89. உட்பகை

நிழலும் நீரும் இனியன; அவையே நோய் செய்யும் எனின் கடுமைய; ஆரோக்கிய வாழ்வுக்கு இவற்றினின்று விடுபடலே நல்லது ஆகும்.

வாளைப் போன்ற பகைவர்களை விடக் கேளிரைப் போல் நடந்து உறவாடிக் கெடுப்பவர்கள் தீயவர்கள்; தேளைப்போல் கொட்டிக்கொண்டே இருப்பர்.

குயவன் மட்பாண்டம் செய்கிறான்; அவன் சறுக் கென்று அதன் கழுத்தைச் சக்கரத்தில் வைத்து அறுப்பான்; அறுப்பதே தெரியாது; நோகாமல் நோன்பு செய்து சாதிப்பர்.

புற்றில் உறையும் பாம்பு; அது எப்போது வெளிப் பட்டுச் சீறும் என்று கூற முடியாது.

உறவைக் கெடுக்கும் உறவினர் உள் இருந்தே சுரண்டி விடுவர்; அவர்களிடம் விழிப்புடன் பழகுக.

ஆகாத உறவினர் அவர்கள் வேகாத சோறு; அவர்களைச் சீரணம் செய்வது கடினம்.

சாடியும் மூடியும் ஒன்றாக இறுகத் தழுவிக்கொண்டு தான் இருக்கும். என்றாலும் சாடி வேறு; மூடி வேறுதான்.

முப்பட்டை தீட்டிய அரம்; அது சிறிய கருவிதான்; அஃது இரும்பை அராவிவிடும். எள்ளின் அளவுதான் உட்பகை; அவர்கள் உன்னைச் சுட்டு எரித்துவிடுவர்.

பொத்தல் குடிசை; நீ ஒற்றை ஆள்; பாம்போடு உறைய முடியாது; வீண்வம்பு; உட்பகை செய்பவர்களை முதலில் வெளியேற்றுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/89&oldid=1106497" இலிருந்து மீள்விக்கப்பட்டது