திருக்குறள் செய்திகள்/82
ஒரே தட்டில் இருவரும் சோறு பகிர்ந்து உண்கிறார்கள்; நெருங்கிய நட்பு; அவன் அளவாக நிற்காமல் அத்து மீறுகிறான்; வங்கிக் கணக்கில் நண்பனுக்குத் தெரியாமல் கை வைக்கிறான்; பண்பு கெட்டால் அவனை விட்டு விலகுக: தீக்குச்சி உராயும்போதுதான் தெரிகிறது, அது நெருப்பை உண்டாக்குகிறது என்பது. பழகியவன் தான் எனினும் அழிவு கருதுபவனோடு இழையாதே.
காரியம் வரும்போது காலைப் பற்றுகிறான்; முடிந்த பின் அவன் தலை காட்டுவது இல்லை; கேட்டால் நேரம் இல்லை என்கிறான். அவனைக் கழித்துவிடுவதே தக்கதாகும்.
பயன் கருதிப் பழகும் நண்பன்; இவன் பொருளுக்காக முயங்க இடந்தரும் மங்கைக்கு நிகராவான்; கள்வனுக்கும் இவனுக்கும் வேறுபாடே இல்லை.
விழித்துக் கொண்டுதான் இருக்கிறாய்; அவன் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு இருப்பதனைச் சுருட்டுகிறான்; அத்தகைய தீயவனை விரட்டி அடித்துவிடு.
அறிவாளியின் நட்பு உனக்குக் கிடைக்கவில்லை. என் செய்வது? அதற்காக ஒரு முட்டாளின் தொடர்பையா தேடுவது? அவன் செய்யும் தவறுகள் உன்னையும் பாதிக்கும்; ஏன் அழிக்கவும் செய்துவிடும்; அறிவற்றவனின் தொடர்பு அறவே நீக்குக.
செய்யும் தொழிலைச் செய்யவிடாதபடி தடுத்துக் குறுக்கே நிற்பவரை மெதுவாகக் கழற்றிவிடவும்; எதுவும் விளக்கம் கூறாமல் பற்று அறுத்துக் கொள்க.
சொல்வது ஒன்று, செய்வது வேறு என்று மாறி நடப்பவரின் உறவு தேவை இல்லை; அதனைத்துறப்பதே மேலாகும்.
நேரே தனித்துப் பழகும்போது இனிக்கப் பேசுகிறான்; மன்றத்தில் பலர் முன்னிலையில் கசக்கச் சாடுகிறான்; இந்த முரண்பாடு உடையவன் உனக்கு அரண் ஆக மாட்டான் அவனை அகற்றிவிடு.