திருக்குறள் செய்திகள்/12
முறை கெடாமல் எதனையும் ஏற்றுச் செய்ய வேண்டும்; நிறைகெட்டால் பொருள் கிட்டும் என்பதற்காக நடு நிலைமை பிறழ்ந்தால் அவன் கெடுவது உறுதி ஆகும். தட்டு ஒரு பக்கம் சாயச் சீர்தூக்கும் கோலை வலியச் சாய்த்தால் அவன் சாய்வது நிச்சயம்.
நேர்வழியில் பொருள் ஈட்டினால் அதனைச் சீராக வைத்துக்கொள்ள முடியும்; அது நிலைத்து நிற்கும். குறுக்கு வழியில் சென்றால் சறுக்கி விழ வேண்டியதுதான். புதை குவியல் என்று செல்வத்தைச் சேர்த்து வைக்கலாம். அஃது அழுகிப் பின் கெடும் அவியல் என்று அவனுக்குத் தெரியாது.
உழைக்காமல் ஈட்டிய செல்வம் எளிதில் கிடைத்த பொருள் என்பதால் அதனைக் காக்கும் முயற்சி அவனிடம் இருக்காது. கொள்ளை அடித்த பொருள் அதன் அருமை தெரியாது; அணுஅனுவாகச் சேர்க்கும் பொருள் உழைப்பின் பின்னணியைக் கொண்டது; எளிய இன்பங்களுக்கு அவற்றை அளித்துவிட்டு அவன் பிறரிடம் காசுக் காகப் பல் இளிக்கும் நிலையை அடைகிறான்; அவன் வாழ்க்கையில் எளியன் ஆகிவிடுகிறான். அவன் விட்டுச் செல்லும் சந்ததிக்கு அவன் ஈட்டிய பொருள் எட்டவே எட்டாது. அப்படி அவர்கள் கைக்கு வந்தாலும் அவர்கள் அதனை வைத்துக் காப்பாற்ற மாட்டார்கள்; அழிக்கும்வரை அவர்கள் விழித்துச் செயல்படுவர்.
வாழும் போது ஒருவன் எப்படி வாழ்கிறான் என்பதனைப் பிறர் பேச மாட்டார்கள். அவன் கண் மூடியதும் மற்றவர்கள் அப்பொழுதுதான் தம் கண் திறந்து பார்ப்பார்கள்; அவன் குறைகள் வெளிப்படும்; சுத்தமான விமர்சனங்கள் நடைபெறும். தக்க வழியில் உழைத்துப் பொருளை ஈட்டினானா? தகாதவழியில் குவித்தானா? என்பன வெளிப்படும்.
நேற்று அடுக்கிய செல்வத்தோடு வாழ்ந்தவன் இன்று ஒடுக்கிய வறுமையில் உழன்று அடங்கிவிடுகிறான்; செல்வம் அதன் பெயருக்கு ஏற்ப அது செல்லும் இயல்பினது; இடத்திற்கு இடம் தாவும்: அஃது ஒரு நிலை கொள்ளாது: பொருள் இன்று வரும்; நாளை போகும்; அவன் நாணயம் ஒன்றைத்தான் மற்றவர்கள் நாநயம் விமரிசிக்கும்; பாராட்டும்.
ஒருவன் எப்படி வாழ்ந்தான்? எப்படிப் பொருளைச் சேர்த்தான்? என்பது அவன் வாழும்போது விளங்காது. தன்னை விற்று அவன் உயர்ந்தானா? அசைந்து கொடுக்காமல் கொள்கைப் பிடிப்போடு கொடி தாங்கினானா? என்பது அவன் மறைந்தபின்தான் பேசுவார்கள். ஒழுங்காக வாழ்ந்தவர்களின் மனச்சான்று தீர்ப்பாக அவர்களுக்கு நற்சான்றைத் தரும்; தவறான வழியில் பொருளை ஈட்டி அவர்கள் சலவைக்கல் பதித்து வீடுகட்டி இருந்தாலும் அவர்களை வெளுத்துக் கட்டாமல் இருக்கமாட்டார்கள்.
மனச்சான்று ஒருவனுக்கு ஆசான். குருவின் ஆணைக்குக் கீழ்ப்படிவதுதான் நன்மாணாக்கனின் கடமை; குருவை மீறி எந்தச் சீடனும் நடந்துகொண்டால் அவன் சீர் பெற முடியாது. நல்லது செய்து அதனால் அவன் கெட்டு விட்டாலும் அவனைப் பாராட்டாமல் இருக்கமாட்டார்கள். வறுமை கண்டும் அவர்கள் அவன் பெருமையைப் பேசுவர்; நன்மையில் புடம்போட்டு எடுத்த பொற்கலம் அவன் வாழ்வு எனப் போற்றுவர்; சமன்செய்து சீர்தூக்கும் தராசு போல ஒரு பக்கம் சாயாது வாழ்வது ஒருவனுக்குப் பெருமை தரும்; சால்பு உடையவன் என்று எடைபோட்டுக் கூறுவர். அவன் மதிப்பு உயரும்.
நடுநிலைமை கெட்டுப் பொருள் நாடும் நிலைமையைத் தான் ஊழல் என்று கூறுவர். ஊழல் பெருகினால் நேர்மை குறையும்; உழைப்பவன் இழப்பு அடைகிறான்; அவன் உழைப்பைப் பதவியில் இருப்பவன் உறிஞ்சிக் கொழுத்து விடுகிறான். இது சமூக அநீதி ஆகும்.
சொல்லில் நேர்மை இருந்தால் செயலிலும் சீர்மை இருக்கும். வார்த்தை தவறுவதற்கே காரணம் உள்ளத்தில் நேர்மையாக வாழ வேண்டும் என்ற உறுதி குலைவதால் தான். எனவே மனத்தாலும், சொல்லாலும், செயலாலும் தவறாமல் இருந்தால் அவ் வாழ்வு செப்பம் உடையது என்று கூறலாம்.
வாணிபம் செய்வது, ஏனைய தொழில்களைப் போல உழைத்துப் பொருள் ஈட்டுவது ஆகும். நாணயம், நேர்மை, நம்பிக்கை இதன் உயிர்நாடிகள்; எப்படியும் பொருள் ஈட்டிக் குவிப்பதுதான் இதன் நோக்கம் என்ற தவறான கருத்து உருவாகி உள்ளது; பிறர் பொருளையும் தம் பொருள்போல் மதித்து மிகையாகக் கொடுத்தாலும் அதனை ஏற்கக் கூடாது.
நாணயம் இருக்க வேண்டும். அது வாணிகத்தில் நம்பிக்கை ஊட்டி அதனை வளர்ப்பதற்கு உதவும். மிகையாகப் பொருள் பெற்றாலும் அது நடுவுநிலைமைக்குப் பகையாகவே அமையும்.