திருக்குறள் செய்திகள்/25
அன்பு அருளாக மலர்கிறது; இதை மனித நேயம் என்று கூறலாம். அருட்செல்வம் மதிக்கத் தக்க செல்வ மாகும். பொருட்செல்வம் கீழ் மக்களுக்கும் வந்து சேர்கிறது. அதனால் அதற்குப் பெருமை இல்லை.
எவ்வகையில் சிந்தித்துப் பார்த்தாலும் அருளறமே மனிதன் ஏற்றுக்கொள்ளத்தக்க சிறந்த அறமாகும். அருள் உள்ளம் கொண்டவர்கள் இந்த உலகத்துத் தீமைகளைக் கண்டு மருளவே மாட்டார்கள்; அறியாமை அவர்களை அணுகவே அணுகாது.
பிற உயிர்களைக் காத்து உதவும் அருள்மிக்க நெஞ்சு உடையவர்களுக்குத் தம் உயிரைப்பற்றிய அச்சம் தோன்றுவது இல்லை.
அருளை ஆள்பவர்க்கு எந்தத் துன்பமும் அணுகாது; இந்த உலகம் அதற்குச் சான்று பகரும். நல்லவர்கள் என்றுமே கெட்டதில்லை; நன்மை செய்பவர்க்கு எந்தத் தீமையும் வாராது.
குறிக்கோள் இல்லாத வாழ்க்கை உடையவர்களே அருளறத்தைப்பற்றிச் சிந்திக்காமல் வாழ்வர்.
காசு பணம் இல்லையென்றால் இவ்வுலகில் வாழ்வது கடினம் என்று பலரும் பேசி வருவர். அதேபோல அருள் இல்லாதவர்க்குத் தருமநெறியே அமையாது என்றும் கூறலாம். பொருளை இழந்தாலும் அதனை மறுபடியும் ஈட்டிக்கொள்ள முடியும். நன்மை செய்யும் வாய்ப்பை இழந்துவிட்டால் மறுபடியும் அந்த வாய்ப்புக் கிடைக்காது. அருளற்றவர் எக்காலத்தும் திருந்தி வாழ்வதற்கு வழியே கிடையாது.
தெளிவற்றவர் மெய்ப்பொருளைக் காண்பதில்லை. அதுபோல அருள்நோக்கு இல்லாதவன் செய்யும் தொழில் களில் எல்லாம் அறம் இருப்பதில்லை. அதனால் உலகுக்கு எந்த நன்மையும் விளையாது.
அருள் உள்ளம் தேவை என்பதற்கு விளக்கம் தேவையா? எளியவர் உன்னை அணுகும்பொழுது நீ இகழ்வுபட அவர் களை நோக்குகிறாய்! வலியார்முன் நீ எப்பொழுதாவது உதவியை நாடி அவரிடம் சென்றிருப்பாய்; அப்பொழுது நீ எவ்வளவு வேதனைப்பட்டிருப்பாய்? அதனை நினைத்துப்பார்; கூனிக்குறுகி உன்முன் நிற்கிறானே அவன் பலமுறை எண்ணிப் பார்த்தே வேறுவழியில்லாமல் உன்னை அணுகுகிறான் என்பதை அறிக. பிறர் துன்பம் தீர்ப்பது ஒவ்வொரு மனிதனின் கடமை ஆகும்.