திருக்குறள் செய்திகள்/நன்றியுரை

நன்றியுரை

திருக்குறள் தெளிவுரைகள் பல வெளிவந்துள்ளன. பதவுரைப் பதிப்புகளும் உள்ளன. இது குறட்பாக்களைத் தாராமல் செய்திகளை மட்டும் தர முற்படுகிறது.

குறட்பாப் படிப்பலர் அதன் செய்திகளை அறிவதில்லை; ஒரு சில குறட்பாக்களை ஒப்புவிக்கின்றனர். அவை தேர்ந்து எடுக்கப்பட்டவை; அடிக்கடி ஆளப்படுபவை. மொத்தமாகக் குறட்பா கூறுவது யாது? என்று கேட்டால் சொல்ல இயல்வதில்லை. செய்திகள், கற்றோர்க்கும் புலமை பெறாதவர்க்கும் தேவை: அவை வாழ்க்கைக்குப் பயன்படுவன. வள்ளுவர் கருத்துகளை இன்றைய நடைமுறை மொழியில் தெரிவிக்க எடுத்தக் கொண்ட முயற்சி இது.

நூலை அறிமுகப்படுத்த அணிந்துரைகள் தேவைப்படுகின்றன. இவற்றை நல்கிய அறிஞர் காவல்துறைத் தலைவர் ஸ்ரீபால் செந்தமிழ் வேந்தர் அவர்களுக்கும், கவிஞர் மதுநெஞ்சன் அவர்களுக்கும், புலவர் ஐயா திரு. இராம. சுப்பிரமணியன் அவர்களுக்கும், கவிஞர் குமரன் அவர்களுக்கும் நன்றி உடையேன்.

திருக்குறளைப் பிற மொழியாளர் அறிய முடிகிறது: தமிழ் அறிந்தவர்கள் அறிய முடிவதில்லை. தொடர்ச்சியாக உரை நடையில் படிக்கும்போது அந்தக் கருத்துகளை அறிய முடிகிறது. வாழ்க்கைக்கு வழிகாட்டுவது திருக்குறள்; பயன்மிகப் பெரிது, புலமை குறுக்கிடத் தேவையில்லை. அனைவரும் படிக்க எழுதப்பட்டது.

ரா. சீனிவாசன்