98. பெருமை

சிலர் வாழ்ந்தால் போதும்; புகழாவது இகழாவது அதனைப்பற்றிக் கவலைப்படுவது இல்லை. அதற்கு அருத்தமிருப்பதாக அவர்கள் நினைப்பதும் இல்லை. பேர் கெட்டுவிடும் என்றால் அதனைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.

வேளைக்குச் சோறு; இருக்க ஒரு வீடு; வசதிகள் இருந்தால் போதும். அவன் பெரிய மனிதன் என்று தன்னைத்தான் நினைத்து மகிழ்ந்து கொள்கிறான். இஃது ஒரு பிழைப்பு என்று கூற முடியாது.

நீ என்ன தொழில் செய்கிறாய்? உன்னால் இந்த உலகுக்கு என்ன பயன்? நிலத்துக்குச் சுமையாக இருக்கக்கூடாது; பிறர் மதிக்க வேண்டும். அதற்குச் சராசரி வாழ்க்கை போதாது.

சிலர் பதவி காரணமாகத் தாம் மேன்மக்கள் என்று கருதிக்கொள்வது உண்டு. ஆனால் அதற்குத் தக்கபடி செயல்கள் அமைவது இல்லை; சங்கு சுட்டாலும் வெண்மை தரும். உயர்ந்தவர்கள் வறுமையில் கெட்டாலும் ஒளிவிடுவர்.

கற்புடைய பெண்டிர் தம் நிலையில் தாழ்வது இல்லை. அதுபோல ஏதாவது தொழில் செய்துகொண்டு நாணயம் கெடாமல் புகழ்பட வாழ்வது அவசியமாகும். இதனையும் ஒருவகையில் கற்புக்கு நிகராகக் கூறலாம்.

‘பெருமை’ என்றால் ஒருசிலர் தாம் வைத்திருக்கும் பொருள் மிகுதியால் பிறர் மதிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பர். இஃது அவர்கள் கீழ்மையையே காட்டும் எனலாம். அவர்கள் சாதிப்பது என்ன? அரிய செயல் யாது? எப்படிப் பிறரோடு பழகுகின்றனர்? வீணாகத் தம்மை உயர்த்திப் பேசிக் கொள்கிறார்களா? செருக்கற்று வாழ்கின்றார்களா? பெருமை என்பதற்கு இந்த அடிப் படைகள் தேவை.

சிறியவர்கள் தம்மை உயர்த்தியே பேசிப் பிறர் மதிப்பைத் தேடுவார்கள். பெருமை உடையவர்கள் தன்னடக்கம் காட்டுவார்கள். அவர்கள் வாழ்வில் எளிமை இருக்கும். ஆடம்பரத்துக்கு அடிமையாகமாட்டார்கள்.

இவர்கள் பிறர் குறைகளைத் தூற்றிப் பேச மாட்டார்கள். சிறுமைக் குணம் படைத்தவர்கள் பிறர் குறைகளைக் கூறித் தூற்றுவதனை வழக்கமாகக் கொள்வர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/98&oldid=1106515" இலிருந்து மீள்விக்கப்பட்டது