திருக்குறள், இனிய எளிய உரை/3. துறவற வியல்துறவறவியல்

25. அருளுடைமை'


1.அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.

பல வகைப்பட்ட செல்வங்களுள்ளும் அருளுடைமை என்னும் இரக்க குணமே சிறந்த செல்வம் ஆகும். அதுவே உயர்ந்தோர்களிடத்தே காணப்படும் செல்வம். பொருளால் வரும் செல்வங்கள் சாதாரண மக்களிடத்தும் காணப்படும்.

பூரியார்-பொதுமக்கள், கீழ்மக்கள் என்றும் பொருள் கொள்ளலாம். 241

2.நல்லாற்றால் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை.

உயிர்களுக்குக் கருணை காட்டும் குணத்தினை நல்ல வழியிலே தேடி அடைந்து கடைப் பிடித்தல் வேண்டும். பலப்பல வகையாலும் ஆராய்ந்து பார்த்தாலும் அவ்வருட் குணமே உயிருக்குத் துணை என்பது தெரிய வருகின்றது .

நல்லாறு_நல்ல வழி;பல்லாற்றல்.பல வழிகளாலும். 242

3.அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை. இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.

கருணை நிறைந்த உள்ளம் உடையவர்களுக்கு மயக்கத்தைத் தரக் கூடிய துன்பம் நிறைந்த உலக வாழ்க்கையில் புகுந்து உழலும் நிலை இல்லை.

இருள்-மயக்கம், அறியாமையுமாம்; இன்னா உலகம்-துன்ப வாழ்க்கையோடு கூடிய உலகம். நரகம் என்றும் கூறுவர். 243

4.மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.

பிற உயிர்களைக் காப்பாற்றி அருட் குணத்தினை வளர்த்து வருகின்ற ஒருவர்க்குத் தம் உயிர் அஞ்சக் கூடிய செயல் எதுவும் இல்லை.

மன்னுயிர் - உலகத்திலே நிலையாக இருந்து வரும் சீவராசிகள்; ஓம்பி-பாதுகாத்து. 244

5.அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி.

அருட்குணம் கை வரப் பெற்றவர்கட்குத் துன்பம் எந்தக் காலத்திலும் இல்லை. காற்று இயங்குகின்ற வளப்பம் பொருந்திய இந்தப் பெரிய உலகத்திலே வாழும் மக்களே அதற்குச் சான்று.

வளி-காற்று; வழங்குதல் - உலாவுதல்; மல்லல்-வளப்பம்; மா-பெரிய; ஞாலம்-உலகம், மக்கள்; கரி- சான்று, சாட்சி. 245

6.பொருள்நீங்கிப் பொச்சார்ந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.

கருணை சிறிதும் இன்றிக் கொடுமையான செயல்களைச் செய்து உயிர் வாழ்கின்றவர்கள், தாம் அடைய எண்ணிய பொருள்களை இழந்தவர்களாவார்கள். மேலும், அவர்கள் தாம் அடைய எண்ணிய நன்மைகளையும், மறந்தவரே ஆவர்.

பொருள்-செல்வம், அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களுமாம்; பொச்சாத்தல்-மறந்திருத்தல்; அல்லவை -கொடிய செயல்கள். 246

7.அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளிலார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

பொருள் இல்லாதவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையில்இன்பம் இல்லாதது போல், இரக்க குணம் சிறிதும் இல்லாதவர்களுக்கு மேலுலகத்து இன்பம் இல்லை.

அவ்வுலகம்-மேலுலகம்; வீட்டுலகம். 247

8.பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.

கையில் பொருள் இல்லாதவர்கள் என்றைக்கேனும் ஒரு நாளில் பொருளைப் பெற்றுச் சிறப்புறுதல் கூடும். அருளில்லாதவர்களோ அழிந்தவரே ஆவர்.அவர்கள் மறுபடியும் அந்த அழிவு நிலையிலிருந்து உயர்வு பெறுதல் அரிது. 248

9.தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.

கருணை சிறிதும் இல்லாதவன் செய்யும் அறச் செயல்களை ஆராய்ந்து பார்த்தால், அவை உள்ளத் தெளிவில்லாதவன் உண்மைப் பொருளாகிய இறைவனைக் காண முயலுவதற்குச் சமமே ஆகும்.

தெருளாதான்-மனத் தெளிவில்லாதவன்; மெய்ப் பொருள்- உண்மைப் பொருள், பரம்பொருள். 249

10.வலியார்முன் தன்னை நினைக்கத்தான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து.

அருளில்லாதவன் தன்னினும் எளியவர்களைத் துன்புறுத்தப் புகும் போது, தன்னினும் வலியவர்கள் தன்னை வருத்தும் காலத்துத்தான் அஞ்சி இருக்கும் நிலையை நினைத்தல் வேண்டும். 250

26. புலால் மறுத்தல்


1.தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்?

தன் உடம்பை வளர்ப்பதற்காக, மற்றோர் உயிரின் உடம்பைத் தின்பவன் பிற உயிர்களிடத்து எவ்விதம் அருள் உடையவனாய் இருக்க முடியும்?

ஊன்-மாமிசம், இங்கே உடலைக் குறிக்கும். 251

2.பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.

பொருளைக் கருத்துடன் சேமித்து வையாதவர் பொருளால் அடையக் கூடிய பயனை இழந்து விடுவர். அது போல ஓர் உடலைத் தின்பவர் அருளால் அடையக் கூடிய பயனை இழந்து விடுவர். 252

3.படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.

கொலைக் கருவியைக் கையில் கொண்டிருப்பவர் மனம் கொலை செய்தலிலேயே செல்லும். நன்மையான செயலைச் செய்வதற்கு அவர் மனம் இடங் கொடாது. அது போல, பிற உயிர்களின் ஊனை உண்டு சுவை கண்டவர்கள், அந்த உயிரின் உடலை உண்டு சுவைக்க விரும்புவார்களே அல்லாமல், அவ்வுயிரின் மீது கருணை காட்ட எண்ண மாட்டார்கள்.

படை-கொலைத் தொழில் புரியும் ஆயுதம்; நன்று ஊக்காது-நன்மையான செயலைச் செய்ய இடந் தராது. 253

4.அருளல்லது யாதெனில் கொல்லாமை கோறல்
பொருளல்லது அவ்வூன் தினல்.

அருள் என்பது எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமல் இருத்தல். அருள் அல்லாதது எது என்றால், பிற உயிர்களைக் கொல்லுதல். ஆதலால், கொல்லுதலோடு நிற்காமல் கொல்லப்பட்ட உயிரின் ஊனினையும் தின்னுதல் அறம் ஆகாது.

கோறல்-கொல்லுதல்; பொருள்-அறமாகிய பொருள். 'அருள் யாதெனில் கொல்லாமை, அல்லது யாதெனில் கோறல்’ எனப் பிரித்துக் கொள்க. இத்தொடருக்கு 'இரக்க குணம் இல்லாமை எது என்றால் கொல்லாமை என்னும் குணத்தை அழித்தலே ஆகும்' என்றும் பொருள் கொள்ளலாம். 254

5.உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.

உயிர்கள் உடம்போடு வாழ்கின்ற தன்மை ஊன் உண்ணாமையாகிய செயலினாலேயே நிலைத்து இருக்கின்றது. ஆதலால், புலால் மறுத்தலை விரதமாகக் கொண்டவனுடைய உயிரை உண்பதற்கு நரகமானது வாய் திறந்து நிற்காது. அண்ணாத்தல்- வாய் திறந்திருத்தல்; அளறு-நரக லோகம். 'ஊன் உண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு' என்னும் தொடருக்கு, 'ஒருவன் ஊன் உண்டால், அவனை விழுங்கிய நரகம் பின் அவனை வெளியே உமிழ்தற்குத் தன் வாயினைத் திறவாது' என்றும் பொருள் கொள்ளலாம். 255

6.தினற்பொருட்டால் கொல்லாது உலகினின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்.

ஊன் தின்பதற்காக உயிர்கள் கொல்லப்படுகின்றன. உண்பவர் விலை கொடுப்பதால், ஊன் விற்கப்படுகிறது. புலால் தின்பதற்காக உலகத்தவர்கள் உயிர்களைக் கொல்லாதிருப்பார்களானால், ஊனை விலைக்கு விற்பவர்களும் இல்லாமற் போய் விடுவர்.

தினல்-தின்னுதல்; உலகு-உலகத்திலுள்ள மக்கள்; விலைப் பொருட்டால் ஊன் தருவார்-இறைச்சி விற்பவர். 256

7.உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்.

புலால் என்பது பிற உயிர்களின் உடம்பில் உள்ள புண்ணேயாகும். புண் என்ற உண்மையை அறியும் அறிவுடையவர்கள் அதனை உண்ணாமல் விலக்குதல் வேண்டும்.

உண்மையுணரும் அறிவில்லாதவரே புலால் உண்பர் என்பதாம். 257

8.செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

குற்றமற்ற அறிவினை உடையவர்கள் தம்மாலோ பிறராலோ கொல்லப்படாமல் இயற்கையிலேயே உயிர் பிரிந்த உடலாக இருந்தாலும், அந்த ஊனையும் உண்ண மாட்டார்கள்.

செயிர்-குற்றம்; தலைப்பிரிந்த-நீங்கிய; காட்சி-அறிவு. 258

9.அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று.

நெய் முதலிய பொருள்களைத் தீயிற் பெய்து ஆயிரம் வேள்விகள் செய்வதைக் காட்டிலும் ஓர் உயிரினைக் கொன்று அதன் மாமிசத்தைத் தின்னாமல் இருத்தல் நல்லது.

அவி-வேள்வி செய்யும் போது யாகத்தீயில் இடும் இறைச்சி முதலிய பொருள்கள்; வேட்டல்-வேள்வி செய்தல்-யாகம் செய்தல்; செகுத்து-கொன்று. 259

10.கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.

ஓர் உயிரையும் கொல்லாமலும், பிறரால் கொல்லப் படாமல் தானே இறந்த உயிரின் உடலாய் இருப்பினும், அதனையும் தின்னாமலும் இருக்கின்ற ஒருவனை, எல்லா உயிர்களும் கை குவித்து வணங்கும். 260

27. தவம்


1.உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.

தனக்கு நேர்ந்த துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளுதலும், பிற உயிர்கட்குத் துன்பம் செய்யா திருத்தலும் ஆகிய அவ்வளவே தவத்தின் வடிவம்.

உற்ற-நேர்ந்த; நோன்றல்-பொறுத்துக் கொள்ளுதல்; உறுகண்-துன்பம்; உரு-வடிவம். 261

2.தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை
அஃதிலார் மேற்கொள் வது.

தவம் செய்தல் என்பது எல்லாராலும் இயல்வது அன்று முன்பு நல்வினைகள் செய்துள்ளவர்களுக்கே அஃது இயலும். மற்றவர்கள் அதனை மேற்கொள்வது வீணேயாகும்.

தவமுடையார்-நல்வினைகள் செய்து பண்பட்டவர்; அவம்-வீண் செயல். 262

3.துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்.

துறந்தவர்களுக்கு உண்டி, உடை முதலியன தந்து காப்பாற்றுவதற்காகத் துறந்தவர் அல்லாத இல்லறத்தார் தவம் செய்வதை மறந்தார்கள் போலும்.

துறந்தார்-வீடு, நிலம், மனைவி, மக்கள் முதலியவைகளை விட்டு நீங்கியவர், துப்புரவு-பாதுகாப்பு. 263

4.ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.

தாம் நினைத்தால் தமக்குத் தீமை செய்யும் பகைவரை அழித்தலும், நமக்கு நன்மை செய்வோரை உயர்த்தலும் ஆகிய ஆற்றல் தவம் செய்வோர்கு அத்தவத்தால் வரும்.

ஒன்னார்-பகைவர்; தெறல்-கெடுத்தல், அழித்தல்; உவந்தார்-தம்மால் விருப்பப்பட்டவர்; ஆக்கல் -உயர்த்துதல், 264

5.வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.

ஒருவர் தவத்தின் வல்லமையால் தாம் விரும்பியவைகளையெல்லாம் விரும்பியவாறே அடைதலால், செய்யக் கூடிய தவத்தை இந்தப் பிறவியிலேயே செய்தல் வேண்டும். 265

6.தவம்செய்வார் தம்கருமம் செய்வார்மற் றல்லார்
அவம்செய்வார் ஆசையுள் பட்டு.

தவம் செய்பவர்களே தம்முடைய கடமைகளைச் செய்பவர் ஆவர். அவ்விதம் தவம் செய்யாதவர் அவ்வாசை வலையுட் பட்டுத் தமக்குப் பயன்படாத வீண் செயலைச் செய்கின்றவரே ஆவர். 266

7.சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

புடத்தில் இட்டுச் சுடச் சுடப் பொன்னானது ஒளி மிகுந்து விளங்கும். அது போலத் துன்பம் மேன்மேலும் வருத்துவதைப் பொருட்படுத்தாது, தவம் செய்வோர்கட்கு மெய்யுணர்வு ஒளியுடன் விளங்கும். 267

8.தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாம் தொழும்.

தன் உயிரையே தான் என்று எண்ணும் சுயநல எண்ணம் முற்றிலும் நீங்கப் பெற்றவனை, இந்த உலகத்திலுள்ள உயிர்களெல்லாம் அவன் பெருமை அறிந்து வணங்கும்.

“நான்’ என்ற ஆணவம் அழிந்தவனை உலகத்தார் போற்றுவர் என்பதாம். 268

9.கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.

தவம் செய்வதால் வரும் வல்லமையால் சிறந்தவர்கட்கு எமனை வெல்லுவதும் இயலும்.

கூற்றம் - எமன்; குதித்தல் - கடத்தல் அல்லது வெல்லுதல்; நோற்றலின் ஆற்றல் - தவத்தால் வரும் வல்லமை. 269

10.இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.

உலகத்தில் வாழ்க்கை நலன்களைப் (பெற்றிருப்பவர் சிலராக,) பெறாதவர் பலராக இருப்பதற்குக் காரணம் என்னவென்றால், தவம் செய்கின்றவர் சிலராகவும், தவம் செய்யாதவர் பலராகவும் இருத்தலே ஆகும்.

இலர்-வாழ்க்கை நலன்களைப் பெறாதவர்; நோலாதவர் - தவம் செய்யாதவர். 270

28. கூடா ஒழுக்கம்


1.வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.

வஞ்சகம் பொருந்திய மனம் உடையவனது பொய்யொழுக்கத்தைக் கண்டு, அவனுடைய உடம்பில் கலந்து நிற்கின்ற ஐந்து பூதங்களும் தமக்குள்ளே சிரித்துக் கொள்ளும்.

வஞ்சம்-கபடம், பொய்; படிற்றொழுக்கம் - பொய்யான ஒழுக்கம்; பூதங்கள் ஐந்தாவன : நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம். நகும் -சிரித்துக் கொள்ளும். 271

2.வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின்.

குற்றமெனத் தன் நெஞ்சு அறிந்த ஒரு செயலை ஒருவன் செய்வானேயானால், அவனுக்கு ஆகாயத்தை அளாவிய தோற்றம் அமைந்திருந்தாலும், அதனால் என்ன பயன்? சிறிதும் இல்லை. 272

3.வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

ஐம்புலன்களையும் அடக்கி ஆளும் மன வலிமை இல்லாத ஒருவன், தவ வேடமாகிய வலிமை பொருந்திய உருவத்தைத் தாங்கி நிற்பது, வலிமையில்லாத பசுவானது வலிமையுடைய புலித் தோலைப் போர்த்து கொண்டு, பயிரை மேய்தலுக்குச் சமமாகும்.

வலியில் நிலைமை-மனவலியற்ற நிலை; வல்லுருவம்- காண்போர் அஞ்சத் தக்க உருவம், இங்கே தவ வேடம்; பெற்றம் - பசு. 273

4. தவம்மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.

தீய எண்ணங்களையுடைய ஒருவன் தவக் கோலத்தில் மறைந்து நின்று தவ ஒழுக்கத்திற்கு மாறான செயல்களைச் செய்வது, வேடன் ஒருவன் ஒரு புதரிலே மறைந்து நின்று பறவைகளைப் பிடித்தலுக்குச் சமம் ஆகும். 274

5.பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றெறு(ன்)
ஏதம் பலவும் தரும்.

ஆசைகளையெல்லாம் அறவே ஒழித்து விட்டோம் என்று சொல்லிக் கொண்டு தகாத காரியங்களில் ஈடுபடுபவர்களுடைய பொய்யொழுக்கம், பின்னர் அவர்களே, "நாம் என்ன தவறு செய்து விட்டோம்" என்று எண்ணி எண்ணி வருந்தும்படியான துன்பங்களைத் தரும்.

பற்று-உலக ஆசை; எற்று எற்று என்று - என்ன தவறு செய்தோம், என்ன தவறு செய்தோம் என்று. 275

6.நெஞ்சில் துறவார் துறந்தாற்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.

உலக ஆசையினை உள்ளத்திலிருந்து ஒழிக்காதவராய், முற்றும் துறந்தவர் போல் நடித்து மக்களை ஏமாற்றி வாழ்கின்றவரைப் போன்ற கொடியவர் இவ்வுலகில் இலர். 276

7.புறம்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியார் உடைத்து.

வெளி வேடத்தில் செம்மை நிறம் வாய்ந்த குன்றிமணியைப் போல் செம்மையுடையோராகத் தோன்றினாராயினும், உள்ளத்தில் அந்தக் குன்றிமணியின் மூக்கில் உள்ள கருமைமைப் போன்ற கெட்ட எண்ணங் கொண்டவர்களை யும் உடையது இவ்வுலகம். 277

8.மனத்தது மாசாக மாண்டார் நீர்ஆடி
மறைந்தொழுகும் மாந்தர் பலர்.

மனத்தில் நிறைந்திருப்பது குற்றமாக இருக்க, மேலுக்குத் தவ ஒழுக்கத்திற் சிறந்தவர் போல் நடித்துப் புண்ணிய தீர்த்தங்களில் முழுகித் தம் வெளித் தோற்றத்தில் மறைந்து நின்று உயிர் வாழும் மக்கள் இவ்வுலகில் பலராவர். 278

9.கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலால் கொளல்.

அம்பானது பார்ப்பதற்கு அழகாகத் தோன்றினாலும், கொடுமையான செயலைப் புரிகின்றது. யாழினது கொம்பு வளைந்து தோன்றினாலும், மக்களுக்கு இன்பத்தை தருவதில் சிறந்ததாக இருக்கிறது. அவ்விதமே மக்களுள்ளும் வேடங்களைப் பொருட்படுத்தாமல், அவர்களின் செயல்களைக் கண்டு அவர்கள் ஒழுக்கத்திற் சிறந்தவர்கள் அல்லது சிறவாதவர்கள் என்று தீர்மானித்தல் வேண்டும்.

யாழ்-வீணை போன்ற ஒரு வகை இசைக் கருவி; கோடு-கொம்பு; சென்னிது- சிறந்தது; வினைபடுபாலால்-செயல் வகையால் 279

10.மழித்தலும் நீட்டலும் வேண்டா, உலகம்
பழித்தது ஒழித்து விடின்.

பெரியோர்களால் வெறுக்கப்பட்ட தீய ஒழுக்கங்களை ஒருவன் முற்றிலும் நீக்கி விட்டால், தலைமயிரை அறவே நீக்கி மொட்டை அடித்துக் கொள்ளுதலும், சடையை நீட்டி வளர்த்துக் கொள்ளுதலும் ஆகிய வெளிவேடங்கள் அவருக்குச் சிறிதும் வேண்டியதில்லை. 280

29. கள்ளாமை


1.எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.

பிறர் தன்னை இகழாதிருக்க விரும்புகின்றவன் பிறரை வஞ்சித்து எத்தகைய பொருளையும் கவர்ந்து கொள்ளாமல் இருக்கத் தன் மனத்தைக் காத்துக் கொள்ள வேண்டும்.

கள்ளாமை-பிறருடைய பொருளை அவர் அறியாத வண்ணம் அபகரித்துக் கொள்ளாமை. 281

2.உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.

தகாத செயல்களை, மனத்தினாலே நினைப்பதும் குற்றமே ஆகும். ஆதலால், பிறருடைய பொருளைக் களவின் மூலம் அபகரித்துக் கொள்வோம் என்று நாம் மனத்தாலும் நினையாதிருத்தல் வேண்டும். 282

3.களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.

களவின் மூலம் வரும் செல்வம் முதலில் அளவு கடந்து பெருகுவது போல் தோன்றி, முடிவில் முதலிலிருந்த பொருளையும் அழித்துத் தானும் அழியும். 283

4.களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.

பிறர் பொருளை அபகரிக்க எண்ணும் எண்ணத்தினால் எழுந்த பேராசை அவ்வெண்ணத்தை நிறைவேற்றச் செயலில் ஈடுபடும் போது நீங்காத துன்பத்தைத் தரும்.

கன்றிய-மிகுந்த;விளைவின்கண்-செயலில் தோன்றும் போது; வீயா-அழியாத;விழுமம்.துன்பம். 284

5.அருள்கருதி அன்புடையார் ஆதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.

கருணையின் காரணமாக, எல்லா உயிர்களிடத்தும் அன்புடையோராயிருக்கும் குணம், பிறர் பொருளைக் கவர எண்ணிப் பொருளுடையவர் ஏமாறி இருக்கும் நேரத்தை எதிர்பார்த்து இருப்போரிடம் தோன்றாது.

பொச்சாப்பு-மறதி, ஏமாறி இருக்கும் தன்மை. 285

6.அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.

பிறர் பொருளைக் களவு செய்தலில் மிகுந்த ஆசையுடையவர்கள் நீதி நெறியின்படி அடங்கி நின்று வாழ. மாட்டார்கள்.

அளவு-நீதிநெறி; ஒழுகலாற்றா-வாழ மாட்டார் 286

7.களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல்.

நீதி நெறியில் நின்று வாழக் கூடிய வல்லமை உடையவர்களிடம் திருட்டுத்தனம் என்னும் அறியாமையோடு கூடிய, வல்லமை இல்லை.

கார் அறிவு-இருண்ட அறிவு, அறியாமை; ஆண்மை- ஆளும் தன்மை, வல்லமை. 287

8.அளவறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.

நீதி நெறிகளைஅறிந்து வாழ்கின்றவர் மனத்தில் அறச் செயல்கள் நீங்காமல் நிலை பெறும்.அது போலக் களவுச் செயலை அறிந்தவர் மனத்தில் வஞ்சனை நீங்காமல் நிலை பெறும். 288

9.அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.

களவுச் செயலைத் தவிரப் பிற நற்செயல்களைச் சிறிதும் அறிந்து தெளியாதவர், நியாயம் அல்லாதவற்றைச் செய்து அப்பொழுதே அழிந்து போவார். 289

10.கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை சுள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு.

திருட்டுத் தொழிலை மேற்கொண்டவர்களை உயிர் வாழ்வதற்கு இடமாகிய இவ்வுலகம் நீக்கி வைக்கும். திருட்டுத் தொழிலினை மேற்கொள்ளாதவர்களை வானுலகமும் விரும்பி வரவேற்கும்.

உயிர் நிலை-உயிர் வாழ்வதற்கு இடமாகிய இவ் வுலகம்; புத்தேளுலகு-தேவர்கள் வாழும் வானுலகம். 290

30. வாய்மை


1.வாய்மை எனப்படுவது யாதெனில் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.

மெய் என்று சிறப்பித்துச் சொல்லப்படுகிறது எதுவென்றால், மற்றவர்களுக்குத் தீங்கு ஒரு சிறிதும் தாராத சொற்களைச் சொல்லுவதே ஆகும்.

வாய்மை-மெய்ம்மை, உண்மை; தீமையில்லாத-தீங்கு விளைக்காத சொற்கள். 291

2.பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.

குற்றம் சிறிதும் இல்லாத நன்மையினைப் பிறருக்குத் தருமானால் பொய்யான சொற்களும், மெய்ம்மைச் சொற்களைப் போன்றவையே ஆகும்.

வாய்மையிடத்த-உண்மைக்குச் சமமானவை; புரை தீர்ந்த-குற்றம் நீங்கிய. 292

3.தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

ஒருவன் தன் மனம் நன்றாக அறிந்த ஒன்றை மறைத்து மாற்றிச் சொல்லுதல் கூடாது. அவ்விதம் மறைத்துச் சொன்னால் பிறகு அவன் மனமே அவனை வருத்திக் கொண்டிருக்கும். 293

4.உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.

ஒருவன் தன் மனச்சாட்சிக்கு ஏற்பப் பொய் சொல்லாது நடப்பானேயானால், அவன் உலகத்தாரின் உள்ளங்களிலெல்லாம் இருப்பவனாவான். 294

5.மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம் செய்வாரின் தலை.

தன் மனத்திற்கு மாறுபடாமல் ஒருவன் உண்மை பேசுவானேயானால், தவமும், தானமும் ஒருங்கே செய்வோரினும் அவன் சிறப்புடையவனாவான். 295

6.பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமும் தரும்.

பொய் பேசாமல் இருத்தலைப் போல ஒருவனுக்குப் புகழைத் தருவது வேறொன்றுமில்லை. அஃது அவனை வருந்தச் செய்யாமல், எல்லா அறங்களையும் அவனுக்கு அளிக்கும். 296

7.பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.

ஒருவன் பொய் பேசாதிருத்தலைத் தவறாமல் செய்து வருவானேயானால், அவன் பிற அறங்களைச் செய்ய வேண்டுவதே இல்லை.

பொய்யாமை (1)-பொய் பேசாமல் இருத்தல்; (2) பொய்யாமை- தவறாமை; “செய்யாமை, செய்யாமை’ - என்பது வற்புறுத்துவதற்கு அடுக்கி வந்தது. 297

8.புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.

உடம்பின் வெளிப்புறத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் நீரினால் உண்டாகும். அது போல உடம்பின் உட்புறமாகிய மனத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ளும் தன்மை உண்மை பேசுவதால் உண்டாகும். 298

9.எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.

ஒருவருடைய பெருமையைப் பலரும் அறிய விளக்கிக் காட்டும் ஒழுக்கம், அறிவு, கல்வி, செல்வம் முதலியன அவருடைய உண்மைச் சிறப்பினை விளக்கிக் காட்டுவன அல்ல; ஒழுக்கத்தால் சிறந்து விளங்கும் பெரியோர்களின் பெருமையைப் பலரும் அறிய விளக்கிக் காட்டும் பொய் பேசாமையாகிய நல்ல பண்பே அவர்களின் உண்மைச் சிறப்பினை விளக்கிக் காட்டுவதாகும்.

எல்லா விளக்கு-ஒருவனுடைய பெருமையினை விளக்கிக் காட்டும் எல்லா நற்பண்புகளும்; பொய்யா விளக்கு - பொய்யாமையாகிய (உண்மைச் சிறப்பினை) விளக்கிக் காட்டும் நல்ல பண்பு. 299

10.யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.

யாம் உண்மையாகக் கண்ட பொருள்களில் வாய்மையைக் காட்டிலும் எவ்வகையிலும் சிறந்ததாகக் கூறக் கூடிய பொருள் வேறு ஒன்றும் இல்லையாம். 300

31. வெகுளாமை


1.செல்லிடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என்? காவாக்கால் என்?

தன் சினம் பலிக்கும் இடத்து அந்தச் சினத்தை எழவொட்டாமல் தடுப்பவனே சினத்தைத் தடுத்தவனாவான். தன் கோபம் பலிக்காத இடத்தில், அவன் அக்கோபத்தை எழவொட்டாமல் தடுத்தால் என்ன? தடுக்காவிட்டால் என்ன?

செல்லிடம்-வயது, வலிவு, செல்வாக்கு முதலியவைகளால் தன்னினும் தாழ்ந்தோரிடம்; அல்லிடம்-அல்லாத இடம், தன்னிலும் பலமுடையவரிடம். 301

2.செல்லா இடத்துச் சினம்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற.

தன் கோபம் செல்லாத இடத்தில் கோபம் கொள்வது தனக்குத் தீங்கினை விளைவிக்கும். தன் கோபம் செல்லுகின்ற இடத்திலும் கோபம் கொள்வதைக் காட்டிலும் பெரிய தீங்கு வேறொன்றுமில்லை. 302

3.மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனால் வரும்.

தீமையான நிகழ்ச்சிகளெல்லாம் ஒருவனுக்குக் கோபத்தினாலேயே உண்டாகின்றன. ஆதலால், எத்தகையவரிடத்திலும் நாம் சினம் கொள்வதை மறந்து விடுதல் வேண்டும். 303

4.நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.

முகத்தில் தோன்றும் மலர்ச்சியையும், அகத்தில் தோன்றும் மகிழ்ச்சியையும் அழிக்கின்ற கோபத்தைக் காட்டிலும் வேறு பெரிய விரோதி ஒருவனுக்கு உண்டோ? இல்லை.

நகை-முகத்தின் கண் தோன்றும் மலர்ச்சி; உவகை-உள்ளத்தின்கண் தோன்றும் மகிழ்ச்சி; கொல்லுதல்- அழித்தல். 304

5. தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.

ஒருவன் தனக்குத் துன்பம் நேராமல் தன்னைத் தான் காத்துக் கொள்ள விரும்பினால் அவன் கோபத்தை அடக்கிக் கொள்ள வேண்டும். அவ்விதம் அவன் தன் கோபத்தை அடக்கிக் கொள்ளாவிட்டால், அந்தக் கோபமானது மற்றவர்களுக்குத் தீங்கு செய்வதை விடத் தனக்கே அழிவை உண்டாக்கும். 305

6.சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.

தன்னைச் சேர்ந்தவரை அழிக்கும் குணமுடைய சினமாகிய நெருப்பு, அவரை அழிப்பதோடு நில்லாமல், அவருக்குப் பாதுகாவலாக உள்ள நல்லினத்தவராகிய தெப்பத்தையும் அழித்துவிடும்.

சேர்ந்தாரைக் கொல்லி-நெருப்பு; ஏமம்-பாதுகாவல்; புணை-தெப்பம் 306

7.சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

தன் வலிமையைக் காட்டுவதற்குக் கோபத்தைக் கருவியாகக் கொண்டவன் கெடுவது, நிலத்தைத் தன் கையினால் ஓங்கி அறைந்தவனுடைய கை துன்புறுவது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாகும்.

பொருள்-இங்கே 'கருவி’ என்னும் பொருளில் வந்தது. பிழையாதற்று-(துன்புறுதல்) தவறாதது போன்றது. 307

8.இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.

பல சுடர்களோடு கூடிய பெரிய நெருப்புத் தொகுதி தன்னைச் சூழ்ந்து வருத்தும் துன்பத்தைப் போன்ற கொடிய துன்பங்களை ஒருவன் தனக்குச் செய்யினும், தன்னால் முடியுமானால் அவன் மீதும் கோபம் கொள்ளாதிருத்தலே நன்று. 308

9.உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.

ஒருவன் எந்தக் காலத்திலும் கோபத்தைத் தன்னுடைய மனத்தில் நினையாதவனாயிருந்தால், அவன் மனத்தில் எண்ணிய எல்லா நன்மைகளும் உடனே அவனை வந்து அடையும்.

உள்ளியது-எண்ணியது, அஃதாவது எண்ணிய நன்மைகள்; எய்தும்- அடையும்; உள்ளான்-நினைக்க மாட்டான். 309

10.இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.

அளவு கடந்த கோபத்தை உடையவர் உயிரோடு இருப்பவராயினும், இறந்தவரைப் போன்றவரே ஆவர். கோபத்தை அடியோடு ஒழித்து விட்டவர் எல்லாவற்றையும் அறவே துறந்த துறவிகளுக்குச் சமமாக இருப்பர்.

இறந்தார் (1)-அளவில் கடந்தவர்; இறந்தார் (2)-செத்தவர்; துறந்தார் (1)-ஒழித்தவர்; துறந்தார்(2)-துறவி. 310

32. இன்னா செய்யாமை


1.சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.

பிறருக்குத் துன்பத்தைத் தருவதால், சிறப்பைத் தரத்தக்க செல்வங்களைப் பெறுவதாக இருந்தாலும், அத்தகைய துன்பத்தைச் செய்யாமலிருப்பதே குற்றமற்ற பெரியோர்களது கொள்கை.

சிறப்பு ஈனும் செல்வம்-பெருமையைத் தரும் செல்வம்; மாசற்றார் - குற்றமற்றவர்கள்; கோள் - கொள்கை, துணிவு. 311

2.சுறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.

தம்மீது பகைமை கொண்டு ஒருவன் தமக்குத் துன்பம் பலவும் செய்த அந்த நேரத்திலும், அந்தத் துன்பங்கட்கு எதிராக அவனுக்குத் தீங்கு செய்யாமலிருத்தலே குற்றமற்ற பெரியோர்களது கொள்கையாகும்.

கறுத்து-கோபம் கொண்டு; செய்த அக்கண்ணும்- செய்த அந்த நேரத்திலும்; மறுத்து-பதிலாக. 312

3.செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமம் தரும்.

ஒருவன் ஒரு தீங்கும் செய்யாமலிருக்க, அவனைப் பகைத்து அவனுக்குப் பெருந் தீங்கினைச் செய்தவர்க்கும் அவன் கெடுதி செய்தால், அச்செயல் அவன் தப்ப முடியாத துன்பத்தை அவனுக்குத் தரும். 313

4.இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.

தனக்குத் தீங்கு செய்தவர்களைத் தண்டித்தலாவது தீங்கு செய்தவர்களே வெட்கித் தலை குனியும்படி அவர்களுக்கு நன்மை தரும் செயல்களைச் செய்து, அவர்கள் செய்த தீங்கினையும் தான் செய்த நன்மையினையும் மறந்து விடுவதே யாகும். 314

5.அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தன்நோய்போல் போற்றாக் கடை.

மற்ற உயிருக்கு நேர்ந்த துன்பத்தைத் தமக்கு நேர்ந்த துன்பம் போல் எண்ணி, அந்த உயிரைக் காப்பாற்றா விட்டால், ஒருவர் பெற்றுள்ள அறிவினால் உண்டாகக் கூடிய பயன் என்ன இருக்கிறது? 315

6.இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்.

இவை மக்களுக்குத் துன்பத்தைத் தருவன என்று அறிந்து கொண்ட எந்தச் செயல்களையும், ஒருவன் மற்றவனுக்குச் செய்யும் முயற்சியில் ஈடுபடாமல் இருத்தல் வேண்டும். 316

.

7.எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணா செய்யாமை தலை.

துன்பம் வரும் செயல்கள் எவ்வளவு சிறியனவாக இருப்பினும், அவற்றை எக்காலத்தும் எவருக்கும் மனத்தினாலும் செய்ய எண்ணாதிருத்தலே சிறந்ததாகும். 317

8.தன்னுயிர்க்கு இன்னாமை தான்அறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்.

பிறர் செய்யும் துன்பச் செயல்களால் தன்னுயிர்க்குத் தீங்கு விளைவதை உணர்கின்ற ஒருவன், மற்ற உயிர்க்குத் துன்பங்களைச் செய்தல் என்ன காரணமோ அறிகிலோம். 318

9.பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.

பிறருக்குத் துன்பம் தருவனவற்றை ஒருவர் ஒரு நாளின் முற்பகலில் செய்வாரேயானால், அவருக்குத் துன்பம் தருவன அன்று பிற்பகலில் பிறர் செய்யாமல், தாமே அவரை வந்து அடையும்.3 319

10.நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.

துன்பங்களெல்லாம் துன்பம் செய்தாரையே வந்து அடையும். ஆதலால், துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர்கள், பிறருக்குத் துன்பம் செய்யமாட்டார்கள். 320

33. கொல்லாமை


1.அறவினை யாதெனில் கொல்லாமை; கோறல்
பிறவினை எல்லாம் தரும்.

அறச்செயல் என்று சொல்லப்படுவது எதுவென்றால், அஃது ஓர் உயிரையும் கொல்லாமல் இருத்தலே ஆகும். கொல்லும் குணமோ அறம் அல்லாத பிற எல்லாத் தீய செயல்களையும் விளைவிக்கும். 321

2.பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

தான் ஈட்டிய உணவைப் பல உயிர்க்கும் பகுத்துக் கொடுத்து, மிகுந்ததைத் தானும் உண்டு அவ்வுயிர்களைக் காப்பாற்றுதல், நூலாசிரியர்கள் தொகுத்துக் கூறியுள்ள அறச் செயல்கள் எல்லாவற்றிலும் முதன்மையான அறச் செயல் ஆகும். 322

3.ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.

கொல்லாமை என்னும் ஓர் அறமே பிற அறங்கள் எல்லாவற்றிலும் சிறந்த ஒன்றாக இருக்கத் தக்க சிறப்பினையுடையது. பொய் சொல்லாமை அந்தக் கொல்லாமைக்கு அடுத்தபடி சிறந்த அறமாக நிற்கத் தக்க சிறப்பினையுடையது.

ஒன்றாக நல்லது-தனிச் சிறப்புடையது; பின்சார-அதற்குப் பின் சிறந்து நிற்க. 323

4.நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.

எல்லா அற நூல்களாலும் மிகவும் நல்ல வழி என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது எதுவென்றால், அஃது எத்தகைய உயிரையும் கொல்லாமலிருக்கக் கடைப்பிடிக்கும் நெறியே ஆகும். 324

5.நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.

இல்லற வாழ்வில் நேரும் துன்ப நிலைக்கு அஞ்சி அதை விட்டுத் துறவறதினை மேற்கொண்டவர்களைக் காட்டிலும், பிற உயிரைக் கொலை செய்வதற்கு அஞ்சி, எந்த உயிரையும் கொல்லாதிருக்கும் விரதத்தைக் கைக்கொண்டவனே சிறந்தவனாவான். 325

6.கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணும் கூற்று.

கொல்லாமையை விரதமாக மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாள் மேல், உயிரைக் கொண்டு செல்லும் எமன் தன் கருத்தைச் செலுத்த மாட்டான். 326

7.தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.

தன்னுயிர் போவதாயினும் ஒருவன் வேறொன்றன் இனிய உயிரைப் போக்கும் செயலைச் செய்தல் கூடாது. 327

8.நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை.

கொலைத் தொழிலைச் செய்வதால் உண்டாகும் செல்வம் மிகவும் பெரியதாக இருந்தாலும்,, அதனால் நன்மை விளைவதாய் இருந்தாலும், அக்கொலைத் தொழிலால் பெறப்படும் செல்வம், நற்குணங்கள் பலவும் அமைந்த சான்றோர்க்கு இழிவுடையதே ஆகும்.3 328

9.கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து.

கொலைத் தொழிலை உடையவராகிய மனிதர்கள், அத்தொழிலின் இழிவை உணர்ந்த நல்லோர் உள்ளத்தில் புலைத் தொழிலினராகத் தோன்றுவர்.

மாக்கள்.மனிதர்கள்; புலைவினையர். புலைத் தொழிலினர்; புன்மை-இழிவான தன்மை. 329

10.உயிருடம்பின் நீக்கியார் என்ப செயிருடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.

நோயோடு கூடிய உடம்புடன், நீங்காத தீய வாழ்க்கையை உடையவர்கள், முற்பிறப்பில் கொலை பல செய்து உயிர்களை உடம்பிலிருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர்.

செயிர்-குற்றம், இங்கே நோயினைக் குறிக்கும்; செல்லா-நீங்காத; தீ வாழ்க்கை-கொடிய வாழ்க்கை. 330

34. நிலையாமை


1.நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.

நிலையற்றவைகளை நிலையானவை என்று எண்ணும் சிற்றறிவினை உடையவராயிருத்தல், வாழ்வில் இழிவான நிலைமையாகும்.

நில்லாதவை- அழியக்கூடியவை; நிலையின்-அழியாமல் நிலைத்து நிற்பவை; புல்லறிவு-சிற்றறிவு; கடை-கீழ்ப்பட்ட நிலை. 331

2.கூத்தாட்டு அவைக்குழாத்தற்றே பெருஞ் செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.

ஒருவனுக்குப் பெரும் செல்வம் வந்து சேர்தல், கூத்தாடும் இடத்தில் திடும் என மக்கள் ஒன்றாகத் திரண்டு வருதலுக்குச் சமம் ஆகும். வந்த செல்வம் நீங்கிப் போவது கூத்து முடிந்ததும் அக்கூட்டம் உடனே கலைந்து போவதற்குச் சமம் ஆகும்.

கூத்தாட்டு அவை - கூத்துக்கள் ஆடும் நாடக சபை; குழாம்-கூட்டம்; போக்கு-நீங்கிப் போதல்; விளிதல்-கெடுதல், இங்கே கூட்டம் கலைந்து போதலைக் குறிக்கும். 332

3.அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.

செல்வமானது நிலைத்து நில்லாத இயல்பினை உடையது. ஆதலால், நாம் அதைப் பெற்றால், பெற்ற அப்போதே நிலையான அறச் செயல்களைச் செய்தல் வேண்டும்.

அற்கா-நிலையாத; அற்குப-நிலையான அறங்கள்; இயல்பிற்று-இயல்பை உடையது. 333

4.நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.

நாள் என்பது தன்னை ஒரு கால் அளவு போல் நமக்குக் காட்டி, நம் உடலிலிருந்து உயிரினைப் பிரித்து அறுக்கும் வாளாகவே உள்ளது. ஆராய்ந்து அறியும் அறிவைப் பெற்றிருப்பவர்கட்கு இந்த உண்மை விளங்கும். 334

5.நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.

பேச முடியாதபடி நாவை அடக்கி, விக்குள் எழுவதற்கு முன்னமே அறச்செயல்களை நாம் விரைந்து செய்தல் வேண்டும். 335

6.நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு.

நேற்று உயிரோடிருந்த ஒருவன் இன்று உயிரோடு இல்லை (இறந்து போனான்) என்று சொல்லப் படும். நிலைமையாகிய பெருமையையே இந்த உலகம் உடையதாக இருக்கிறது.

நெருநல்-நேற்று; பெருமை-இச்சொல் இங்கே இழிவைக் குறிக்கிறது. 336

7.ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.

ஒரு கணப்பொழுது அளவேனும் உயிரும் உடலும் ஒன்று சேர்ந்து வாழும் வகையினை அறியாத மக்கள் கோடிக்கு மேற்பட்ட எண்ணங்களை எண்ணிப் பொழுதினை வீணாகக் கழிப்பர்.

கருதுப-எண்ணுவர்; கோடியும் அல்ல பல-கோடிக்கும் மேற்பட்ட எண்ணங்கள். 337

8.குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு.

உயிருக்கு உடம்போடு உள்ள உறவு, ஒரு பறவை தான் இருத்தற்கு இடமாயிருந்த கூடு தனியே கிடக்க, அக்கூட்டினை விட்டு வேறிடத்துக்குப் பறந்து செல்வது போன்றது.

குடம்பை-கூடு; முட்டை என்றும் பொருள் கொள்வர். புள்-பறவை. 338

9.உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.

இறப்பு எனப்படுவது ஒருவன் உறங்குவதற்குச் சமமாகும். பிறப்பு எனப்படுவது அவன் அவ்வுறக்கத்திலிருந்து விழித்துக் கொள்வதற்குச் சமமாகும். 339

10.புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.

நிலையில்லாத உடம்பில் ஒரு மூலையில் ஒதுங்கிக் கிடக்கும் உயிருக்குப் புகுந்து குடி இருக்கத்தக்க அழியாத வீடு ஒன்று இது வரையில் அமையவில்லையா?

புக்கில்-புகுந்து குடியிருக்கத்தக்க வீடு; துச்சில்-ஒதுங்கி இருக்கத் தக்க வீடு. 340

35. துறவு


1.யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

ஒருவன் எந்த எந்தப் பொருளின் மீது தான் வைத்துள்ள ஆசையை நீக்கிக் கொள்கிறானோ, அவன் அந்த அந்தப் பொருளின் காரணமாக வரும் துன்பத்தால் வருந்த மாட்டான்.

யாதனின் யாதனின் - எந்த எந்தப் பொருள்களில்; நோதல்-வருந்துதல். 341

2.வேண்டின் உண்டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டியற் பால பல.

துன்பம் இல்லாத நிலையை ஒருவன் விரும்பினால், அவன் இளமைப் பருவத்திலேயே துறத்தல் வேண்டும். அவ்வாறு அவன் துறப்பானேயானால், அவன் இந்த உலகத்திலேயே பெறக் கூடிய இன்பம் பல உண்டு.

உண்டாகத் துறக்க - நிரம்பப் பொருள்கள் உள்ள காலத்திலேயே, அஃதாவது இளம் பருவத்திலேயே துறக்க; இயற்பால-உண்டாகத் தக்கவை: அடையத் தக்கவை. 342

3.அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு.

நிலைத்த இன்பத்தைப் பெற விரும்புவோர் ஐம்பொறிகளின் வழியாக வரும் ஐந்து புலன்களின் ஆசையினையும் அடக்குதல் வேண்டும். ஐந்து புலன்களாலும் அனுபவிக்கக் கூடிய பொருள்களையெல்லாம் அவர்கள் முற்றிலும் நீக்கி விடுதல் வேண்டும். 343

4.இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.

தவம் செய்வோர்கட்குப் பற்று உண்டாக்கத் தக்க ஒரு பொருளும் இல்லாது இருத்தல் இயல்பாக வேண்டப்படுவது. அப்பொருள்கள் இருத்தல் மீண்டும் ஆசையை உண்டாக்குவதற்குக் காரணமாயிருக்கும். 344 .

5.மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை.

மீண்டும் பிறவாதிருத்தலை விரும்பும் ஒரு துறவிக்கு, இந்த உடம்பே வேண்டாத பொருளாகும். அவ்வாறு இருக்க, மற்றைப் பொருள்களில் ஆசை வைத்து, அவற்றோடு சம்பந்தம் கொள்வது எதற்காக? 345

6.யான்எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.

தான் அல்லாத உடம்பைத் தான் என்றும், தனக்கு உரிமையில்லாத பொருளைத் தனது என்றும் எண்ணுகின்ற மயக்கத்தினை ஒழிப்பவன், தேவர்களாலும் அடைய முடியாத மோட்ச வீட்டினை அடைவான். 346

7.பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.

யான், எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் உறுதியாக மனத்தில் பற்றிக் கொண்டு விடாமல் இருப்பவர்களை அவை காரணமாக வரும் துன்பங்கள் விடாமல் பற்றிக் கொண்டிருக்கும். 347

8.தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.

பற்றுக்களை முற்றிலும் துறந்தவர்கள் மோட்ச லோகத்தை அடைவதற்கு முற்பட்டவராவர். மற்றவர்கள் ஆசை காரணமாக மயங்கித் துன்ப வலையிலே அகப் பட்டவராவர்.

தலைப்படுதல்-முற்படுதல்; தீரத் துறத்தல்-முற்றிலும் பற்றற்று இருத்தல். 348

9.பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.

யான், எனது என்னும் ஆசை நீங்கியவுடனே, அந்தப் பற்றற்ற நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும். அந்தப் பற்றினை நீக்கிக் கொள்ளாதவர்களிடம் பிறப்பும், இறப்பும் ஆகிய நிலையாமையே காணப்படும். 349

10.பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

கடவுள் எந்தப் பொருள்களின் மீதும் ஆசை இல்லாதவர். உயிர்கள் பொருள்களின் மீது ஆசை உடையவை. அந்த ஆசை நீங்க வேண்டுமானால், எந்தப் பொருளின் மீதும் ஆசையில்லாத கடவுளின் மீது ஆசை வைத்தல் வேண்டும். 350

36. மெய்யுணர்தல்


1.பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.

உண்மைப்பொருள் அல்லாதவைகளை, உண்மைப் பொருள் என்று நாம் கருதுகின்றோம்.அவ்வாறு தவறாகக் கருதுகிற மயக்க உணர்ச்சியால், சிறப்பில்லாத துன்பப் பிறப்பு உண்டாகின்றது. 351

2.இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.

மயக்கத்திலிருந்து நீங்கிக் குற்றமற்ற மெய்யறிவினை உடையவர்க்கு அந்த மெய்யறிவு அறியாமையாகிய இருளினை நீக்கி அவர்கட்கு இன்பத்தினை அளிக்கும். 352

3.ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து.

மயக்கத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு, இந்த நில உலகத்தைக் காட்டிலும் மோட்சலோகம் மிகவும் அருகிலே இருப்பதாகும். 353

4.ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.

உண்மையை அறியும் அறிவு இல்லாதவர்களுக்கு மெய், வாய், கண், மூக்கு, செவிகளின் வழியாக அறியக் கூடிய ஐந்து வகையான அறிவுகளும் இருந்தாலும் பயன் இல்லை.

ஐயுணர்வு - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐவகை அறிவு; எய்தியக் கண்ணும் - அடைந்த போதும்;ப யன் இன்று-பயன் இல்லை. 354

5.எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

எந்தப் பொருள் எந்தக் குணமுடையதாகத் தோன்றினாலும், அந்தப் பொருளின் உண்மையான தன்மையினை அறிந்து கொள்வதே அறிவுடைமை ஆகும்.

ஒரு பொருளின் உயர்வு தாழ்வு கருதி அதனை மதிக்காமல் அதில் உள்ள உண்மையை அறிந்து கொள்வதே சிறந்த அறிவாகும். 355

6.கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.

இவ்வுலகிலே படிப்பதற்குரிய நல்ல நூல்களைப் படித்து மெய்ப் பொருளை உணர்ந்தவர், மறுப்டியும் இவ்வுலகத்தில் பிறந்து துன்புறாத சிறந்த வழியை அடைய முற்படுவர்.

ஈண்டு-இவ்வுலகத்தில்; தலைப்படுவர்-அடைய முற்படுவர்; வாரா-பிறவாத; நெறி-நல்வழி. 356

7.ஒர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.

ஒருவனது உள்ளம் மெய்ப் பொருளை ஆய்ந்து உணருமானால், மறுபடியும் அவனுக்குப் பிறப்பு உண்டு என்று நிச்சயமாக எண்ண வேண்டியதில்லை.

ஒர்த்து-ஆராய்ந்து; உள்ளது-இருப்பதாகிய மெய்ப் பொருள்; ஒரு தலையா-நிச்சயமாக; பேர்த்து-மறுபடியும்; உள்ளவேண்டா - நினைக்க வேண்டா. 357

8.பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.

பிறத்தலுக்குக் காரணமாகிய அறியாமை நீங்கும் பொருட்டு மோட்ச வீட்டிற்குக் காரணமாகிய பரம் பொருளை ஆராய்ச்சியால் கண்டு அறிவதே உண்மையான அறிவு.

சிறப்பு-மோட்சவீடு; செம்பொருள்-பரம்பொருள். 358

9.சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.

எல்லாப் பொருள்களுக்கும் ஆதாரமாக உள்ள கடவுளாகிய மெய்ப் பொருளை உணர்ந்து, உலக ஆசை முற்றிலும் நீங்கும்படி ஒருவன் நடந்து கொள்ள வேண்டும். அவ்வாறு நடந்து கொண்டால், அவனை அடைய இருந்த துன்பங்கள் அவனுடைய உணர்வு

ஒழுக்கங்களை அழித்துப் பின் அவனை அடைய மாட்டா.

சார்பு (1) - ஆதாரம், கடவுள்; சார்பு (2) - பற்று; சார்தரா - அடைய மாட்டா; நோய் - வினைப் பயனால் வரும் துன்பம். 359

10.காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.

விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இம்மூன்று குற்றங்களின் பெயரும் அழியும்படி ஒழுக வல்லவர்களுக்குத் துன்பங்கள் அனைத்தும் வாராமல் ஒழிந்து போகும்.

காமம் - விருப்பு; வெகுளி - வெறுப்பு; மயக்கம் - அறியாமை; நாமம் - பெயர். 360

37. அவா அறுத்தல்


1.அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.

எல்லா உயிர்கட்கும் எப்போதும் ஒழியாத பிறவியை உண்டாக்குவதற்குக் காரணமாக இருப்பது அவ்வுயிர்கள் உலகப் பொருள்களின் மீது வைத்துள்ள ஆசையே என்று கூறுவர்.

அவா - ஆசை அல்லது பற்று; எஞ்ஞான்றும் - எக்காலத்தும்; தவா - கெடாத, விட்டு நீங்காத, ஒழியாத; வித்து - விதை, காரணமாக இருப்பது. 361

2.வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை; மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.

ஒருவன் ஒன்றை விரும்ப வேண்டுமானால், பிறவாதிருத்தலையே விரும்புதல் வேண்டும். அப்பிறவாமை ஆசையற்ற நிலையினை விரும்பினால் உண்டாகும். 362

3.வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
யாண்டும் அஃதொப்பது இல்.

ஆசையில்லாமையைப் போன்ற மேலாகிய செல்வம் இந்த உலகத்தில் இல்லை. வேறு எந்த உலகத்திலும் அதற்குச் சமமான ஒரு செல்வம் இல்லை. 363

4.தூஉய்மை என்பது அவாஇன்மை; மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.

பரிசுத்தமான நிலை என்று சொல்லப்படுவது ஆசையற்ற தன்மையே ஆகும். அத்தகைய தன்மை மெய்ம்மைப் பொருளாகிய கடவுளை விரும்ப வரும். 364

5.அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்.

பற்றற்றவர் (துறவிகள்) என்று சொல்லப்படுபவர் ஆசையை ஒழித்தவரே ஆவர். ஆசையினை ஒழிக்காத மற்றவர் அவ்விதமாகப் பற்றற்று வாழ்பவர் அல்லர். 365

6.அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா.

ஒருவனை வஞ்சித்து அவனைப் பிறப்பு, இறப்புக்களில் ஈடுபடச் செய்வது அவா என்னும் உலக ஆசையே ஆகும். ஆதலால், அந்த அவா நெருங்காதபடி அதற்கு அஞ்சி வாழ்வதே அறம் ஆகும். 366

7.அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டும் ஆற்றான் வரும்.

ஒருவன் உலக ஆசையை முற்றிலும் ஒழித்தால், அவன் கெட்டுப் போகாமல் இருப்பதற்குக் காரணமாகிய நல்ல செயல் அவன் விரும்புகின்றபடியே உண்டாகும். 367

8.அவாஇல்லார்க்கு இல்லாகும் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.

ஆசையில்லாதவர்களுக்குத் துன்பம் சிறிதும் இராது. அந்த ஆசையானது இருக்குமானால், எல்லாத் துன்பங்களும் மேன்மேலும் ஒழியாமல் வந்து கொண்டிருக்கும். 368

9.இன்பம் இடையறா தீண்டும் அவாஎன்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்.

துன்பங்களுள் பெரியதாகிய ஆசை என்னும் துன்பம் ஒருவனுக்கு இல்லாமல் ஒழித்து விடுமேயானால், அவனுக்கு இன்பம் இடை விடாது மேன்மேலும் வந்து சேரும். 369

10.ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.

ஒருபோதும் நிரம்பாத தன்மையுடைய ஆசையை ஒழித்து விட்டால், அதுவே எந்தக் காலத்திலும் மாறாத தன்மையினையுடைய இன்பத்தைத் தரும். 370

</div