திருக்குறள் செய்திகள்/மகிழ்வுரை

கணியூர் மதுநெஞ்சன் மகிழ்வுரை

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்க் கட்டப்பட்ட ஓர் இரண்டு அடுக்கு மளிகை!

மூன்று வாயில்களிலும் உள்ளே புகுந்து 133 பேசும் பதுமைகளுடன் பேசி வரலாம்.

இந்த மாளிகையின் அழகினைப் பேசும் பதுமைகளுடன் பேசுதற்காகப் பரிமேலழகர் என்ற ஒரு (வழிகாட்டியைப்) பல பேர் துணைக்கு அழைத்துவந்தார்கள்.

அவர் அற்புதமாக வருணித்தார் விளக்கங்கள் தந்தார்.

அவருக்குப் பின்னர் ஆயிரக்கணக்கான வழிகாட்டிகள்!

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எளிய விளக்கமான மு.வ. என்ற வழிகாட்டி!

அவருக்கு அடுத்த வீட்டுக்காரரான ரா.சீ. என்ற புதிய வழிகாட்டி!

அறத்தின் வழியே பொருள் சேர்த்து. இன்பத்தையும் காணுதற்கு இந்த மாளிகையின் பதுமைகள் விளக்கம் தருகின்றன.

இப் பதுமைகளுடன் நாம் பேசி விளங்கிக்கொள்வதைக் காட்டிலும் வாழ்வியல் வழிகாட்டியான ரா.சீ. அவர்களுடன் சென்று விளங்கிக்கொள்வதையே ‘திருக்குறள் செய்திகள்’ என்னும் நூல் சொல்லுகிறது.

இளந்தென்றலாய் மிதந்துவரும் அவர் வார்த்தைகள்!

அடுக்கடுக்காய்ப் புரண்டுவரும் கடல் அலைகளைப் போல் வார்த்தைகளில் எதுகைகள்...! மோனைகள்...!

முத்துகளாய்க் கருத்துக் குவியல்கள்...!

விஞ்ஞான யுகத்தில் பாராமுகங்களாய் ஆகிக் கொண்டிருக்கும் செய்யுள்கள், இலக்கியங்கள் போன்றவை எல்லாம் இனிமேல் புதுக்கவிதைக்கார்களின் எழுத்துவீச்சாய்க் கருத்துச் சுழற்சிகளினால்தான் வீசப்பட வேண்டும்.

அந்த வீச்சாய் விழுந்ததுதான் ரா.சீ.யின் திருக்குறள் செய்திகள்!

இதில் இல்லாத பொருளில்லை; சொல்லாத செய்தியில்லை.

கடவுள், வான், அன்பு, விருந்து, மருந்து, ஈகை, புகழ், தவம், வாய்மை, கல்வி, காதல், நாணம், புணர்ச்சி, ஊடல் சொல்லிக் கொண்டே போகலாம்.

வள்ளுவன் கருத்துக்கெல்லாம் ரா.சீ யின் வார்த்தைகள் மெருகுபோட்டுள்ளன.

சாணை பிடிக்கப்பட்ட கத்திமுனைப் பதங்கள்!

யதார்த்த வாழ்வின் நடப்புக் கொடுகள்! அறுபது ஆண்டுகளாய்த் தமிழை வளைத்து வளைத்து. ‘இப்போதும்’ தானே வளைந்து கொடுக்கும் அற்புதச் சொற்கள்.!

அறன் வலியுறுத்தலின்விளக்கமாய், “அறத்தைக்கடைப்பிடி: ஆக்கம் உண்டாகும்; அதனைக் கைவிட்டால் வாழ்க்கையில் தேக்கமே ஏற்படும்; நன்மைகளின் நீக்கம் தொடரும்; கேடுகள் உன்னைத் தேடி வரும்” என்றும்;

“நடுநிலைமை’ பற்றி விளக்குமிடத்துத் “தவறான வழியில் பொருளை ஈட்டி, அவர்கள் சலவைக்கல் பதித்து வீடு கட்டி இருந்தாலும் அவர்களை வெளுத்துக் கட்டாமல் இருக்கமாட்டார்கள்” இஃது அவர் தொடர்; ‘உலகம் அவர்களை விடாது” என்ற கருத்தில் கூறுகிறார்.

‘சலவை’ ‘வெளுத்தல்’ என்ற வார்த்தைகள் ஒரு சுகமான அர்த்தத்தை உண்டாக்குகின்றன.

“அளவோடு உண்பது வளமான வாழ்வுக்கு வழி வகுக்கும்” - இது ரா.சீ யின் சுவையான வரிகள்.

இப்படி நூல் முழுக்க எங்கு நோக்கினும் திருக்குறளின் கருத்துகள் சுவையான தமிழில் அழகுற எழுதப்பட்டுள்ளன.

வெறும் பொழிப்புரையாக இல்லாமல், சுவையான செய்திகள், நல்ல நண்பரின் அன்பான அனுசரனணயான புத்திமதிபோல் எழுதப்பட்டுள்ளன.

‘திருக்குறள்’ பற்றி முழுதுமாக அறிந்துகொள்ள வேண்டும்” என்று விரும்பும் பலர், பல புத்தகங்களைப் பாதியிலே விட்டுவிடுவதைப் பார்த்திருக்கிறேன்.

ஆனால், ‘திருக்குறள்செய்திகள்’ எனனும் நூல்சுவையானது; நூலைப் படிக்கத் தொடங்கிவிட்டால் முடிக்கும்வரை இது சுகமானது.

இஃது அனைவரின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் இருக்க வேண்டிய அற்புதமான நூல்.

அன்பன்,
மதுநெஞ்சன்

1048, கடத்தூர்ச் சாலை,
கணியூர் - 638 203