102. நாண் உடைமை

நாணம் என்பது மகளிரிடம் எதிர்பார்ப்பது; ஆடவர் முன்வர அவர்கள் வெட்கம் காட்டுவர்; அந்தத் தயக்கம் அவர்களுக்கு அழகு சேர்க்கும். ஆண்களுக்கும் நாணம் வேண்டும். இது பெண் கொள்ளும் நாணத்துக்கு மாறு பட்டது. செய்யும் தொழில் மட்டம்எனில் அதை அணுக அஞ்சுவர்; தாழ்வான தொழிலை அவர்கள் ஏற்க மறுத்து ஒதுங்குவர். இதுவே ஆண்கள்பால் எதிர்பார்க்கப்படும் நாணம், இஃது ஆடவர் மகளிர் இருவருக்கும் தேவையான பண்பு.

உண்ணும் உணவு, உடுத்தும் உடை; ஏனைய வசதிகள் மாந்தர்க்கு அடிப்படைப் பொதுக் தேவைகள்: இவற்றில் வேறுபாடுகள் இல்லை. நாண் உடைமையே மாந்தர்க்குச் சிறப்புத் தருவதாகும். தவறு செய்யப் பின்வாங்கும் நல்லியல்பு அவர்களுக்குப் பெருமை சேர்க்கிறது.

உடம்புக்கு உணவு தேவை. அதுபோலச் சான்றாண்மைக்கு நாணம் அடிப்படையாகும்.

நாண் உடைமை அவர்கள் அணிகலம் ஆகும். அது மட்டும் அன்று; நாண் இல்லை என்றால் அவர்கள் பெருமித நடை அவர்களுக்குப் பிணியாகும்.

பிறருக்கு ஏற்படும் பழிக்கும் தனக்கு அதனால் உண்டாகும் இழிவுக்கும் ஒப்ப நாணுபவரே சான்றோர் எனக் கொள்ளப்படுவர். “பழி மற்றவர்களைச் சாரும்; நாம் தப்பித்துக் கொள்ளலாம்” என்று தவறு செய்வதும் பிழை ஆகும்.

நாண்மா நாணயமா என்றால் நாணத்தையே நல்லோர் ஏற்பர். காசு இன்று இருக்கும்; நாளை போகும்; அதனை ஏற்பது மாசு, நாணமே மக்கள் வாழ்வுக்கு ஆசு; அதனால் இல்லை அவர்களுக்குப் பிறர் கூறும் ஏசு.

நாணத்தை மேற்கொள்பவர் உயிரையும் நாணத்தின் பொருட்டுத் துறப்பர்; உயிருக்காக நாணத்தைத் துறக்க மாட்டார். உயிரைவிட நாணம்தான் அவர்களுக்குப் பெரிது.

பிறர் நாணத்தக்க செயலுக்குத் தான் நாணாவிட்டால் அறமே வெட்கித் தலைகுனிய வேண்டியதுதான். அறம் தாழ்ந்துவிடும்; ஒழுக்கம் கெட்டால் குடி கெட்டுவிடும்; குலம் தாழும்; நாணம் கெட்டால் நன்மைகள் அழிந்து விடும்.

நாணம் உள்ளத்தில் இல்லாமல் இருப்பவர் நடமாட்டம், மரப்பாவை கயிறுகொண்டு ஆடுவது போன்றது ஆகும். இயக்கம் இருக்கும்; உயிர் இருக்காது.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/102&oldid=1106523" இலிருந்து மீள்விக்கப்பட்டது