திருக்குறள் செய்திகள்/37
ஆவல் என்பதனையே அவா என்று கூறுவர்; எதற்காகவாவது ஆசைப்பட்டுக் கொண்டே இருப்பது உயிர்களின் இயல்பு; ஆசை இல்லை என்றால் செயல் இல்லை; உலகத்தின் எல்லாச் செயல்களுக்கும் அவற்றைச் செய்ய வேண்டும் என்ற விருப்பமே துண்டுதல் ஆகும். மேலும் மேலும் தளைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றால் ஆசைகளைக் குறைத்துக்கொள்வது தான் வழி.
ஒருசிலர் ஆசைகளை நிறைய வளர்த்துக்கொள்கின்றனர்; பேயாக அலைகின்றனர்; அவர்களுக்கு உறங்குவதற்கும் நேரம் இருப்பது இல்லை. பொருள் தேவைதான்; எல்லாம் நமக்கே வேண்டும் என்று அலைந்தால் மன அமைதி கெடுகிறது; இன்பம் விடுபடுகிறது.
பந்தங்களை வளர்த்துக் கொள்வதால் கட்டுகள் ஏற்பட்டுவிடுகின்றன. அதனால் மற்றவர்கள் துன்பமும் நம்மைத் தாக்கிக்கொண்டு இருக்கின்றன. ஓய்வே இல்லை; உளைச்சல்தான் மிகுதி, நம்மால் சுமக்க முடியாத பொறுப்புகளை நாம் தலையில் இட்டுக்கொள்கின்றோம். மற்றவர்களுக்கும் பங்கிட்டுத் தந்தால் நாம் சற்று ஓய்வு பெறலாம்; நல்ல சிந்தனைகளில் காலம் கழிக்கலாம்.
மறுப்பு என்பது உறுதிபடைத்த நெஞ்சு உடையவர்க்கே இயலும். பதவிகளும், இன்ப சுகங்களும் தேடித் தேடி அலுத்துவிடுவோர் பலர். ஆசைகள் நம்மை அடிமை கொள்கின்றன. அவற்றிலிருந்து விடுதலை பெறுவதே இன்பத்துக்கு வழி; ‘வேண்டாமை’ என்று மறுக்கும் மன உறுதி மேலான செல்வமாகும். அதற்கு நிகரான செல்வம் வேறு இருக்காது.
மனம் அழுக்குப் பெறுவது ஆசைபற்றி அவதிகளுக்கு உள்ளாவதால்தான். மனம் துயநிலை பெற்றால் பாதிப்புகள் குறைந்துவிடுகின்றன. பொய்ப்பொருளை நிஜம் என்று நினைத்து அவற்றின்பின் பலர் ஓடுகின்றனர். கானல்நீரை நம்பி, அது நிஜம் என்று சென்றால் நம் வேட்கை தீராது. மெய்ப்பொருளைக் காணும் வேட்கை எழுந்தால் ஆசைகள் அறுகின்றன; மனமும் தூய்மை பெறுகிறது.
அறத்திற்குக் கட்டுப்பட்டு வேட்கைகளைக் குறைத்துக் கொண்டு நாள்களைப் போக்குவது நல்லது. இன்பங்களை விரும்பி ஆசைகளுள் சிக்கி அல்லல் உறுவது அறியாமை.
துன்பத்திற்குக் காரணமே ஆசைகள்தாம்; அவற்றை அறுத்து மெய்ப்பொருளை நாடிப் பற்றற்ற நிலைக்குச் சென்றால் அஃது இன்பம் தரும்; அவ் வின்பம் நிலையானது ஆகும்.
“ஆசைக்கு ஒர் அளவே இல்லை” என்று கூறுவர். அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைத்தால் நிரந்தரமான இன்பம் வாய்க்கும்.