59. ஒற்றாடல்
(ஒற்றரைக்கொண்டு உளவுஅறிதல்)

பிறர் செய்யும் களவைத் தெரிந்துகொள்ள உளவு தேவையாகும். நாட்டு நடப்பியலை அறியவும், பகை நாட்டுப் போரியலைத் தெரிந்துகொள்ளவும் ஒற்றர்கள் தேவைப்படுவர். மற்றும் விஷயங்களை அறிந்துகொள்ள அவ்வத் துறைகளைப்பற்றிய நூல்களைக் கற்க வேண்டும். எட்டு அறிவும், ஒற்றர்கள் கொண்டுவந்து தரும் கூட்டு அறிவும் உண்மைகளை நிலைநாட்டத் தேவைப்படுவன ஆகும்.

அரசனது பார்வை விசாலமானதாக இருக்க வேண்டும். எங்கெங்கே என்ன நடக்கிறது? அதனை உடனுக்குடன் அவன் அறிய வேண்டும். விழித்துக் கண்மூடாத நிலையில் மூலை முடுக்குகள் எல்லாம் துருவி ஆராய்ந்து செய்தி கொண்டு தருபவர் அரசனுக்கு அவசியம் ஆகின்றனர். இவர்கள் நேரிடையாகச் செய்திகளைத் திரட்டமாட்டார்கள். யாரைச் சந்தித்தால் செய்தி கிடைக்குமோ அவர்களைச் சந்தித்துப் பேசித் தெளிவு பெறுவார்கள்.

அரசன்கீழ் வேலை செய்பவர் யாராக இருந்தாலும் அவர்கள்மீதும் ஒரு கண் வைத்துக்கொண்டே இருக்க வேண்டும். மேலோட்டமாகப் பார்த்துவிட்டு அப்பாவிகள் என்று ஒருசிலரைக் கருதி முடிவு செய்துவிடக்கூடாது.

“திருப்பதிக்குப் போய்வருகிறான்; அதனால் தீமை செய்யமாட்டான்” என்று முடிவு செய்துவிடக் கூடாது. வேண்டியவர், வேண்டாதவர், செல்வாக்கு உடையவர் என்ற இவ் வேறுபாடுகள் குறுக்கே நிற்கக்கூடாது. மதம் மிக்க யானைபோல அஞ்சாமல் எங்கும் புகுந்து விளையாட வேண்டும்; இடத்துக்குத் தகுந்த வேடம் போட்டு மற்றவர்கள் சந்தேகப்படாதபடி பழகிச் செய்திகளைத் திரட்ட வேண்டும்; காவி உடை அணிந்தும் செல்ல நேரிடும்; அதற்கும் தயங்கக் கூடாது.

புதிய செய்திகள் மற்றவர்களுக்குத் தெரியாதவை; அவற்றைச் சேகரிக்க வேண்டும். தெரிந்த செய்திகளே யாயினும் அவற்றை உறுதி செய்துகொள்ள ஆதாரங்களைத் தேடவேண்டும்.

ஒரே ஒற்றன் கொண்டுவந்த செய்தியை ஆதாரமாகக் கொள்ளக்கூடாது; மற்றொருவன் அதே செய்தியைச் சொன்னால் அஃது உண்மை என்று கொள்ளலாம். மற்றும் ஒருவனைக் கொண்டு உறுதிசெய்க.

யாரையும் இந்தத் துறையில் நம்பமுடியாது. அரசன் தான் அமர்த்திய ஒற்றனையே மற்றொரு ஆள் கொண்டு அவன் போக்கினையும் நடத்தையினையும் ஆராய

7 வேண்டும். எதிரிகள் இவர்களை எளிதில் விலைக்கு வாங்கி விடுவார்கள்; மகளிர் மயக்கத்திலும் தம்மை விற்றுக் கொள்வர். அதனால், இவர்கள் நடத்தையினையும் செயற்பாடுகளையும் அவர்கள் அறிய முடியாதபடி ஆராய்வது தக்கது ஆகும். ஒற்றர்களே சில சமயம் பகைவரிடம் காட்டிக் கொடுத்துவிடுவார்கள்.

ஒற்றனுக்குச் சீருடை தரக் கூடாது. அவர்கள் யார் என்பதை விளம்பரப்படுத்திக் கொள்ளும் முகவரி சட்டையில் ஒட்டிக்கொள்ளக் கூடாது. செயற்கு அரிய செயல்கள் செய்தார் எனினும் அவர்களுக்குப் பரிசோ பாராட்டுதலோ தந்து அதனால் அவர்களைப் பிரபல்யப்படுத்தக் கூடாது. அவர்களைச் சட்டைப் பையில் வைத்திருக்க வேண்டுமேயன்றிச் சட்டசபையில் கொண்டு வந்து நிறுத்தக் கூடாது. புகழ்பெற முடியாத துறை ஒன்று இருக்கிறது என்றால் இந்த ஒற்றாடல்தான். அஃது அவர்கள் உயிருக்கும் ஊறு விளைவிக்கும்; சுதந்திரமாக உலவ முடியாது; தான் எதனையும் அறிய முடியாமற் போய்விடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/59&oldid=1106402" இலிருந்து மீள்விக்கப்பட்டது