58. கண்ணோட்டம்
(தாட்சணியம்)

மிக்க அழகுடைய பெண்; அவள் தக்க உணவு பரிமாறுகிறாள்; மற்றவர்கள் பசியைப் போக்கி அவர்களை மகிழ்விக்கிறாள். உலகம் ‘பெண்ணே நீ வாழ்க’ என்று வாழ்த்துகிறது.

அந்தப் பெண் வேறு யாரும் இல்லை, தாட்சணியம் என்னும் நல்ல குணம்தான். உலகின் நடைமுறைகள் தயவு தாட்சணியம் இவற்றை ஒட்டித்தான் இயங்குகின்றன. அஃது இல்லாதார் நிலத்துக்குச் சுமையாவர்.

பண் இல்லை என்றால் பாடலுக்கு இனிமை இல்லை. அதுபோலத் தாட்சணியம் இல்லை என்றால் கண்ணுக்கு அழகு இல்லை.

இரக்கம் காட்டாத அசுர குணம் படைத்தவனைக் குருடர் என்றே கூறிவிடுவர். அந்த ஆளுக்குக் கண்ணே இல்லை ‘குருடன்’ என்று இழித்துக் கூறுவர்.

கண்ணுக்கு அழகு செய்வது மை அன்று; தண்மை; அதாவது தாட்சணியம். தாட்சணியம் இல்லாதவனை நொள்ளைக்கண்ணன் என்றுதான் குறிப்பிடுவர். அது கண் அன்று புண்.

அவன் கடின சிந்தையன்; அசைந்தே கொடுக்க மாட்டான்; அப்படியானால் அவனுக்கும் மரத்துக்கும் என்னதான் வேறுபாடு இருக்கிறது?

கண்கள் பார்வைக்குத்தான்; பார்த்தபின் நிகழும் செயற்பாடு சிந்தனை; கடுமை தவிர்த்துப் பரிதாபப்படு; மன்னிக்கக் கற்றுக் கொள்; அதுதான் கண்ணியம்.

இரக்கம் காட்டுதல் வேண்டும்; அதே சமயம் கடமையினின்று தவறக்கூடாது; சட்டதிட்டங்களையும் புறக்கணிக்காதே; அவற்றையே நன்மைக்குப் பயன்படுத்திச் செயலாற்றுக.

குற்றம் செய்தார் ஆயினும் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்பது இல்லை. சட்டங்கள் தண்டிக்க அல்ல; திருத்துவதற்கு ஏற்பட்டவை என அறிக.

நண்பர்களோ பகைவர்களோ நஞ்சைத் தந்தாலும் அச்சம் கொள்ளாமல் அமைதியாக ஏற்று அவர்களுக்கு இரக்கம் காட்டுதல் உயர் பண்பு ஆகும். பகைவனுக்கும் அருள் செய்யும் இரக்கப் பண்பும் கண்ணோட்டம் ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/58&oldid=1106397" இலிருந்து மீள்விக்கப்பட்டது