திருக்குறள் செய்திகள்/பாரட்டுரை

செந்தமிழ் வேந்தர் சு. ஸ்ரீபால், இ.கா.ப. அவர்கள்

(தமிழ்நாட்டுக் காவல்துறைத் தலைமை இயக்குநர்.

சென்னை - 600 004)
பாராட்டுரை

காடுவிட்டு நாடு வந்து, பறவைகள் கூடு கட்டி வாழ்வது கண்டு, வீடுகட்டி வாழத் தொடங்கிய காலத்திலேயே மனிதனுக்கு ‘மனம்’ என்னும் ஆறாவது புலன் அரும்பி, இயங்கி, மணம் வீசத் தொடங்கியது.

“அம் மனமே அன்பு, அருள், அகிம்சை, அழுக்காறாமை, அவாவறுத்தல் ஆகிய பண்பு நலன்களாகும். தொடர்ந்து, “தமக்கென வாழாப் பிறர்க்குரியர் ஆதல் வேண்டும்; செய்தி கொன்றோர்க்கு உய்தி இன்று; யாதும் ஊரே, யாவரும் கேளிர்; பெரியரை வியத்தலும் இலம்; சிறியரை இகழ்தல் அதனினும் இலம்: வாய்மையே மனத்தைத் தூய்மையாக்கும்; அத் தூய்மை பெறுவதே வாழ்வின் பயன்” என்பன போன்ற அறநெறிகள் கோவையாய் மனத்துள் எழத் தொடங்கின.

‘தான் கண்ட அறவழிகளைப் பிறரும் பின்பற்ற வேண்டும்’ என்று விரும்பினான் மனிதன்.

அவற்றைத் தொகுத்துச் சேர்ப்பன சேர்த்து, நீக்குவன நீக்கி வகைதொகைப்படுத்தி, வழங்கும் ஆற்றல், அக் காலத்திய மனிதன் அறியாத ஒன்று. அச் செயற்கரிய செயலைச் செய்யத் தோன்றினார் ஓர் அருளாளர்; அவர் பெயர் ‘குந்தகுந்தாச்சார்யார்’ என்பது.

அவர் செவ்விதாகப் படைத்தளித்த நூலே திருக்குறள்; அதனால், தமிழ் இறவாப் புகழ்பெற்றது.

திருக்குறள் தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுகள் ஆயின; காலத்தின் இடையீட்டினால், சொற்கள் பல உருமாறின. சில, பொருளால் வேறாயின; அதனால், திருக்குறள் மூலம் மட்டும் படித்து நேர்ப்பொருள் காண்பது அரிதாயிற்று.

நல்லறிஞராகிய அருளாளர் பதின்மர் குறளுக்கு உரை எழுதியதாய் மரபுவழிச் செய்தி ஒன்று உண்டு; அவற்றுள் இன்று கிடைப்பன மிகச் சிலவே; அவற்றுள்ளும் தெற்றெனப் பொருள் புரிந்துகொள்ளக்கூடியன ஒன்றிரண்டே; அதனால், காலந்தொறும் புத்துரைகள் தோன்றிக்கொண்டே வரலாயின.

அவை ‘குறளின் பொருளை எளிதாக்கிக் காட்டுதற்கு மாறாய்த் தாம்தாம் சொல்வதே சரி’ என்று சாதிப்பதையே முதன்மையாய்க்கொண்டு குழப்பத்தை மிகுதியாக்கின.

“குழப்பம் இல்லாமல், தெளிவாய்க் குறைமதியினரும் அறிந்து உய்தல் வேண்டும்” என்னும் கருணையினால், பேராசிரியர் ரா. சீநிவாசன் எனும் பேரறிஞர் குறட்பாக்களைத் தொடாமல், அவை காட்டும் சாரத்தைமட்டும் கோதின்றி வடித்து, எளிய தேன்பாகாய்த் தந்துள்ளார்.

குறள் கற்பதுபோல் தோன்றாமல், ஏதோ இனிய கதை படிப்பது போன்ற உணர்ச்சி தோன்றுமாறு குறளின் சாரம் முழுதையும் சுவைபடத் தந்துள்ளாார்.

இவ் வரிய செயலுக்கு அவ் வருளாளரின் பல்லாண்டு காலப் பயிற்சியும் பயிற்றுவித்த பாங்கும் துணைபுரிந்துள்ளன.

இந் நூல் குறள் அன்று; குறளின் உரையும் அன்று; ஆனால், குறள் முழுதும் பயின்று கடைப்பிடிக்கச் செய்யும் ஊற்றுக்கோல்!

“குறள் அறநுட்பங்களை எல்லாம் செய்தி வாசிப்பது போல் எளிதாய் வாசித்து, அறிந்துகொள்ளலாம்” என்று உணர்த்துதற்கே “திருக்குறள் செய்திகள்” என்று எளிய பெயரைச் சூட்டியுள்ளார்.

பேராசிரியர் ரா. சீ. அவர்கள், இதே முறையில் மேலும் பல நூல்களுக்கு விளக்கங்கள், செய்திகள் எழுதியருளினால் கற்றவர், மற்றவர் என்னும் வேற்றுமையின்றி அனைவர்க்கும் பயன் விளையும்.

“இப் பெரும்பணி ஆற்றுதற்கு ஊற்றமும் தேற்றமும் இறைவன் அருளுக” என்று வாழ்த்துவோம்.

7.9.94
சு.ஸ்ரீபால்