திருக்குறள் செய்திகள்/86
இகல் என்பது கடத்தல் என்னும் பொருளினது; எல்லை கடப்பது இகல்; அதாவது மாறுபடுவது எனப்படும்.
இயன்றவரை மறுத்துப்பேசாதே; பொறுத்துக் கொள்; கருத்து மாறுபட்டால் பகைகள் விருத்தியாகும்.
அவன் உன்னோடு வேறுபடுகிறான்; அதனால் மாறுபாடு கொள்கிறான். அவனிடம் அதனால் பகை கொள்ளாதே; கருத்து வேறுபாட்டுக்கு மதிப்புத் தருக.
கல்லைச் குத்துவான் ஏன்? கை நோகிறது என்று சொல்வான் ஏன்? அவனிடம் மோதிக்கொள்கிறாய்; அதனால் வேதனை அடைகிறாய்; பகை தவிர்த்து வாழ வேண்டும்; ஒருவகையாக ஒதுங்கி வாழ்வதே மேல்; அதுவே மன நிம்மதியைக் கொடுக்கும்.
எதிர்த்துப் பேசுவதே ஏற்றது என்று வாழ்பவர் என்றும் முன்னேற்றம் காண்பது இல்லை. நா அடக்கம் வேண்டும்.
வீண் வம்புகளை விலைக்கு வாங்குபவர் அவற்றிற்கு உரிய விலையைச் கொடுத்துத்தான் தீர வேண்டும்; ஏதோ வழியில் கிடப்பதை எடுத்துப் போட்டுக் கொண்டு குடைகிறதே என்றால் அது யார் தவறு?
தருமத்தில் கண்ணாக இருப்பவர் வீண் கருமங்களில் தலை இடார்; முரண்பட்டுத் தம் உரத்தைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது. நாணல் வளைந்து கொடுக்கிறது. நீர் வெள்ளம் அதனை அழிப்பது இல்லை; வளையாத நெடு மரம் வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போகப்படுகிறது.
பகையைத் தேடுபவன் அழிவை நாடுகிறான்; வீண் பகை பொல்லாதது; அது தவிர்த்து வாழ்க; பகை, நட்பு இவற்றில் உனக்கு எது வேண்டும்? நட்பு நலன்களை நல்கும்.