திருக்குறள் செய்திகள்/39
படை, குடிமக்கள், விளைபொருள்கள், அமைச்சு, நட்பு, அரண் இவ் வாறும் அரசனது நல்லாட்சிக்கு அடிப்படைகள் ஆகும். இவற்றை அரசு அங்கம் என்றும் கூறுவர்.
அரசனிடம் தக்க படைவலிமை இருந்தால்தான் அவன் காவல் சிறப்புற அமையும்; படைஞர்களை அவன் ஊக்குவிக்க வேண்டும்.
குடிமக்கள் நலமாக இருந்தால்தான் அரசாட்சி நிலைக்க முடியும். அவர்களுக்கு அவன் காட்சிக்கு எளியவனாக இருந்து அவர்கள் குறைகளைக் கேட்டு அறிந்து தீர்க்க முற்பட வேண்டும்.
நாட்டுக்கு உணவு அடிப்படை, பொருள் உற்பத்திகளும் தேவை. இவற்றை உண்டாக்க அரசன் ஆக்கப் பணிகள் செய்ய வேண்டும். அவர்களிடம் வரிப்பணம் பெற்று அதனைத் தக்கபடி காத்துக் காத்தவற்றை அரச காரியங்களுக்குப் பங்கீடு செய்வது அவன் கடமை யாகும்.
5
அமைச்சர்களைத் தேர்ந்து எடுத்து அவர்கள் கூறும் கருத்துகளைக் கசப்பானதாக இருந்தாலும் செவிமடுத்துக் கேட்டு நல்லது கெட்டது ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும்.
தக்க நண்பர்களைத் தேடி வலிமை சேர்த்துக்கொள்ள வேண்டும்; நட்பினை ஆராய்ந்து தேர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
நாட்டுக்கு மதில், அகழி முதலிய அரண்களைச் சரிவர அமைத்துக் கொண்டு எதிரிகளின் தாக்குதல்களினின்று நாட்டைக் காப்பது அவன் கடமையாகும்.
நாட்டை ஆளும் அரசனுக்கு அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் இவை எப்பொழுதும் குறையவே கூடாது; அதற்கு விழிப்பு உணர்வு, கல்வி, துணிவுடைமை ஆகிய இம் மூன்றும் நிலைத்து இருக்க வேண்டும். அவன் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
ஆட்சி அறவழிகளில் இயங்க வேண்டும். நீதிக்கும் சட்டத்திற்கும் புறம் ஆகியவற்றை நீக்க வேண்டும். வீரம் குறையாத மானம் அவனிடம் நிலைத்து இருக்க வேண்டும். தன்னை இழித்துக் கூறினால் அவர்களை அழித்து ஒழிக்கச் செயல்பட வேண்டும். போர் தொடுக்க வேண்டும் எனில் அதற்கு அஞ்சக் கூடாது.
மக்களிடம் இனிய சொற்களைப் பேசி இரவலர்க்கும் புலவர்க்கும் ஏனைய கலைஞர்க்கும் ஈத்தளித்தலும் அவன் கடமையாகும்.
கொடை, அருள், செங்கோன்மை, குடிமக்களைக் காப்பது இந் நான்கும் உடையவனே பேரரசன் என்று பாராட்டப்படுவான்.