திருக்குறள் செய்திகள்/105
வறுமை மிகவும் கொடியது; அதனை விடக் கொடியது வேறு ஒன்றும் இருக்க முடியாது.
இல்லாமை என்னும் இந்தப் பாவகாரணி இம்மையும் வரும்; மறுமையும் தொடர்ந்து வரும்.
குடிப் புகழையும் குடிப் பண்பையும் இந்த வறுமை கெடுத்துவிடும்.
நற்குடிப் பிறந்தவரையும் நலிவுறச் செய்வது வறுமை; அவர்தம் சொற்களில் உறுதி நிற்காது; சோர்வு ஏற்படும்.
வறுமைதான் துன்பங்களுக்குத் தாய். எல்லாத் துன்பங்களுக்கும் இதுவே தொடக்கம் என்று கூறுவர்.
நற்பொருளை நன்கு உணர்ந்து சொன்னாலும் அவன் சொற்பொருள் எடுபடாது.
அறம் சாராத வறுமையைத் தாயும் வெறுப்பாள்; அவனை அந்நியனாகக் கருதுவாள்.
நேற்று வந்த நெருப்புப் போன்ற வறுமை இன்றும் வந்து வாட்டுமோ என்ற கவலையை அஃது உண்டாக்குகிறது.
நெருப்பிலும் தூங்க முடியும்; அது வெறும் சதையைத் தான் எரிக்கும். இஃது அவன் கதையையே மாற்றிவிடும்.
வறுமை வந்த பிறகு வீடு எதற்கு? வாசல் எதற்கு? அனைத்தையும் விட்டுவிட்டுச் சந்நியாசியாகி விடுக. மற்றவர்கள் உள்ளவர்களைக் கவனித்துக் கொள்வர். அனாதை இல்லத்தில் சேர்ப்பதற்குப் பிறர் அக்கறை காட்டுவர்.