101. நன்றியில் செல்வம்

பணம் இருக்கிறது; ஆனால் அவன் அதனை அனுபவிப்பது இல்லை; செத்தவனுக்கும் இவனுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?

தானும் உண்ணப்போவது இல்லை; பிறர்க்கும் உதவப் போவதும் இல்லை. நன்மைக்குப் பயன்படாத செல்வம்; மதிக்கத்தக்கது அன்று.

பணம்தான் எல்லாம்; அஃது இருந்தால் வேறு எதுவும் தேவையே இல்லை என்ற தவறான கருத்து உடையவர் பலர் இருக்கிறார்கள். அவர்கள் யாருக்கும் எந்த உதவியும் செய்ய முன்வர மாட்டார்கள். அவர்கள் நிலத்துக்குச் சுமை.

இந்தப் பணப்பித்து உனக்கு இருந்தால் பணத்தை நீயே வைத்துக்கொள்; பணம் உடையவன் என்று பெருமை பேசிக்கொண்டே இரு; உதவாக்கரையாக வாழ்ந்து உளுத்துப் போக வேண்டியதுதான்.

இரும்புப் பெட்டியில் இருதயம் வைத்தால் உன் வாழ்வு துருப்பிடித்துத்தான் போகும்; ஈட்டு; அதனை மற்றவர்க்கும் தந்து புகழை நாட்டு; அப்பொழுது அமையும் உன் வாழ்வு மற்றவர்க்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

ஏனய்யா நீமட்டும் சாப்பிடுகிறாய்? யாருக்கும் தர மாட்டாய்? உன் பின்னால் உன்னைப்பற்றிப் பேசுவதற்கு என்னதான் வைத்துவிட்டுப் போகப் போகிறாய்? கொடுத்தாய் என்று நற்புகழ் உனக்கு நல்லது. ஈக, ஈட்டுக புகழை.

மற்றவருக்கும் கொடு; நீயும் சாப்பிடு. இவை இரண்டும் இல்லையென்றால் அடுக்கிய கோடி உனக்கு இருந்தாலும் உன் வாழ்வு பயன் இல்லை. யாருக்கும் கொடுத்து உதவாத பெருஞ் செல்வம் உனக்கே தீமையை உண்டாக்கிவிடும். உன்னால் பணம் வைத்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது; தீய வழிகளில் செல்ல அவை உன்னைத் தூண்டிவிடும்.

இல்லாதவர்க்கு ஈயாத பெருஞ்செல்வம் அதனால் பயன் யாது? மிகவும் அழகிதான்; இளம் நலம் வாய்ந்தவள் தான்; ஆனாலும் யாருமே அவளை வைத்து வாழவில்லை; பூத்துக் காய்க்காத வாழ்வு; தனியளாக வாழ்ந்து முதிர்ந்து போகிறாள்; அம் முதிர்கன்னி எதனை அனுபவித்தாள்; அந்த கதிதான் உனக்கும்.

ஊர் நடுவே நச்சுமரம் பழுத்து இருக்கிறது; யாருக்கு என்ன நன்மை? அதனிடம் செல்லவே அச்சம் கொள்வர். அதேபோலத்தான் யாரும் நெருங்க முடியாதபடி சேர்த்து வைக்கும் பணம் யாருக்கும் பயன்படாது; பிறரை வாட்டி ஈட்டிய பொருள் அதனை வந்து கொள்ளையடித்துச் செல்வர் அஃது அவனுக்குப் பயன்படாமல் போகும்.

சீர் பெற்ற செல்வம் சிலருக்கு ஏதோ காலக் கேட்டினால் குறைந்து போகலாம்; வருவாய் தடைபட்டிருக்கலாம். அது மழை காலத்தில் பெய்யவில்லை என்பது தான் பொருள்; அந்த வறுமை நிலை நீடித்து இருக்காது; மழை மறுபடியும் பெய்யத்தான் செய்யும்; அவன் வாழ்வு தழைக்காமல் இருக்காது.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/101&oldid=1106520" இலிருந்து மீள்விக்கப்பட்டது