113. காதற் சிறப்பு உரைத்தல்
(தலைவன் தலைவி இருவரும் காதலின் சிறப்பைப் பேசுகின்றனர்)


தலைவன் கூற்று

“அவள் வாய் இதழ்ச்சுவை தேன்; அது பாலொடு தேன் கலந்ததுபோல இருந்தது.”

“எம் நட்புப் பிரிக்க முடியாதது; உடம்புக்கும் உயிருக்கும் உள்ள இயைபு அஃது என்று கூறுவேன்.”

“கண்களில் உள்ள கருமணி சற்று விலகினால்தான் என் காதலிக்கு அங்குத் தங்க இடம் தர முடியும். அதனைச் சற்று ஒதுங்கச் சொல்ல வேண்டியதுதான்.”

“சேரும்போது அவள் என்னை வாழ வைக்கிறாள்; பிரியும்போது என் உயிரே போய்விடும் போல இருக்கிறது. வாழ்வும் சாவும் அவள் கையில்தான் இருக்கின்றன.”

‘அவளை நினைக்க வேண்டுமென்றால் மறக்க வேண்டி உள்ளது; அவளை மறக்க இயலவில்லை.”

தலைவி கூற்று

“என் கண்களிலேயே காதலர் உறைகின்றார்; இமைத்தாலும் அதனால் அவர் துன்பப்படுவது இல்லை; மிகவும் நுட்பமானவர் என் காதலர்.”

“மை இட்டு எழுதுவதில்லை; அவர் என் கண்விட்டு மறைந்துவிடுவார் என்பதனால்.”

“சூடாக எதனையும் யான் குடிப்பது இல்லை; அவர் என் நெஞ்சில் தங்கி இருப்பதனால்."


“கண் இமைத்தால் காதலர் மறைவார் என்பதனால் யான் உறங்குவது இல்லை; இதனை இந்த ஊரார் புரிந்து கொள்ளாமல் காதலர் பிரிவு அதனால்தான் யான் தூங்க வில்லை என்று பிழைபடப் பேசுகின்றனர்.”

“என் உள்ளத்தில் அவர் உறைகிறார். இத்னை அறியாதவர்கள் கள்ளத்தில் அவர் பிரிந்துவிட்டார் என்று பேசுகிறார்கள்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/113&oldid=1107125" இலிருந்து மீள்விக்கப்பட்டது