திருக்குறள் செய்திகள்/127
தலைவி கூற்று
“நோக்கி நோக்கி என் கண்கள் ஒளி இழந்துவிட்டன; என் விரல்கள் நாள் எண்ணி எண்ணிச் சுவரில் தொட்டுத் தொட்டுத் தேய்ந்துவிட்டன."
“தோழி! என் தலைவரை ஒரு நாள் மறந்தாலும் என் தோள் அழகு குறைந்துவிடுகிறது.”
“வினை நாடி ஊக்கம் துணையாகச் சென்றார்; அவர் வருகை நாடி இன்னும் உயிர் வைத்துக்கொண்டிருக்கிறேன் யான்.”
“பிரிந்த காதலரை அடைய என் நெஞ்சு விம்மி அவாவுகிறது; பூரித்து எழுகிறது.”
“என் தலைவனைக் கண்களால் காண்பேன்; அப்பொழுதே பசலை என்னைவிட்டு நீங்கும்.”
“நாள் பல கடந்தாலும் அவருக்காகக் காத்திருப்பேன்; அவர் வரும் நாள் திருநாள்; என் வேட்கை தீர அவர் அணைப்புக்கு இணங்குவேன்; மகிழ்வேன்.”
“என் காதலர் வந்தால் புலப்பேனோ? அணைப் பேனோ? கலப்பேனோ என் செய்வேன்? எனக்கே தெரியாது.”
தலைவன் கூற்று
“அரசன் மேற்கொண்ட போர்வினை முடியும்; நானும் வீடுமுனை நோக்கிச் செல்வேன்; அவள் தரும் புது விருந்து அருந்தி மகிழ்வேன்.”
கவிஞன் கூற்று
“பிரிந்த தலைவன் வருகைக்காகக் காத்திருக்கும் மகளிர்க்கு ஒரு நாள் ஒரு யுகம்போல் தோன்றும்."
தலைவி கூற்று
“உள்ளம் உடைந்து சிதைந்துவிட்ட பிறகு அவர் வந்தால் என்ன? கலந்தால் என்ன? உடைந்த பானை கூடவா போகிறது?”