திருக்குறள் செய்திகள்/87
மனைமாட்சி, இறைமாட்சி, படைமாட்சி என்பவை போலப் பகைமாட்சியும் ஒரு தலைப்பாக அமைந்துள்ளது. பகைவனுடைய இயல்புகள் யாவை? இவை இரண்டையும் கூறுவது பகைமாட்சி எனப்படுகிறது.
பகை கொள்ளும்போது அதனை ஏற்கவும் செய்யலாம்; தவிர்க்கவும் முயலலாம். உன்னைவிட மிக்க வலிமை உடையவரோடு மோதுவதால் அழிவு உனக்குத்தான். அதனால் அவர்களோடு பகை கொள்ளற்க; உன்னைவிட வலிமை குறைந்தவன் எதிர்க்கிறான் என்றால், அப்பொழுதும் அமைதியைக் கையாள வேண்டும் என்பது இல்லை; பகையை ஏற்க.
பகைவனுடைய மாட்சிகள் ஒரு புறம் இருக்க எதிர்ப்பவரின் ஆற்றலையும் வலிமையையும் கணக்கிட்டுப் பார்க்க வேண்டும். தன்னந்தனியனாக ஒதுங்கி வாழ்ந்து விட்டுப் பகை என்று யார் மீதாவது பாய்ந்தால் இவன்தான் அழிவான்.
கோழைத்தனம் உடையவனும், அறிய வேண்டிய வற்றை அறியாதவனும், பிறரோடு நல்லுறவு இல்லாதவனும்; பொருள் ஈயும் பண்பு இல்லாதவனும் பகைவர்க்கு எளிதில் அடங்கிவிட வேண்டியதுதான்.
சினம் நீங்காதவனும், மனதைக் கட்டுப்படுத்தாதவனும், நிறையற்றவனும் எப்பொழுதும் யார்க்கும் எளியவன் ஆகிவிடுவான்.
எதிர்க்கும் வழிகளைச் சிந்திக்கமாட்டான்; வெல்லும் வாய்ப்புகளை மேற்கொள்ளமாட்டான்: தீயன செய்வதால் உண்டாகும் பழியை எண்ணிப் பார்க்கமாட்டான்; நற்பண்புகள் இல்லாதவன் ஆகிய இவன் பகைவர்க்கு எளியவன் ஆகிவிடுவான்.
கடுஞ்சினத்தவன், மிக்க காமம் உடையவன் இவர்களை எதிர்ப்பது எளிது; அவர் தோல்வியைச் சந்திப்பர்.
அடுத்து இருந்து கெடுக்கக் கூடிய தீயவனை எந்த விலை கொடுத்தும் அப் பகையை முடிக்க வேண்டும்.
நற்குணங்கள் இல்லாதவனாகவும், குற்றங்கள் பல புரிபவனாகவும் இருந்தால் அவன் துணை இன்றி இருப்பான். அவன் பகையை எளிதில் வெல்ல முடியும்.
அறிவு அற்றவராகவும், அஞ்சும் இயல்பினராகவும் இருந்தால் அவர்களை வெல்வது யார்க்கும் எளியது ஆகும்.
அறநூல்களைக் கல்லாதவனாக இருந்து அநீதிகளைச் செய்வானாயின் அவனை எதிர்ப்பது கடமையாகும். அப்படி எதிர்க்காவிட்டால் இகழ்ச்சியே உண்டாகும்; புகழ் அமையாது.