78. படைச்செருக்கு

வீரர்கள் செருக்கு மிக்கவராக விளங்கினர்; எந்தச் செய்கையிலும் தம் வீரத்தின் முத்திரையைப் பொறித்தனர். ஒரு வீரன் கூறுகிறான். “என் தலைவன்முன் நிற்காதீர்; அவனை எதிர்த்துக் கல்லறைக்குச் சென்றவர்கள் பலர்’ என்கிறான். அவன் வீரம் போற்றப்படுகிறது. இவ்வாறு ஒருவன் படைச் செருக்கை மற்றொருவன் பாராட்டுகிறான்.

இவ்வாறே காட்டு முயலை வேட்டையாடி வெற்றி பெறுவதைவிட யானையை நோக்கி வேல் எறிவதைப் பெருமையாகக் கொள்கிறான் ஒருவன். அது குறி தவறினாலும் பரவாயில்லை என்று கருதுகிறான்; இதுவும் படைச் செருக்கு ஆகும்.

பகைவனுக்கு அருள் காட்டும் பண்பும் படைச் செருக்கு ஆகும்; இதனைப் பேராண்மை எனக் கருதினர். எதிரி ஊறுபட்டான் என்றால் அவனுக்கு உதவிசெய்தல் பெருமிதம் ஆகும். இதுவும் படைச்செருக்கு ஆகும்.

கையில் உள்ள வேலினை யானை மீது நோக்கி விட்டான்; அது பிளிறிக்கொண்டு செல்கிறது. ம்ற்றொரு யானை இவனை எதிர்நோக்கி வருகிறது. என்ன செய்வது? அவன் மார்பில் மற்றொரு வீரன் பாய்ச்சிய வேலினைத் தன் கையில் எடுத்துக்கொண்டு கொக்கரித்து ஆரவாரம் செய்கிறான்; மகிழ்ச்சியோடு அதனை விரட்ட முனைகிறான். இதுவும் படைச் செருக்கு ஆகும்.

போர் செய்து மார்பில் வீர வடுப் பெறாத நாள் எல்லாம் வாழ்ந்த நாளாக அவன் கருதுவது இல்லை; இதுவும் படைச் செருக்கு ஆகும்.

எதிரி வேல் எடுத்தாலும் அதனைக் கண்டு அஞ்சாமல் கண் இமைத்தலும் செய்யான்; இதுவும் படைச்செருக்கு ஆகும்.

உயிரை இழக்கத் துணிந்து தன் காலில் வீரக் கழலை அணிகிறான்; புகழ்தான் அவனுக்குப் பெரிது; உயிர் பெரிது அன்று: அக் கழல் அவனுக்கு அழகு செய்கிறது.

போர் தொடங்கிய பிறகு உயிர் இழப்புக்கு அஞ்சி அரசன் நின்று தடுத்தாலும் அதனைக் கேளாமல் களத்துக்குச் செல்லும் மாவீரம் அதுவும் படைச்செருக்கு ஆகும்.

வஞ்சினம் கூற, அதன் விளைவால் போர் தொடுத்து உயிர்விடும் வீரன் அவன்மீது யார் நடவடிக்கை எடுக்க முடியும்? யாரும் ஏன் இப்படிச் செய்தாய் என்று விசாரிக்க முடியாது. வஞ்சினம்தான் தனக்குப் பெருமை என வாழ்வான். இதுவும் படைச்செருக்கு ஆகும்.

தன்னை ஆளாக்கிப் போர்க்களத்துக்கு அனுப்பி வைத்த தலைவனுக்காக உயிர்விடுகிறான்; அவன் இறப்புக்கு வருந்திக் கண்ணிர்விடுகிறான் தலைவன். அந்தக் கண்ணிருக்காக விரும்பி மரணத்தை ஒருவன் ஏற்கலாம்; அது பெருமை தரக்கூடியது. இதுவும் படைச் செருக்கு ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/78&oldid=1106465" இலிருந்து மீள்விக்கப்பட்டது