திருக்குறள் செய்திகள்/1
ஏட்டுச் சுவடி எடுத்துக் காட்டும் முதல் எழுத்து அகரமாகும். கூட்டிக் கழித்துப் பார்த்தால் உலகைப் படைத்தவன் இறைவன் ஆவான்; அவனே உலகத்தின் தொடக்கமும் ஆவான்.
படித்துப் படித்து நீ பண்டிதன் ஆகலாம்; அதை மடித்து வைத்துவிட்டு நீ சுயமாகச் சிந்தித்துப்பார்; இறைவன் தாளை நீ வணங்காதவிடத்து, நீ படித்த தாள்கள் அத்துணையும் வெறும் கோடுகள்; உன் படிப்பும் பயனற்றது ஆகிவிடும்.
அடியவர் உள்ளத் தாமரையில் உவந்து குடியிருப்பவன் இறைவன்; அவன் வெள்ளைத் தாள்களை மனத்தில் நிறுத்து; நீ நிலமிசை நீடு வாழ்வாய்.
விருப்பு வெறுப்பு என்பது அவனிடம் இருப்புக் கொள்வது இல்லை. அவன் தாளை வணங்கு; உன் இடும்பைகள் தீரும்.
இறைவனின் புகழ் பொருள் மிக்கது. அவன் புகழைப் பாடு; இருளில் சேர்க்கும் தீய வினைகள் உன்னை வந்து அடையா.
பொறிகளை அடக்கி நெறிப்பட வாழ்பவர் இறையருள் பெற்று நிறைநாள் வாழ்வர்.
இறைவனுக்கு உவமை இந் நிலஉலகில் யாரையும் கூற இயலாது. தனக்கு உவமை இல்லாதவன்; அவன் தாளை, வணங்கு; உன் மனக்கவலைகள் மாய்ந்து மகிழ்வு பெறுவாய்; அறத்தின் கடல்; அருள்வடிவினன்; அவன் தாள் சேர்பவர் பிறப்பு அறுப்பர்; வீடுபேறு பெறுவர்.
மதிக்கத் தக்க பண்புகள் மிக்கவன் படைத்தோன். அவன் திருவடிகளை வணங்காத தலை பயனற்றது. தலைமை அதனை விட்டு நீங்கிவிடும்; உணர்வு அற்ற பிண்டமாக மதிக்கப்படும்.
பிறப்பு நீந்த முடியாத பெரிய கடல் என்றால், அதனைக் கடக்கும் தெப்பம் இறைவன் திருவடிகள்: பற்றுக அவன் தாள்களை. அவன் தாள்களைப் பற்றியவரே பிறவிக் கடலைக் கடப்பர்.