121. நினைந்து அவர் புலம்பல்
(தலைவனை நினைத்துத் தலைவி தனிமையில் வருந்துதல்)


தலைவி கூற்று

“நினைத்தாலும் மகிழ்வு செய்வது காமம்; அதனால் கள்ளினும் காமம் இனிது.”

“பிரிவிலும் பழைய இன்ப நினைவுகள் இன்பத்தைக் கூட்டுகின்றன.”

“தும்மல் வருகிறது; அடங்கிவிடுகிறது! காதலர் நினைக்கிறார்; உடனே அதனை நிறுத்திவிடுகிறார் போலும்.”

“என் நெஞ்சத்தில் அவர் நிலைத்து இருக்கிறார்; அது போல அவர் நெஞ்சில் எனக்கு இடம் தருகிறாரா? தெரியவில்லை.”

“அவர் நெஞ்சில் இடம் கொடுக்க மறுப்பவர், எந்த முகம் கொண்டு என் நெஞ்சில் இடம் கேட்டுப் பெறுகிறார்?"

“கூடிய காலத்துக் கிடைத்த இன்ப அலைகளை நாடி அதில் மயங்கிக் கிடக்கிறேன். இதுவும் ஓர் இன்பம்தான்.”

“பழைய நினைவுகள் என்னை வாழ்விக்கின்றன; பிரிவுத்துயர் என்னைத் தாழ்விக்கிறது.”

“அவரை எவ்வளவு மிகுதியாக நினைத்தாலும் அவர் அஃது எனக்குத் தகுதி என்று அனுமதிக்கிறார்; காதல் வாழ்க என்று வாழ்த்துகிறார்.”

“நீ வேறு நான் வேறு அல்ல’ என்று கூறியவர் தனித்து என்னைவிட்டுப் பிரிந்திருப்பது துயர் விளைவிக்கிறது.”

“நிலவே! நீ மறையாதே; என் காதலரை என் கண்கள் காண விழைகின்றன.”

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/121&oldid=1107147" இலிருந்து மீள்விக்கப்பட்டது