திருக்குறள் செய்திகள்/63
இடுக்கண் வருங்கால் அதனைக் கண்டு சிரித்துவிடு; கலங்காதே; மனம் துவளாவிட்டால் அதுவே முதல் வெற்றியாகும்.
துன்பம் அடுக்கி வந்தாலும் உள்ளம் ஒடுக்கம் இல்லாமல் இருந்தால் அவை இருக்குமிடம் தெரியாமல் மறைந்துவிடும்.
இடும்பைக்கு ஒர் இடும்பனாகச் செயல்படு; அஃது இடிபட்டு நொடியில் மறைந்துவிடும்.
செல்லும் வழி எல்லாம் எதிர்த்துப் போராடி, கரடு முரடான பாதையைப் பொருட்படுத்தாது வண்டியை இழுத்துச் செல்லும் எருதினைப் போலத் தடைகள் குறுக்கிட்டாலும் யோசித்து அவற்றிற்கு விடைகள் காண்பதுதான் அறிவுடைமை ஆகும்.
துன்பம் அடுக்கி வரலாம்; ஒவ்வொன்றாக அவற்றை எதிர்த்து வெற்றி கொள்வதுதான் வழி; கலக்கமில்லாமல் இருந்தால் எதனையும் விலக்கிக்கொள்ள முடியும்.
செல்வம் வந்தபோது அதனைக் காப்பாற்றாதவர் வறுமை உறும்போது அவதிப்பட்டு என்ன பயன்?
இந்த உடம்பு துன்பம் தாங்குவதற்கே படைக்கப் பட்டது என்ற மன இயல்பு கொண்டுவிட்டாலே எந்தக் கலக்கமும் அடையத் தேவை இல்லை.
இன்பத்தை விழைவது இல்லை; துன்பம் வந்தால் அது சகஜம் என்று மேற்கொள்பவன் எந்த நிலையிலும் துன்பம் உறுவது இல்லை.
துன்பம் வந்தாலும் அது தனக்கு ஒரு பாடம்; அனுபவித்துத்தான் தீரவேண்டும் என்று ஒருவன் கொள்வானேயானால் அவன் பகைவரும் மதிக்கும் சிறப்பினை அடைவான்.