10. இனியவை கூறல்

சொற்களில் கருத்து இருக்கட்டும்; அன்பு கலந்து பேசுக; உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் கரவு, உறவைக் கெடுக்கும்; கடுமை தவிர்த்துக் காதுக்கு இனிமை சேர்க்கவும்.

கொடைவள்ளல் என்று பிறர் தடையின்றிப் பேசுவர்; உள்ளம் உவந்து ஈவதைவிடக் கள்ளம் தவிர்த்து முகம் மலர்ந்து இனிய சொல் பேசுக; அதையே அவர்கள் எதிர் பார்க்கின்றனர். கோயில் பூசைக்கு வருபவர் அதன் மணி ஒலியையும் கேட்க விழைவர்.

உன் நோக்கம் எதுவாயினும் சரி; உன் பார்வை அவர்களைப் பெரிதும் தாக்கும்; கனிவு அவர்கள் துயரைப் போக்கும்; இன்சொற் கூறுவது அறச்செயலும் ஆகும். யாரிடத்தும் எப்பொழுதும் இனிதாகப் பேசுக: “இவனா? யாருக்கும் கெடுதி செய்யமாட்டான்” என்ற பெயர் எடுப்பாய்; உனக்கு எந்தக் கெடுதியும் செய்ய எந்த எதிரியும் பிறக்கமாட்டான். பகை இல்லாமல் வாழ நகைமுகத்தோடு பழகுதல் வேண்டும். பணிவும் உனக்கு அணி செய்யும்; ஆரவாரம் இல்லாமல் அடக்கமாகப் பேசினால் அனைவரும் உன்னிடம் ஒடுக்கம் காட்டுவர். மிடுக்கு அடுக்கிய துன்பங்களைத் தரும்.

நல்லனவற்றை நாடி இனிய பேசினால் தீமைகள் தேயும்; அறம் பெருகும். பண்பிலிருந்து நீங்காத பயனுடைய சொற்கள் நன்மைகளை உண்டாக்கும். செருக்கு நீங்கிய சொற்கள் மற்றவர் நெஞ்சை உருக்கி நட்பினை விளைவிக்கும்: இப் பிறவிக்குமட்டும் அன்று; அடுத்த பிறவிகளிலும் இன்பம் சேர்க்கும்.

இன்சொல் பேசினால் நன்மைகள் உண்டாகின்றன என்பது தெரிந்தும் வன்சொல் வழங்குவது ஏன்? பிழைக்கத் தெரிந்தவர்கள் இத் தவறுகளை இழைக்கமாட்டார்கள்.

கனிகள் இருக்கக் காயை யாரும் தேடமாட்டார்கள். இனிய சொற்கள் இருக்கும்போது கடுஞ்சொற்களை யாரும் நாடமாட்டார்கள்; இனிக்கும் கனி இருக்கப் புளிக்கும் காயைத் தேடாதே; சொல்லாடச் சோர்வு போகும் என்பர்; அதாவது இனிய சொற்களைப் பேசினால் மற்றவர்கள் சோர்வு நீங்கிவிடும் என்பதை உணர்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/10&oldid=1106252" இலிருந்து மீள்விக்கப்பட்டது