திருக்குறள் செய்திகள்/115
தலைவன் கூற்று
“உலையைத் தட்டுக்கொண்டு மூடி வைக்கிறோம். அது தாளம் போட்டுத் தன் கொதிப்பை வெளிக்குக் காட்டுகிறது. இனி மூடியை எடுத்துவிட வேண்டியதுதான்.”
“அலர் எழுந்தால்தான் எங்கள் காதல் உறுதிபெறும். காதலுக்குச் சாரம் இருந்தால்மட்டும் போதாது; காரமும் வேண்டும். உப்பு இல்லாத பண்டம் குப்பையிலே. ‘கிசுகிசுப்பு’ இல்லை என்றால் எங்கள் காதல் ‘மசமசப்புக்கு’ அர்த்தமே இருக்காது.”
“கள் குடிக்கக் குடிக்கப் போதை தரும்; காதல் பற்றிப் பேசப் பேச அது பரவுதலைப் பெறும். அலர் எழுந்தால் தான் காதல் மலர்ச்சியை மற்றவர்கள் அறிவார்கள். குடித்தவன் என்று பேசினால்தான் குடிக்கே பெருமை சேர்கிறது: காதல் படிந்தவர் என்றால்தான் எங்களுக்கும் பெருமை சேர்கிறது.”
தலைவி கூற்று
“யாருக்கும் தெரியக்கூடாது என்றுதான் இருட்டியதும் எங்கள் சந்திப்பை வைத்துக்கொள்வோம்; ஒரே ஒரு முறை இந்த ஊரார் கண்ணில் அகப்பட்டுக் கொண்டோம்; பிடித்தது சனியன்; எங்களை விட்டுவிட மறுக்கிறார்கள்; சந்திரனைப் பாம்பு கவ்விய செய்தியாக எங்கும் பேசத் தொடங்கிவிட்டார்கள்; வம்பு பேசுவதற்கு நாங்கள் அகப்பட்டுக் கொண்டோம்.”
“எங்கள் காதலைக் கிளறிக்கொண்டே இருக்கிறார்கள்; அது காதற் பயிருக்கு இடும் எரு. அதனோடு சேர்த்து அன்னையின் கடுஞ்சொற்கள் பயிருக்குப் பாய்ச்சும் தண்ணீர் ஆகிவிட்டது.”
“நெருப்பை நெய்கொண்டு அணைக்க முடியாது. எங்கள் காதலை இவர்கள் அலர் தூற்றுதல் மாற்றாது.”
“அஞ்சாதே என்று உறுதிதந்தவர் இன்று அவர் எஞ்சாதே வருவது தவிர்த்தார். மிஞ்சாது அலர் தூற்றுதற்கு நான் நாண முடியாது; பணியமுடியாது.”
“அலர் எங்களை இங்கே வாழவிடாமல் ஊரைவிட்டுத் துரத்துகிறது; உடன்போக்கு அதுதான் அடுத்த கட்டம். என் காதலர் அதற்கு உடன்படுவார். அதன்பின் அச்சிட்டு அழைப்பிதழ் தரவேண்டியதுதான்."