திருக்குறள் செய்திகள்/104
எப்படிச் சுற்றி வந்தாலும் உழவுத் தொழிலைத்தான் நம்பி உலகம் வாழ வேண்டி இருக்கிறது. உழவர்கள் வண்டிக்கு இருகபோன்றவர்கள்; அவர்கள்தாம் மற்ற எல்லோரையும் தாங்குகிறார்கள்.
நிலத்தை மூலதனமாகக் கொண்டு உழுபவர் யாரையும் தொழுது வாழ வேண்டியது இல்லை. இவர்கள் பிழைப்பு மற்றவர்களை எதிர்பார்ப்பது அன்று.
உழவர்கள் தக்கபடி உழுது நெல் உற்பத்தி செய்தால்தான் நாட்டு அரசனும் தன் படைவீரர்களுக்குச் சோறு போட முடியும்; பிற நாட்டினர் வந்து தாக்கினால் எதிர்க்க முடியும். வீரம் தழைக்கப் பயிர்கள் ஈரம் செழிக்க வேண்டும்.
உழவன் மற்றவர் கையை எதிர்பார்ப்பதே இல்லை; இவன் மற்றவர்களுக்குக் கொடுப்பானே தவிர, இவன் கையேந்தி நிற்கமாட்டான். அவன் வேலை செய்யாமல் கையை மடக்கிவிட்டால் மற்றவர்கள் எல்லாம் மூலையில் முடங்கிக் கிடக்க வேண்டியதுதான்.
ஆழ உழுதல் வேண்டும்; அதனைவிடத் தக்க எரு இடுவது அவசியம்.
எரு இடுவதனைவிட நிலத்தைப் பண்படுத்த வேண்டும். புழுதியை நன்றாக உலர்த்த வேண்டும். நிலத்து மண் ஈரம் போக்க வேண்டும். அப்படிக் காயப்போட்டால் எருக் கூடத் தேவையே இருக்காது.
நாற்று நட்டுக் களை எடுத்தபின் நீர் பாய்ச்ச வேண்டும். பயிரைச் சுற்றி வேலி இட்டுக் காக்க வேண்டும்.
நிலத்தை அவ்வப்பொழுது அதற்கு உரியவன் சென்று கவனித்துக்கொள்ள வேண்டும். மனைவிகூடக் கவனிக்கா விட்டால் ஊடல் கொள்வாள். நிலமும் அப்படித்தான்; அது விளைச்சல் தாராது.
இந்த நாட்டிலே பல பேர் வேலைவெட்டி இல்லாமல் திரிகிறார்கள். “கேட்டால் வேலை கிடைக்கவில்லை” என்று கூறுகிறார்கள். அவர்களைப் பார்த்து நிலம் என்னும் நங்கை சிரிக்கிறாள்.
“தடிப்பசங்களா நான் இருக்கிறேன்; என்னை வந்து உழுங்கள்; நான் விளைச்சல தருகிறேன்” என்று கூறி அவர்கள் சோம்பலை எள்ளி நகையாடுகிறாள். வியர்வை துளிர்க்க உழைத்தால் பயிர்வகை ஏன் தளிர்க்காமல் போகாது; உயிர் வாழ வழியா இல்லை; உழவுத் தொழில் உயர்வு தரும்.