38. ஊழ்

ஊழ் என்பது நம்மைச் சூழ்ந்துவரும் எதிர்பாராத சக்திகளின் செயல்; சூழ் என்ற சொல்லின் திரிபே ஊழ் என்பது ஆகும்; சூழ்நிலைதான் திரிந்து ஊழ் என்று திரிந்தது.

ஆவதற்கும் இந்தச் சூழ்நிலைதான் காரணம்; அழிவதற்கும் அதுவே காரணம் ஆகும். ஆகவேண்டும் என்று இருந்தால் சுறுசுறுப்புத் துணை செய்யும்; அழியவேண்டும் என்று இருந்தால் சோம்பல் இழுத்துப் பிடிக்கும்.

அறிவு ஆக்கம் தரும்; அறிவின்மை இழப்பைத் தரும்; அதற்கும் இந்தச் சூழ்நிலைகள்தாம் காரணம் ஆகும். நுண்ணிய நூல்கள் பல கற்றாலும் அவை கைகொடுப்பது இல்லை; சமய சந்தர்ப்பங்கள் அவையே வழிகாட்டும்; வழிதிறக்கும்.


ஒருவன் செல்வனாக இருப்பதற்கு அவன் பிறந்த குடும்பச் சூழ்நிலையே காரணம் ஆகிறது; அவன் முயற்சியும் துணை செய்கிறது. செல்வர்களைப் படைப்பதும் கல்வி வல்லவர்களை உண்டாக்குவதும் சூழ்நிலைகளே ஆகும்; இவற்றின் சூழ்நிலைகள் வேறுபட்டவை.


தொட்டது எல்லாம் சிலருக்குப் பொன் ஆகிறது; சிலருக்கு எது எடுத்தாலும் மண் ஆகிறது. செல்வம் பெருகுவதற்கும், அதில் இழப்பு ஏற்படுவதற்கும் இந்த ஊழ்தான் காரணம் ஆகிறது.


‘கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும்’ என்பர்; போக வேண்டும் என்று இருந்தாலும் யாரும் அதனைத் தடுத்து நிறுத்த முடியாது.


அடுக்கிய செல்வம் இருந்தாலும் ஒடுக்கிய வயிறு உடையவன் படுக்கையில் கிடக்க வேண்டியதுதான். அவன் வயிற்றுநோய்க்காரன் என்று மருத்துவர் சொன்ன பிறகு அனுபவிக்க அவன் அருகதை அற்றவன் ஆகி விடுகிறான்.


இந்த உலகில் எதுவும் உறுதி இல்லை; செல்வம் நிலைப்பது இல்லை; சூழ்நிலைகள் மாறலாம்; ஊழ் வலிவுடையது; அதன் ஆற்றலை அறிந்து ஒருசிலர் துறவும் கொள்கின்றனர்.


அதிர்ஷ்டம் துணை செய்யும்போது ஆகாயத்தில் பறக்கிறான்; அவனே படுபாதாளத்திற்குப் போய் விடுகிறான்; சந்தோஷப்பட்டவன் இப்பொழுது அழுது என்ன பயன்? எழுவதும் விழுவதும் அவன் கையில் இல்லை.

ஊழைவிட வலிமை மிக்கது யாதும் இல்லை. சூழ்நது செயல்பட்டாலும் விழுந்தவன் விழுந்தவன்தான். சூழ்நிலைகள் தனிமனிதனைவிட ஆற்றல் மிக்கவையாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/38&oldid=1106341" இலிருந்து மீள்விக்கப்பட்டது