திருக்குறள் செய்திகள்/84
ஒன்றும் தெரியாதவன் என்று சிலரைக் குறிப்பிடலாம். அப்படிக் கூறக் காரணம் என்ன? எதனையும் தெரிந்து கொள்ள முனையமாட்டார்கள்.
இந்த வியாபாரம் வேண்டா; நஷ்டம்தான் வரும் என்று சொன்னால் அவன் கேட்பதே இல்லை; அவன் தொடுகின்ற இடமெல்லாம் இழப்புதான். சொன்னாலும் ஏற்கமாட்டான்; சுயபுத்தியும் இருப்பது இல்லை.
“ஒழுக்கம் அது படி என்ன விலை?” என்று கேள்வி கேட்பான். சில நாள் வாழப் போகிறோம். அதற்குள் அனுபவித்துச் செத்துவிடலாம் என்று தத்துவம் பேசுவான். இவனை என்ன என்று சொல்வது? அறிவிலி என்றுதான் சொல்வார்கள்.
தவறு செய்வதற்கு வெட்கப்படமாட்டான்; யாரையும் நேசிக்கமாட்டான்; எதனையும் வைத்துக் காப்பாற்ற மாட்டான்; யாவற்றையும் இழப்பான்; அடகுக்கடையே இவனை நம்பித்தான் நடக்கிறது.
கெட்ட சகவாசம் அதிகம் இருக்கும்; மோசடி, கடத்தல் வியாபாரம் எல்லாவற்றிலும் கால் வைப்பான்; ஒரு நாளைக்குக் கட்டிப்போட்டு இவனைக் காவலில் வைப்பது உறுதி.
தப்பித்தவறி நாலுகாசு சம்பாதித்தால் தாறுமாறாகச் செலவு செய்வான்; ஊரார்க்குத் தானம் செய்துவிட்டு வீட்டில் ஊறுகாய் வைத்துக்கொண்டு பழஞ்சோறு சாப்பிடுவான்; சொந்தக்காரர்களைக் கவனிக்கமாட்டான்.
கையிலே காசு வந்துவிட்டால் அவனைப் பிடிக்கவே முடியாது. அவன் ஆடினதுதான் ஆட்டம்; வெறிபிடித்து அலைவான்; நெறி தவறுவான்.
அப்பப்பா! இந்த மாதிரி ஆள்களோடு பழகாமல் இருந்தால் தப்பித்தோம். யாருக்கும் எவருக்கும் எந்த இலாபமும் இல்லை. படித்த பெரிய மனிதர் கூட்டத்திலே கால் வைக்கவே இவனுக்கு அருகதை கிடையாது.