலுாழ் உற்றக் கடை.

பொருள் இழப்பதற்குக் காரணமான ஊழானது வரின், அவ்வூழ் ஒருவனுக்கு நல்ல அறிவு இருந்தாலும், அந்த அறிவை மறைத்து அறியாமையையே கொடுக்கும். பொருள் ஆதற்குக் காரணமான ஊழானது வரின், அஃது அவன் அறிவு சுருங்கி இருந்தாலும், அவ்வறிவினை அதிகரிக்கச் செய்யும்.

பேதைப் படுக்கும்-அறியாமையில் செலுத்தும்; அறிவு அகற்றும்- அறிவை விரிவாக்கும். 372

3.நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும்.

நுட்பமான நூல்கள் பலவற்றையும் ஒருவன் கற்றானாயினும், அவனுக்கு நுட்பமான அறிவு உடனே உண்டாகி விடாது. அவனுக்கு ஊழினால் இயல்பாக இருக்கின்ற அறிவிற்குத் தக்கபடியே அந்த நுண்ணிய நால்களால் ஆகிய அறிவும் வெளிப்பட்டுத் தோன்றும். 373

4.இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு.

இவ்வுலகத்தின் தன்மை இரண்டு வகைப்படும். செல்வமுடையவராக இருப்பவர் ஒரு பகுதியினர். அறிவுடையோராக இருப்பவர் மற்றொரு பகுதியினர். அதற்குக் காரணம் அவரவர் செய்த ஊழே ஆகும். 374

5.நல்லவை எல்லாஅம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.

செல்வத்தைத் திரட்ட ஒருவன் முயலும் போது போகூழ் இருப்பின், நல்லவையெல்லாம் கெட்டவைகளாம். ஆகூழ் இருப்பின், கெட்டவையெல்லாம் நல்லவைகளாம்.

நல்லவை-காலம், இடம், கருவி, தொழில் முதலியன நல்லவையாக இருத்தல். 375

6.பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.

விதியின் காரணமாகத் தமக்கு உரியன அல்லாதவற்றை வருந்திக் காப்பாற்றினாலும், அவை நில்லாமல் போய் விடும். விதியின் காரணமாகத் தமக்குரியவைகளைப் புறத்தே கொண்டு போய் எறிந்தாலும் அவை அகல மாட்டா.

பரியினும்-வருந்திக் காப்பினும்; பாலல்ல-விதியின் காரணமாகத் தமக்கு உரியன அல்லாதவை; உய்த்து-கொண்டு போய்; தம- தம்முடையவை. 376

7.வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.

தெய்வத்தால் வகுக்கப்பட்டுள்ள வகைப்படியே எதையும் அனுபவிக்க முடியுமே யொழியக் கோடிக்கணக்தான பொருள்களை வருந்திச் சேர்த்தவருக்கும் அதற்கு மேலாக அனுபவிக்க முடியாது. 377

8.துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியும் எனின்.

வறுமையினால் அனுபவிக்கத் தக்க பொருளில்லாதவர்களும், ஊழினால் அவர்கள் அடைய வேண்டிய இன்பங்களை அனுபவித்தே தீர வேண்டும். அங்ஙனம் அனுபவிப்பதால், அவர்கள் துறவறத்தை மேற்கொள்ள விரும்பினாலும் மேற்கொள்ள இயலாதவர்களாயுள்ளனர். விதி அங்ஙனம் அவர்களை இன்பத்தை அனுபவிக்கச் செய்யாது ஒழிந்தால் அவர்களால் துறவறத்தை மேற்கொள்ள முடியும்.

மேற் குறளில் எல்லாமுடைய பெருஞ் செல்வனும் விதியிருந்தாலொழிய, அவற்றை அனுபவித்தல் இயலாது என்றார்; அதனால் ஒன்றுமற்ற ஏழையும் விதியினால், பலவகை இன்பங்களைை அடைய முடியும் என்று கூறுகின்றார்.

துப்புரவு - அனுபவித்தற்குரிய பொருள்; உறற்பால-அடைய வேண்டுவன; ஊட்டா - அடையச் செய்யாது. 378

9.நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லல் படுவ தெவன்?

நன்மை விளையும் போது நல்லவை எனக் கருதி மகிழ்கின்றவர்,. தீமை விளையும் போது துன்பப்பட்டுக் கலங்குவது ஏன்? 379

10.ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்.

விதியைக் காட்டிலும் வலிமை உடையவை வேறு எவை இவ்வுலகின் கண் உள்ளன. அந்த விதியை விலக்குவதற்காக வேறு ஒரு வழியினை நாம் ஆராய்ந்தாலும், அங்கே அந்த விதியே முன் வந்து நிற்கும். (ஊழ் அம்முயற்சி பயன்படாமல் தடுக்கும் என்பதாம்) 380

அறத்துப்பால் முற்றிற்று.

</div