3. காமத்துப்பால்
அன்பின் ஐந்திணை

பொருள் அகம், புறம் என இருவகைப்படும்; அகம் என்பது இன்னது என்று வெளிப்படுத்த இயலாத காதலின்பம்; புறம் என்பது ஊர் பெயர் குறிப்பிடப்பட்டு நடக்கும் உலகத்து நிகழ்ச்சிகள். அகத்தைக் கூறுவது அகப் பொருள் என்பர்.

இதனை அன்பின் ஐந்திணை என்றும் கூறுவர். மன மொத்த காதலை ஐந்திணை என்று கூறுவர்; ஒருதலைக் காதலைக் கைக்கிளை என்று கூறுவர். பொருந்தாக் காதலைப் பெருந்திணை என்று கூறுவர். ஈண்டு அன்பின் ஐந்திணையே கூறப்படுகிறது.

காதல் ஒழுக்கம் களவியல், கற்பியல் என்ற பாகுபாடுகளைக் கொண்டது. மணம் நடைபெறுமுன் ஏற்படும் சந்திப்புகளும், கூட்டமும், பிரிவும் களவு ஒழுக்கம் எனக் கூறப்படும். மணமானபின் ஏற்புடும் பிரிவுகளையும், மீண்டும் அவர்கள் கூடி இன்புற்று வாழ்தலையும் கற்பியல் என்று கூறுவர். கற்பியலில் ஊடல் நிகழும்.

இச் செய்திகளையே வள்ளுவர் காமத்துப் பாலில் 25 அதிகாரங்களில் கூறுகிறார். இருவரும் முதன்முதலில் சந்திக்கும் சந்திப்பில் நிகழ்ச்சிகள் அமைகின்றன. உரையாடல்கள் நாடகப்பாங்கில் தலைவன் கூற்றாகவும், தலைவி கூற்றாகவும், கவிஞன் கூற்றாகவும் இடம் பெறுகின்றன.

களவியல்
109. தகை அணங்கு உறுத்தல்
(தலைவியின் அழகு தன்னை வருத்தியதாக அறிவுறுத்தல்)


தலைவன் கூற்று

“சோலையில் சொக்கிப் போகத் தக்க அழகியைத் தலைவன் தனிமையில் காண்கிறான்; அவன் தான் கண்ட காட்சியையும், அதனால் ஏற்பட்ட மருட்சியையும் விவரிக்கின்றான்”.

“இந்த அழகி யார்? என்னை வருத்துகிறாள். மாநிலப் பெண்ணா? தேவ மகளா? மயிலியல் இவளிடம் வந்து பயில்வு பெறுகிறது. இவள் சாயல் என்னை மயக்குகிறது.”

“என் விழிகள் அவள் விழிகளைச் சந்திக்கின்றன; அவள் எதிர்நோக்கினாள்; நான் அதிர்ந்துவிட்டேன். படை கொண்டு தாக்கியதைப் போல இருந்தது.”

“கூற்றுவன் கொடியவன் என்பதனை முன்பு அறிந்தது இல்லை. இன்று அவன் பெண்வடிவில் வந்து என்னைப் பேதைமைப்படுத்திவிட்டான். என் விழிகள் அவள் அழகைப் பருகின. அவள் பார்வை என் உயிரையே பருகுகிறது.”

“தாக்குவதால் கூற்றுவனையும், மயக்குவதால் பெண் மானையும் நிகர்க்கும் அவள் கண்கள் எனக்கு அருளுவதால் பெண்மையையும் பெற்றிருக்கிறது."

“அவள் கண்களுக்குமேல் புருவங்கள் வளைந்து எங்கள் இருவருக்கும் இடையே இடப்பட்ட கேடயமாக விளங்குகிறது. அஃது அவள் பார்வையின் கூர்மைக்குத் தடுப்பாக உள்ளது.”

“அவள் தாவணி அணிந்திருக்கிறாள். அஃது என்னைத் தாவி அணைக்காமல் தடுத்து நிறுத்துகிறது யானைக்கு முகபடாம் ஏன் அணிவிக்கிறார்கள்? என்பது இப்பொழுது தான் விளங்குகிறது.

“களம் கண்ட வீரன் நான்; அவள் என் உளம் கொண்டு விட்டாள்; பீடு அழிந்து நிற்கின்றேன்; அவள் காதலுக்கு என் பெருமையை ஈடு கொடுத்துவிட்டேன்.”

“அவள் நாணமும், மான்போன்று மருளும் பார்வையும் அவளுக்கு அழகைத் தருகின்றன. கூடுதலாக அணிகலன்கள் வேறு எதற்கு அணிகிறார்கள்? நகை அவளுக்கு மிகை.”

“கள் உண்டால்தான் மயக்கும்; காதல்! அது கண்டாலே போதை தருகிறது. வெறி ஊட்டுவதில் இரண்டும் நிகர் என்று கூறலாம்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/109&oldid=1107107" இலிருந்து மீள்விக்கப்பட்டது