திருக்குறள் செய்திகள்/60
செயலில் காட்டும் ஆர்வமும், அதற்காக எடுக்கும் விடாமுயற்சியும் ஊக்கம் எனப்படும். தொடர்ந்து செய்வதில் தளர்ச்சி காட்டாதிருத்தலும் ஊக்கத்தின்பால் படும்.
ஒரு காரியத்தைச் செய்து முடிக்கக் கருவிகள் இருக்கலாம்; முதற்பொருள் இருக்கலாம்; எடுத்த காரியத்தில் நம்பிக்கையும், விடாமுயற்சியும், மேலும் தொடர வேண்டும் என்ற செயற்பாடும் இல்லை என்றால் தோல்விதான் காண முடியும். அந்தச் செயற்பாட்டைத்தான் ஊக்கம் என்பர்.
தோல்வி சில சமயம் எடுத்த வெற்றிக்குத் துணை யாவதும் உண்டு. தோல்வி தரும் பாடம் வெற்றிக்கு உதவ வேண்டும். ஏன் தோல்வி ஏற்பட்டது என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். தோல்வி கண்டு துவளக் கூடாது. ஊக்கம் மறுபடியும் ஆக்கம் தரும். ஊக்கமும் செயற்பாடும் இருந்தால் நன்மை அவனைத் தேடிக்கொண்டு வந்துசேரும்.
நீரில் பூக்கும் மலர்கள் அந்த நீரின் அளவே உயரும். அதுபோல மாந்தர்தம் ஊக்கத்தின் அளவாகவே அவர்கள் உயர்வும் அமையும்.
எண்ணும்போதே தாழ்வாக நினைக்காதே. எலி வேட்டைக்குச் செல்வது இழிவு; புலிவேட்டைக்குப் போகிறான் என்றால் அது பெருமை. எண்ணுவது எல்லாம் உயர்வாக எண்ணுக; அவை நிறைவேறாவிட்டாலும் கவலை இல்லை. அம்பு உடம்பில் புதைந்தாலும் யானை இடம்விட்டு அசையாது; அது தளராமல் கம்பீரமாக நிற்கும். அதுபோல நெஞ்சு உரம் உடையவர் எதற்கும் தளராமல் நிலைத்து நிற்பர். ஊக்கம் உடையவரே மனம் சோராமல் இருப்பர். உயிர்வாழ்வதற்குப் பொருள் தேவை; அது குறைந்தாலும் ஈட்டிக்கொள்ள முடியும்; இழப்பு எது வந்தாலும் உழைப்புக் குறையாமல் ஊக்கத்தோடு செயல்படுக.
யானை பெரியது; கூர்மையான கொம்புகளை உடையது; எனினும் புலி தாக்க முற்பட்டால் அஞ்சாமல் இருக்காது. யானை உருவம் பெரிது; எனினும் ஊக்கம் மிகுதியாக உடைய புலிக்கு அஞ்சத்தான் வேண்டியுள்ளது.
நெஞ்சு உரம் ஒருவர்க்கு ஊக்கம் தரும்; அதுவே செல்வமும் ஆகும். அஃது இல்லாதவர் மரம் என்றுதான் மதிக்கப்படுவர்; வெறும் சடம் என்றுதான் கூறவேண்டும்.