122. கனவுநிலை உரைத்தல்

தலைவி கூற்று

“காதலர் அனுப்பிய தூதாக வந்த கனவினுக்கு எவ்வாறு விருந்து அமைப்பேன் திகைக்கிறேன்.”

“கண்கள் உறக்கம் கொண்டில; அவை சற்று மூடினால் கனவில் என் காதலரைக் காண்பேன்; என் பிரிவுத்துயரை எடுத்து உரைப்பேன்.”

“நனவில் எனக்கு அருள் செய்திலர்; கனவில் அவரைக் கண்டு மகிழ்வேன்; உயிர் வாழ்வேன்."

“நனவு தாராத புதிய சந்திப்புகளைக் கனவு தருகிறது; கனவே நீ வாழ்க.”

“நனவில் அடைந்த இன்பம் அப்பொழுது அஃது உண்மையாக இருந்தது; கனவிலும் காண்பதும் உண்மை; இரண்டுக்கும் வேறுபாடே இல்லை.”

“நனவு ஒன்று தேவையே இல்லை; காதலரைக் கனவிலேயே கண்டு கொண்டிருக்க முடியும்.”

“நனவில் பிரிந்து வருத்தும் தலைவர், கனவில் வந்து ஏன் கூடி நெஞ்சை அலைவுறுத்துகிறார்?.”

“துயிலும்போது என் தோள்மேல் இருப்பார்; விழிக்கும்போது என் நெஞ்சில் ஏன் ஒளித்துக் கொள்கிறார்?”

“கனவுகளில் தம் காதலரைச் சந்திக்காத பெண்களே, தம் காதலர் கொடியவர் என்று பழி தூற்றுவர்; அன்பில்லாதவர் என்றும் அறைகுவர்.”

‘கனவில் அவர் வந்து போவதை அறியாதவர் காதலர் என்னைப் பிரிந்துவிட்டார் என்று பிழைபடப் பேசுவர்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/122&oldid=1107150" இலிருந்து மீள்விக்கப்பட்டது