திருக்குறள் செய்திகள்/99
நல்லது எதுவோ அதனை முன்னிருந்து நடத்துவது தான் சான்றாண்மை எனப்படும். நற்குணங்கள் நிரம்பிய பொற்பு அவர்களிடம் உண்டு. அவை அன்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை எனப்படுவன ஆகும். தவம் என்பது கொல்லாமை என்பர். சான்றாண்மைகூட ஒருவகையில் தவம் போன்றதே ஆகும். பிறர் தீமைகளைச் சொல்லாத நற்போக்கே சான்றாண்மையாகும்.
எதனையும் அடக்கமாகச் செய்வதுதான் சான்றாண்மை எனப்படும். விளம்பரமும் வீண் பெருமையும் அவர்களைத் தாழ்த்திவிடும். சால்புக்கு உரைகல் யாது என்றால் தனக்கு நிகர் அல்லாதவரிடத்தும் தம் தோல்வியை ஒப்புக் கொள்வது ஆகும்.
தீமை செய்தவர்களுக்கும் நன்மை செய்வதே சான்றோரின் நற்பண்புக்குச் சான்று ஆகும். அப்படி நன்மை செய்யாவிட்டால் அவர்கள் சான்றோர் என்று சொல்லிக் கொள்வதில் பொருளே இல்லை.
சால்பு என்னும் திண்மை உறுதி இருந்தால் அதுவே ஒருவனுக்குச் செல்வம் ஆகும். பொருள் இன்மை ஒருவனுக்கு இழிவு அன்று; மனத்தின் திண்மைதான் செல்வம் ஆகும்.
சான்றாண்மைக்கு வரம்பு என்று கூறப்படுபவர் ஊழிபெயர்ந்தாலும் தாம் தம் நிலை பெயரார். கடல்நீர் தன் கரை கடக்கலாம்; இவர்கள் தம் நிறை கடக்க மாட்டார்கள்.
சான்றோர் தம் சால்பு குன்றிவிட்டால் இந்தப் பூமியே தன் சுமையைத் தாங்காமல் சோர்ந்துவிடும்; உலகம் இவ் அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ளாது.