திருக்குறள் செய்திகள்/26
தன் உடம்பில் ஊனைப் பெருக்குவதற்குத் தான் பிறிதின் ஊன் உண்பான் என்றால் அவன் எப்படி அருளை ஆள முடியும்?
பொருளைப் போற்றிக் காப்பாற்றாதவன் அதனை இழந்துவிடுவான்; அதுபோல் அருளைப் போற்றி நாடாதவன் அதனை ஆள இயலாது.
ஒன்றன் உடற்சுவை உண்டவரின் மனம் கொலையாளியின் மனம்போல் கொடியதாக இருக்கும்; அத் தகையவரே இச் செயலைச் செய்வர்.
பொருளற்ற செயல் யாது என்றால் கொலை செய்தல்; அறம் அற்ற செயல் யாது எனின் அதன் ஊனைத் தின்பது.
உயிர் வாழ்க்கை உயிரைக் கொன்றுதான் அமைய வேண்டும் என்பதனை ஏற்க இயலாது; ஊன் உண்டால் நரகம்தான் கிடைக்கும்.
தின்பதற்காக விலை கொடுத்து வாங்குவார் இல்லை என்றால், அதனைக் கொல்ல எந்த வியாபாரியும் வர மாட்டான்.
ஊன் என்பது பிறிது ஒன்றன் புண் என்று உணர்வாரேயானால் அதனை யாரும் உண்ணமாட்டார்.
குற்றம் நீங்கிய ஞானம் உடையவர்கள் உயிரைக் கொன்று அதன் ஊனைத் தின்னமாட்டார்கள்.
நெய் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்வதைவிட ஒன்றன் உயிர் அழித்து உண்ணாமை நல்லது ஆகும்.
புலால் உண்ண மறுக்கும் அருளாளனை எல்லா உயிரும் கைகூப்பித் தொழுது அஞ்சலி செலுத்தும்.