83. கூடா நட்பு
(உதவாத நட்பு)

பலரோடு பேசலாம்; சிலரோடு பழகலாம் மிகச் சில தோடுதான் நட்புக்கொள்ள முடியும். வெளுத்தது எல்லாம் பால் ஆகிவிடாது. சேர ஒட்டுவார்கள்; சமயம் பார்த்துக் காலை வெட்டுவார்கள். இவர்கள் கூடா நட்பினர். பாலுக்கும் சுண்ணாம்புக்கும் வேறுபாடு உள்ளது. இவர்கள் சுண்ணாம்பு என்பது, நீரில் போட்ட பிறகுதான் தெரியும். கொதிவந்ததும் தெரிந்துவிடும்.

மிக வேண்டியவன் என்று கூறி வந்து உன்னோடு அண்டிக்கொள்வார். சுரண்ட முடியவில்லை என்றால் புதிய நண்பனைத் தேடி அலைவார்; பொருட்பெண்டிர் மனம் போல இவர்கள் இடம் தாவுவர்.

சாத்திரங்கள் பல கற்றவனாக இருப்பான்; அவன் நேத்திரங்கள் மட்டும் திறப்பது இல்லை. அவன் மனம் திருந்துவதே இல்லை; அவனிடம் உண்மை அன்பு எதிர் பார்க்க இயலாது.

சிரித்துக்கொண்டே இருப்பான்; அவன் பையில் கத்தியை மறைத்து வைத்திருப்பான். எப்பொழுது எடுப்பான் என்ன செய்வான் என்று கூற முடியாது. சிரிக்கிறான் என்பதனால் அவனை நம்பிவிடாதே.

உள்ளங் கலந்து பழகாதவன் என்றும் அபாய அறிகுறியே; அவன் சொல்லைக் கொண்டு அவனை நம்பி விடாதே.

நண்பனைப் போல வேண்டியதை எடுத்துக் கூறுவான்; அவன் பகைவன் என்பது பின்னால் தெரிந்து விடும்.

பணிவாகப் பேசுகிறானே என்று கருதிக் கனிவாகப் பேசாதே; வில் வளைவதே பின் தாக்குவதற்கே.

தொழுத கையில் படை ஒடுங்கிக் கிடக்கும்; அழுத கண்ணீரும் அத்தகையதே.

அவன் சிரித்துப் பேசியே உன்னைக் கெடுக்கிறான் என்று தெரிந்தால், நீ வெறுத்துச் சினந்து பகைக்காதே. நல்ல விதமாக அவனிடம் இருந்து விலகிவிடு.

பகைவன் நண்பனாக நடிக்கிறான்; உன்னோடு ஒட்ட வருகிறான் என்றால் முகம் சுளித்து விலக்காதே. நீயும் சிரித்துக்கொண்டு அவனை ஒட்டவிடு, பின்னர் மெதுவாக உறவை நல்லவிதமாகவே வெட்டிவிடு.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/83&oldid=1106481" இலிருந்து மீள்விக்கப்பட்டது