திருக்குறள் புதைபொருள் 2/001-010

1. கூத்தாட்டு அவைக்குழாம்

       "கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
        போக்கும் அதுவிளிந் தற்று."

என்பது திருக்குறளில் ஒரு குறள். “செல்வம் நிலையாது. அது அழிந்துவிடும்” என்பது இதன் கருத்து!

இது நிலையாமை என்ற தலைப்பில் வந்த ஒன்று. ‘இவ்வுலகில் தோன்றும் பொருள்கள் அனைத்துமே அழியக் கூடியன’ என்பதே நிலையாமை என்பதின் பொருள்.

“நிலையில்லாதவைகளை நிலைத்து நிற்கக்கூடியவை என எண்ணுவது அறிவுடையவர்க்கு இழிவு” என்று முதற்குறளில் கூறிய வள்ளுவர், அடுத்து “நிலைத்து நில்லாதவைகளில் செல்வமும் ஒன்று” என்று இக்குறளில் கூறுகிறார்.

“குறைந்த செல்வம் ஒருக்கால் அழியலாம்; நிறைந்த செல்வம் எப்படி அழியும்” என்று நினைப்பவரை நோக்கியே எச்சரிக்கை செய்கிறது இக்குறள். “அது எவ்வளவு பெரிய செல்வமாயினும் அழிந்து வீடும்” என்பதை இக்குறளில் உள்ள ‘பெருஞ்செல்வம்’ என்பது மெய்ப்பிக்கும், 

‘ஒரு பெருஞ்செல்வம் எப்படி இருக்கும்?’ என்ற கேள்விக்கு, வள்ளுவர், ‘நாடகக் கொட்டகைகளில் மக்கள் திரண்டு வந்திருப்பது போல’ என்று விடை கூறியிருப்பது பெரிதும் வியக்கக்கூடியதாகும்.

எங்கெங்கோ மக்கள் பெருங்கூட்டமாகக் கூடியிருக்க அவற்றையெல்லாம் விட்டுவிட்டு, நடப்பதைக் கண்டு மகிழக் கூடியிருக்கும் கலைஞர்களின் கூட்டத்தை மட்டும் பெருஞ்செல்வத்திற்கு உவமையாகக் காட்டியிருப்பது அவரது கலையுள்ளத்தையே நமக்குக் காட்டுவதாக இருக்கிறது.

எப்படி நாடகக் கொட்டகைக்கு மக்கள் ஒவ்வொருவராக வந்து பின் பெருங்கூட்டமாகக் காணப்படுகிறார்களோ, அப்படியே ஒருவனுக்குச் செல்வமும் சிறிது சிறிதாக வந்து, பின் பெருஞ்செல்வமாகத் திரண்டு காட்சியளிக்கும் என்ற கருத்தையும் இக்குறளிற் கண்டு மகிழுங்கள்.

நாடகத்திற்கு வரும்போது தனித்தனியாக வந்த மக்கள், நாடகம் முடிந்தபிறகு ஒன்று சேர்ந்து ஒரேயடியாய்ப் போய்விடுவதைப் போல, வருங்காலத்தில் கொஞ்சங் கொஞ்சமாய் வந்த செல்வம், போகுங்காலத்தில் ஒரேயடியாய்ப் போய்விடும் என்ற உண்மையை, இக்குறள் வெகு அருமையாக விளக்கிக்கொண்டிருக்கிறது.

நாடகக் கொட்டகைக்கு மக்கள் வரும்போது, ஒரு வழியில் மட்டும் வந்து, போகும்போது பல வழிகளிலும் போய்விடுவதுபோல, செல்வமும் ஒரு வழியில் வந்து, போகும்போது பல வழிகளிலும் போய்விடும் என்ற கருத்தை இக்குறள் மிகவும் அழுத்தமாகவே கூறிக் கொண்டிருக்கிறது.

‘செல்வம் வரும்போது மகிழ்வும், போகும்போது சோர்வும் ஒருவனுக்கு எப்படி உண்டாகும்?’ என்பதைக் காட்ட, நாடகத்தைக் காணவரும் ம க் க ளி ட ம் வரும்போது காணப்படும் மகிழ்வையும், போகும்போது காணப்படும் சோர்வையும் உவமையாகக் காட்டியிருப்பது பெரிதும் நயமுடையதாகக் காணப்படுகிறது.

“நாடகத்தை முன்வைத்து மக்கள் கூடுவதும், பிறகு கலைவதும்போல, ஒருவனது செயலை முன்வைத்துச் செல்வம் சேர்வதும் பிறகு அழிவதும் ஏற்படும்” என்ற கருத்தும் இக்குறளில் புதை பொருளாகப் புதைந்து காணப்படுகிறது.

இக்குறளில் உள்ள ‘போக்கும்’ என்ற சொல்லில் ‘ம்’ ஒன்றிருந்து, ‘போவதும் அப்படியே!’ என்று கூறுவதால், வருவதும் அப்படியே, இருப்பதும் அப்படியே, என்றும் கூறாமற் கூறுவதைக் கண்டு மகிழுங்கள்.

நாடகம் காணவரும்போது மகிழ்வு; காணும்போது இன்பம்; கலையும்போது சோர்வு உண்டாவதுபோல, ஒருவனுக்குச் செல்வம் வரும்போது மகிழ்வும், துய்க்கும் போது இன்பமும், தொலையும்போது துன்பமும் ஏற்படும் என்ற இக்கருத்தும் இக்குறளில் இல்லாம வில்லை.

ஒரே கூத்தாட்டு அவையை, மக்கள் நிறைந்து காணப்படும்போது நிறைந்த செல்வத்திற்கும், குறைந்து காணப்படும்போது குறைந்த செல்வத்திற்கும், கலைந்து போய்விட்ட பிறகு வறுமையின் இருப்பிடத்திற்கும் உவமை காட்டுவது எண்ணி எண்ணி வியக்கக்கூடியதாகும்.

கூத்தாட்டு அவைக்குழாம் என்பது ஒன்றல்ல; இரண்டு. ஒன்று கூத்தாட்டு அவையில் கூடுகின்ற குழாம்; மற்றொன்று கூத்தாட்டு அவையில் நடிக்கின்ற குழாம் ஆகவே நடிகர்களின் நடை, உடை, நடிப்பு, வேடம், கதை, காட்சி அனைத்தும் பொய்; நிலையற்றவை. நாடகம் முடிந்ததும், அவை அனைத்தும் அழிந்து ஒழிந்து ஒன்றுமே யில்லாமற் போய்விடும். அது போலவே உனது செல்வத்தின் தோற்றமும் இருப்பும் அழிவும் என்பதை வற்புறுத்தவே இக்குறள் தோன்றியிருக்கவேண்டும் எனத் தோன்றுகிறது.

செல்வம் வருகின்ற வேகத்தைவிட அது அழிகின்ற வேகம் அதிகமாக இருக்கும் என்பது கலைஞர்களைப் பொறுத்தவரையில் 100க்கு 95 பங்கு உண்மையாக இருக்கும் என்பதை எண்ணியே, வள்ளுவர் கூத்தாட்டு அவையை, குழுவை, உவமையாகக் கொண்டாரோ? என்றும் எண்ண வேண்டியிருக்கிறது.

செல்வம் நிலையாது! அது என்றும் உன்னிடம் நிலைத்துநிற்கும் என்றெண்ணி ஏமாற்றம் அடையாதே. கூத்து நடைபெறும் அவையில் கூடிக்கலையும் குழுவினரைப்போல ஒருநாள் அது உன்னைவிட்டு ஒழிந்து போய்விடும். ஆதலின் அறஞ்செய். அது நல்லது! என்பது இக்குறளின் திரண்ட கருத்து.

சிலப்பதிகாரத்தின் காலத்திற்கு முன்னுள்ள வள்ளுவர் காலத்திலும் நாடகக்கலை இருந்து வந்திருக்கிறது. நாடகங்கள் பல வள்ளுவர் காலத்தில் நடைபெற்றிருக்கின்றன. நாடகம் பார்ப்பதில் வள்ளுவருக்கும் விருப்பம் உண்டு. நாடகத்தையும் கண்டு களித்திருக்கிறார். அதுவும் எல்லோருக்கும் முன்னே சென்று அமர்ந்து பார்த்திருக்கின்றார். முன்புறத்தில் மட்டுமல்ல; பின் புறத்திலும் திரும்பிப் பார்த்து கூட்டத்தின் பெருக்கைக் கணக்கிட்டு மகிழ்ந்திருக்கிறார். நாடகம் முடிந்தபிறகு நெருக்கடியில் அகப்படாமல் இருந்து கடைசியாகவே வெளிவந்திருக்கிறார். நாடக அவையை. நாடகக் கலையை, நாடகக் கலைஞர்களைச் செல்வமாகக் கருதியிருக்கிறார். வெறுஞ்செல்வமாக அல்ல; பெருஞ்செல்வமாகவே கருதியிருக்கின்றார் என்ற இதுவும், இது போன்ற பிறவும், இக்குறளால் அறிந்து மகிழலாம்.

குறளைப் படியுங்கள், விரும்பிப் படியுங்கள். மேற்போக்காக அல்ல; கருத்துான்றிப் படியுங்கள். எழுதுவதற்காக அல்ல, பேசுவதற்காக அல்ல, நடப்பதற்காக என்று படியுங்கள். அப்படிப் படித்தால் அது உங்கள் வாழ்வை வளமாக்கும்.

வாழட்டும் குறள் நெறி!