திருக்குறள் செய்திகள்/30
வாய்மை என்பது தீமை விளைவிக்காத சொற்களைப் பேசுவது என்பதாகும். பொய்யே துணிந்து பேசலாம்; ஆனால் அது நன்மை விளைவிப்பதாக அமையவேண்டும். குற்றம் தீர்ந்த நன்மை பயக்கும் என்றால் பொய்ம்மையும் வாய்மையாகும். நெஞ்சாரப் பொய் சொன்னால் அவன் நெஞ்சே அவனைச் சாடும்; மனச்சான்று அவனைக் கண்டிக்கும்.
ஒருவன் நினைவிலும் பொய் நீங்கி வாழ்வானாகில் அவன் உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் நிலைத்து இருப்பான். அவன் வாய்மையை விரதமாகக் கொண்டு ஒழுகுவான் ஆகில் தவமும் தானமும் செய்பவர்களைவிட மேலானவன் ஆவான்; பொய்யே பேசாது இருந்தால் அஃது அவனுக்குப் புகழைத் தரும்.
பொய்மை என்பதனை அறமாக மேற்கொண்டு அதனை முழுவதும் கடைப்பிடித்தால் அவன் வேறு எந்த அறத்தையும் பின்பற்றத் தேவையில்லை; இதிலேயே எல்லா அறங்களும் அடங்கிவிடுகின்றன.
உடம்பைத் தூயதாக வைத்துக்கொள்ள நீர் ஒன்றே போதும்; அதுபோல மனத்துய்மை வாய்மையால் அமையும். புற இருளை விலக்குவதற்கு எரிவிளக்குகள் தேவைப்படும்; அகி இருளைப் போக்குவற்குப் பொய்யாமை ஆகிய விளக்கு அவசியம் ஆகும். இதற்கு மற்றைய விளக்குகள் பயன்படா.
எண்ணி எண்ணிப் பார்த்தால் வாய்மையைத் தவிர வேறு எந்த அறமும் சிறந்தது என்று கூறமுடியாது.