திருக்குறள் செய்திகள்/108
கயமை என்பது சூழ்ச்சியால் எதனையும் சாதிப்பது என்று கூறலாம். அறக்கொள்கைகளைக் காற்றில் பறக்க விட்டுக் கீழ்மையாக நடந்துகொள்வது கயமை என்றும் கூறலாம். நாடகங்களில் கதாநாயகன் நன்மைக்குப் போராடுவான்; தீமைகளைத் தொடர்ந்து செய்பவனை ‘வில்லன்’ என்று கூறுவர். பொதுவாக அவன் மிகவும் கொடியவனாகத்தான் இருப்பான். இவர்கள் பொதுவாக முரடர்களாக இருப்பார்கள். இங்கே கயமை என்பது, ‘வில்லன்’ என்று குறிப்பிடப்படும் தீயவனை அன்று; நல்லவர்களைப் போல் தோற்றமளித்து மறைவாகத் தீமைகளைச் செய்துகொண்டு வாழ்பவரையே குறிப்பிடும்.
இந்தக் கயவர்களை எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியாது; இவர்கள் எப்படியாவது தாம் வாழ்ந்தால் போதும் என்று மற்றவர்களைக் காட்டிக் கொடுத்துவிட்டுத் தாம் தப்பித்துக்கொள்வார்கள். நடிப்பு இவர்களிடம் அதிகமாக இருக்கும்.
இவர்கள் மிகப் பெரிய மனிதர்கள்; தேவர்களைப் போன்றவர்கள்; தேவர்கள் தாம் கருதியதை எப்படியும் அடைந்தே தீர்வார்கள்; இன்பம்தான் அவர்களுக்குக் குறிக்கோள். விருப்பப்படி நடந்துகொண்டு எதனையும் சாதிப்பதில் இவர்கள் தேவர்களைப் போன்றவர்.
மனச்சான்று என்பது இவர்கள் வளர்த்துக்கொள்வது இல்லை; பிறர்க்குத் தீமை செய்யும்போது அதற்காக வருத்தப்படவே மாட்டார்கள். மனத்தில் எந்தக் கவலையும் கொள்ள மாட்டார்கள்; பிறரைக் கெடுப்பதே தான் முன்னேறும் வழி எனக் கண்டவர்கள்.
கயவர்கள் தம்மைவிட அதிகாரம் மிக்கவர்களைக் கண்டால் தாழ்ந்து போவார்கள்; அவர்கள் இடும் கட்டளை களை மறுக்கமாட்டார்கள்; தம்மினும் மிகவும் தாழ்ந்தவர்களைக் கண்டால் அவர்கள்மீது ஆதிக்கம் செலுத்துவார்கள்; மருட்டுவார்கள்; கடிந்து பேசுவார்கள்; வாட்டுவார்கள்.
அச்சத்தின் காரணமாக ஆசாரம் உடையவர்கள்போல் நடந்துகொள்வார்கள்; நன்மைகள் உண்டாகுமானால் அந்த ஆசாரங்களை உடனே கைவிட்டுவிடுவர்.
தமக்குத் தெரிந்த இரகசியச் செய்களை எல்லாம் பலரும் அறிய வெளியிடுவர்; பறை அடிப்பதுபோல அங்கங்கே சொல்லித் திரிவர். இஃது அவர்கள் நடவடிக்கை.
மனம் விரும்பி எச்சில கையால் கூடக் காக்கையை ஒட்டமாட்டார்கள் அதன் சோற்றுப் பருக்கையை அது தின்று விடும் என்பதால். அடி உதை என்றால் உடனே படிந்து விடுவார்கள்; சான்றோர்கள் சொன்னால் கேட்பார்கள்; பயன்படுவர்; கயவர் “கொல்லுகிறேன்” என்றால்தான் அஞ்சி அடங்கிப் பயன்படுவர். உதைத்தால்தான் ஒழுங்குக்கு வருவார்கள். கரும்பைக் கசக்கிப் பிழிந்தால் தான் சாறு வெளிப்படும். அடித்து உதைத்தால்தான் இவர்கள் குற்றத்தை ஒப்புக்கொள்வார்கள்; திருந்துவார்கள். நல்ல முறையில் சொன்னால் இவர்கள் வழிக்கு வர மாட்டார்கள்.
பிறர் நன்றாக இருந்தால் இவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. வெள்ளையாக உடுத்திவருவதைப் பார்த்தால் அவர்கள் உள்ளம் வெந்து எரியும். மற்றவர்கள் மேன்மை அடைந்தால் இவர்கள் பொறுக்க மாட்டார்கள். அவர்களைக் கெடுப்பது எப்படி என்று சூழ்ச்சி செய்துகொண்டே இருப்பார்கள்.
கயவர் நம்பிக்கைக்கு உரியவர் அல்லர், ஒரு நன்மை கிடைக்கிறது என்றால் உடனே தம்மை விற்றுவிடுவர்; தன்மானம் இழந்துவிடுவர்; எந்தத் தீமையும் செய்ய முன் வருவர். கொள்கை அற்றவர்கள் இவர்கள்.