71. குறிப்பு அறிதல்
(மன்னனது குறிப்பை அறிதல்)

அரசன் தான் கருதியதை வரிசைப்படுத்தி அமைச்சனுக்குக் கூறத் தேவை இல்லை; நா அசைவதை விடக் கண் அசைவு அதுவே போதும்; அஃது ஆற்றல் மிக்கது. அந்தக் குறிப்பை அறிய நுண்ணுணர்வு தேவைப் படுகிறது; அத்தகைய அறிவு படைத்தவன் பிறரால் மதிக்கப்படுவான். அவனே அமைச்சன் ஆவதற்குத தகுதி படைத்தவன் ஆகிறான்.

மற்றவர் என்ன நினைக்கிறார்? அதனைத் தெளிவாக அறிந்துகொள்ளும் ஆற்றல் நுட்ப அறிவு உடையவர்க்கே அமையும்; அவர்களைத் தெய்வத்துக்கு நிகராக மதிப்பர். அத்தகையவரை அமைச்சனாக ஏற்றுக்கொள்வது அரசனுக்கு நன்மையாகும்.

முகக் குறிப்பைக்கொண்டே மனக்கருத்தை அறியக் கூடிய மதிநுட்பம் உடையவரை எந்த விலை கொடுத்தும் அமைச்சர் பதவிக்கு அமர்த்திக்கொள்வது அரசர்க்கு அமைவு உடையது ஆகும். அத்தகைய ஆற்றல் உடைய அமைச்சர்கள் கூரிய அறிவு உடையவர்; அவர்கள் மற்றவர்களைவிட மதிக்கத்தக்கவர் ஆவர்.

கண்கள் வெறும் கண்ணாடி அல்ல பிம்பங்களைப் பிரதி பலிக்க முகக் குறிப்புகளைக்கொண்டு மனக்குறிப்பை அறிவதில் அவை ஆற்றல் மிக்கவையாகும். கண்கள் அறிவு விளக்கக் கதிர்கள்.

அடுத்த பொருள் இது என்று காட்டுவது பளிங்கு; அது போல் நெஞ்சம் கருதுவதை முகம் காட்டிவிடும். வெறுப்பையும், விருப்பையும் அறிவிப்பதில் முகம் முந்திக்கொள்கிறது.

அரசனும் அமைச்சனும் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள அவர்களுக்குச் சொற்கள் தேவை இல்லை; கைச் சைகைகள் வேண்டியது இல்லை; முகத்தொடு முகம் நோக்கினால் வாய்ச்சொற்களுக்கு இடமே இல்லை. எனவே முகமும் கண்களும் கருத்து அறிவிக்கும் கருவிகள் ஆகிவிடுகின்றன.

அரசன் பிறரைப் பகைக்கிறானா? அவரோடு நகைத்து உறவு கொள்கிறானா? என்பதனை அமைச்சன் மன்னவன் கண்களைக் கொண்டே அறிந்துவிடுவான்; அத்தகைய நுட்பம் அவனுக்குத் திட்பமாக அமையும்.

நுண்ணிய அறிவுடைய அமைச்சன், அரசன் கண்ணியது அறிய அவன் கண்களை நோக்கினால் அதுவே போதும். எனவே குறிப்பறிந்து செயல்படுபவனே அறிவுள்ள அமைச்சன் ஆவான்.

மனிதன் அறிவு நிரம்பியவன்; எதனையும் குறிப்பாக அறிவிக்கும் ஆற்றல் உடையவன்; எத்தகைய உணர்வுகளையும் ஒருவர் கண்களைக்கொண்டே நோக்கி அறிந்து கொள்ள முடியும். பார்வை ஆற்றல் மிக்கது; நுட்பம் வாய்ந்தது; குறிப்புகளை உணரவும் உணர்த்தவும் வல்லது ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/71&oldid=1106441" இலிருந்து மீள்விக்கப்பட்டது