11. செய் நன்றி அறிதல்

நல்லது செய்கிறார்கள்; உடனே அதனை மறந்துவிடுகிறோம்; மறதியா இதற்குக் காரணம்? அசதிதான் காரணம்.

உலகில் ஏன் ஒருவர் மற்றவருக்கு ஏதாவது உதவி செய்கிறார்கள்? அதுதான் மனிதப் பண்பாடு; மழை ஏன் பெய்கிறது? அது மேகத்தின் கொடைத் தன்மை.

நீ எந்த உதவியும் செய்தது இல்லை; முன்பின் பழகியதும் இல்லை; யாரோ எவரோ உன் தேவையை அறிந்து உதவிசெய்கிறார். உதவிசெய்வது அவர் உத்தி யோகம் அன்று; கடமையும் அன்று; மனப்பண்பாடு: அவ்வளவுதான்; அதற்கு நிகராக எதனைத் தந்தாலும் ஈடு ஆகாது; வானமும் ஈடாகாது; இந்த வையகமும் நிகராகாது.

காலத்தில் வந்து உதவுகிறவர் செய்யும் உதவி சிறிது எனினும் அது தக்க சமயத்தில் செய்யப்பட்ட செயல் ஆகும்; அதன் விளைவு மிகப் பெரிது ஆகும்.

உயிர்போகும் ஒருவனுக்குப் பருக நீர் தந்ததால் அவன் உயிர் நிற்கிறது. நீ தந்தது வெறும் தண்ணிர்தான்; காசு இல்லாமல் கிடைப்பது; என்றாலும் ஓர் உயிரைக் காப் பாற்ற முடிந்தது. இது காலத்திற் செய்த உதவி; இதற்கு ஈடு எதனைக் கூற முடியும்? ஞாலமே தந்தாலும் இதற்கு ஈடு ஆகாது; உதவி தினை அளவுதான்; பயன் பனை அளவு என்பதை மறக்க முடியாது. எனவே தூய உள்ளம் படைத்த இந் நல்லோரின் தொடர்பை எப்பொழுதும் மறக்கக்கூடாது; அவர்கள் உறவு நிலைத்து இருப்பது தக்கது; துன்பத்தில் துயர் துடைத்தவர்களை அன்பர்களாகக் கொள்க. எழு பிறப்பும் தம் துன்பத்தைத் துடைத்தவனின் நட்பை மறக்கக் கூடாது; இந் நல்லுறவை நட்பாக மதிப்பது ஒட்பமாகும்.

நண்பர்கள் என்று எடுத்துக்கொண்ட பிறகு அவர்கள் ஏதோ சில சமயம் தீமையும் செய்துவிடலாம். அவர்கள் செய்த நன்மையை நினைத்துப் பார்; தீமை தீயின்முன் வைக்கும் தூசாக மாறிவிடும். தீமையை மறந்துவிடுவது தக்கது; நன்மையை மறக்காதே.

கொலைக்கு நிகரான கொடுமையைச் செய்திருக்கலாம்; அவன் உனக்கு நண்பன்; அவன் ஒரு சமயம் உன் உயிரையும் காப்பாற்றி இருக்கலாம். கடுமையான சோதனைகளில் கைகொடுத்து உதவி இருக்கலாம். அடுக்கிய நன்மைகள் உனக்கு அவன் செய்திருப்பான்; அவற்றுள் ஒன்றினை நினைத்துப்பார். விளக்கின் முன் இருள்போல் அவன் செய்த தீமைகள் மறைந்துவிடும். அவன் செய்திருக்கும் நல்லவற்றுள் ஒன்றை நினைத்துப் பார். அவன் செய்த தீமைகள் உன் நினைவுவிட்டு நீங்கிவிடும்

அறம் என்று குறிக்கப்படுவன பல உள்ளன; அவற்றுள் நன்றி மறவாது இருத்தல் ஒன்று ஆகும். அறம் பிற நீ துறந்து விட்டாலும், கைவிட்டாலும் நீ மன்னிக்கப்படுவாய்; அறம் உன்னைச் சீறாது. நன்றி மறந்தால் அதற்கு மன்னிப்பே கிடையாது. தகாத பல செய்தாலும் தாங்கிக்கொள்ள முடியும்; செய்த நன்மையை மறந்து கேடு செய்தால் அவனைப் போன்ற பாதகன் இருக்க முடியாது. அவனுக்கு விமோசனமே கிடைக்காது.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/11&oldid=1106256" இலிருந்து மீள்விக்கப்பட்டது