90. பெரியாரைப் பிழையாமை

யானைக்குத் தீங்கு இழைத்தால் அவன் பாகனாயினும் பகை தீர்த்துக் கொள்ளும். உன்னைவிட ஆற்றலும், அதிகாரமும், செல்வாக்கும் மிக்கு உள்ளவர்களைப் பகைத்துக் கொள்ளாதே.

எடுத்த காரியம் முடித்து வெற்றி பெற நீ அடுத்து உள்ள பெரியவர்களை நச்சி நட; அவர்களை ஆற்றல் குறைந்தவர் என்று அவசரப்பட்டுப் பேசிவிடாதே; அவர்கள், உதவுவதை நிறுத்திக் கொள்வார்கள்.

பெரியவர்களைத் துச்சமாக மதித்தால் நிச்சயம் அவர் தொடர்ந்து தொல்லைகளைத் தருவர்; அவர்களை மதிக்கக் கற்றுக்கொள்.

நீ கெட்டுத் தொலைய வேண்டும் என்று உறுதி கொண்டால் யாரும் உன்னைத் தடுக்க இயலாது; பெரியவர்களோடு மோதிக் கொள்; அவர்கள் உன்னை அழிக்காமல் இருக்கமாட்டார்கள்.

பெரியவர்கள் என்பவர்கள் அதிகாரம் மிக்கவர்கள். அவர்களை எதிர்த்துக்கொண்டு நீ வாழ முடியாது; அடங்கிப் போவதுதான் நல்லது.

தீயில் அகப்பட்டாலும் எடுத்துவிடலாம்; உயிர் தப்பலாம்; இவர்கள் சினத்தில் அகப்பட்டால் சிதறித்தான் போவாய்.

பக்கத்துணை பலர் இருந்தாலும் பகை தவிர்த்துப் பழகிக்கொள்; உன்னிலும் பெரியவர்களைப் பகைத்துக் கொள்ளாதே. நீ வாழ முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/90&oldid=1106498" இலிருந்து மீள்விக்கப்பட்டது