72. அவை அறிதல்
(சபை அறிதல்)

அவையின் நடைமுறைகளை அறிந்துகொண்டு பொருத்தமான கருத்துகளைக் கூறுக; இடைஇடையே குறுக்கிட்டுப் பேசுவதைத் தவிர்க்க; பிறர் மனநிலையை அறிந்துகொண்டு தக்க சமயத்தில் தேவையான கருத்துகளைக் கூறுக; அவை அறிந்து முறைப்படிப் பேசுக. அப்பொழுதே கற்றவர் என்று உன்னைக் கருதி மதிப்பர்.

அறிவு மிக்கவர் மத்தியில் உன் அறிவுத் திறனைக் காட்டுக; அங்கு ஒளி பெற முயற்சி செய்க, சாமானியர் மத்தியில் உன் நூலறிவைக் கொண்டு திணிக்காதே; ஒன்றும் தெரியாதவர் போல் நடித்துப் பழகிக்கொள்; அவர்களுள் ஒருவனாக இருக்க முயற்சி செய்க.

அறிவு மிக்க சான்றோர் கூடிய அவையில் அடக்கம் மேற்கொள்வது தக்கது. தேவை இல்லாமல் முந்திக்கொள்ள வேண்டா. அவர்கள் பேசுவதைக் கவனி; அதுவே அவர்களுக்குச் செய்யும் மரியாதையும் ஆகும்.

கருத்துப் பிழைபடப் பேசிவிட்டால் அறிவு நிரம்பியவன் என்று மதிக்கமாட்டார்கள். மேலோர் சிறிது ஒழுக்கம் குன்றினாலும் அவர்களுக்கு இழுக்கு ஏற்பட்டு விடும். அதுபோலத்தான் கருத்தில் பிழைகள் ஏற்படுதல். கற்று அறிந்த அறிஞர் திறம்படப் பேசினால் பேசுபவனின் கல்வி, புலமை வெளிப்படும்; அத்தகைய அவைகளில் பேசுவது சிறப்பு ஆகும். அதனால் ஒருவனுக்குப் புகழும் மதிப்பும் உண்டாகும் -

அறிவு மிக்க மேதைகள் கூடி இருக்கும் அவையில் அவர்களுக்குத் தெரிந்தவற்றையே பேசுவது மிகையாகும். இது மழைநீர் பட்டுத் தானாக வளரும் பயிர்களுக்குக் குடத்தில் நீர்கொண்டு பாய்ச்சுவது போல ஆகும்.

அறிஞர் அவையில் அறிவிக்க வேண்டிய அதி அற்புதமான செய்திகளை, அவற்றைப் புரிந்துகொள்ள முடியாத சாமானியர்களிடையே பேசிக் காலத்தை வீண் படுத்தாதே; பசி இல்லாதவருக்கு இடும் உணவு அஃது ஆகும். அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது; மறந்தும் அவர்களிடம் கடினமான கருத்துகளைக் கூறாதே.

தாம் கூறுபவற்றைச் செவிமடுத்து அவற்றை ஏற்கும் நிலையில் இல்லாதவரிடம் அரிய கருத்துகளைக் கூறுவது அமுதத்தைக் கொண்டுபோய்க் கழிநீர்க் கால்வாயில் கொட்டுவதுபோல் ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/72&oldid=1106446" இலிருந்து மீள்விக்கப்பட்டது