திருக்குறள் புதைபொருள் 2/002-010
2. நகச்சொல்லி நட்பாடல்
"பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்."
என்பது திருக்குறளில் ஒரு குறள். இது “புறங் கூறாமை” என்ற தலைப்பில் வந்த ஒன்று.
வெஃகாமையைப் பற்றிக் கூறியதன் பின்னும், பயனில் சொல்லாமையைப் பற்றிக் கூறுவதன் முன்னும், வள்ளுவர் புறங்கூறாமையைப் பற்றிக் கூறியிருப்பது பெரிதும் நயமுடையதாகும். பிறர் பொருளை அடைய ஆசைப்படுதல் புறங்கூறுதலில் வந்து முடியும் என்பதும், புறங்கூறுகின்ற ஒருவன் பயனற்ற சொற்களைச் சொல்ல நேரிட்டுவிடும் என்பதும், இவ்வதிகார வைப்புமுறையால் பெறப்படும்.
“புறங்கூறுவது தவறு, அது சுற்றத்தார்களைப் பிரித்து விடும். இனியவைகளைக் கூறி அவரை நட்புக் கொள்ள அறியாதவரே புறங்கூறுவர்” என்பது இதன் பொருள்.
பொய்கூறல், புறங்கூறல், கடுஞ்சொற்கூறல், பயனில கூறல் ஆகிய நான்கும் மக்கள் நாவினாற் செய்யும் தவறுகள். இதில் புறங்கூறுதல் பொய்யை அடுத்துநின்று, “துணைத் தலைமைப்பதவியை” வகித்து நிற்கிறது. புறங் கூறலைக் கோள்மூட்டல், மூட்டல் எனவுங் கூறுவதுண்டு.
புறம் என்பது “ஒன்றிலிருந்து வேறானது” என்றாகும். கூறப்படுபவனும் புறம், கூறுபவனும் புறம், கேட்பவனும் புறம், இடமும் புறம், செய்தியும் புறம் ஆகும். ஆதலின் இதுபற்றிக் கூறுதல் “புறங்கூறல்” என வந்தது போலும்.
“பக” என்பது இரண்டெழுத்துள்ள ஒரு சொல். இச்சொல்லை ‘பகு - அ’ எனப் பிரித்து பகுக்க; பிரிக்க, நீங்கு மாற்றால் எனச் சுற்றிவளைத்துப் பொருள் காண்பதை விட “வெறுக்க” எனப் பொருள்காண்பது நல்லது எனத் தோன்றுகிறது. அவ்வாறாயின், வெறுக்கக் கூறுதல் என்பதே புறங்கூறல் என்றும், புறங்கூறல் என்பதே வெறுக்கக் கூறுதல் என்றும் அமையும்.
புறங்கூறுதலை புறஞ்சென்று கூறுதல் என்பர். அதுவும் நல்லவைகளையல்ல; தீயவைகளை. அதையும் அவரிடமல்ல; பிறரிடம் என்பர். இதனால் புறங்கூறுதல் என்பது ஒருவரைப் பற்றித் தவறான கருத்துக்களை அவரில்லாதபோது பிறரிடம் கூறிக்கொண்டிருப்பதை என நன்கு விளங்குகிறது. இது வெறுக்கத்தக்கது என்பது வள்ளுவரது கருத்து. இதனை இக்குறளிலுள்ள “பகச்சொல்லி” என்பது நமக்கு அறிவித்துக்கொண்டிருக்கிறது.
புறங்கூறும் செயலானது தொடக்கத்தில் புறங்கூறப் படுபவனை வெறுக்கச் செய்யும். அடுத்து சொல்பவனை வெறுக்கச் செய்யும். எனவே புறஞ்சொல்லல் என்பது வெறுக்கச் சொல்லல் என்றாகிறது. இதனையே “பகச்சொல்லி” என்பதும் சொல்லுகிறது போலும்.
பகச்சொல்லும் கொடுமை பண்பற்றவரது செயல். அது மக்கட் சமுதாயத்திற்கே வேண்டாத ஒன்று. அது தன்னையுடையவனை ஒரு இழிந்த மகனாகக் காட்டி, சுற்றத்தினரையும் வெறுக்குமாறு செய்துவிடும். ஆகவே புறங்கூறும் பழக்கமுடைய ஒருவன் சுற்றத்தார்களிடையே வாழத் தகுதியற்றவன் என்பது இக்குறளின் கருத்து. இவ்வுண்மையை, இக்குறளிலுள்ள “பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர்” என்ற சொற்றொடரால் நன்கறியலாம்.
கேளிர்ப் பிரிப்பர் என்பது கேளிரைப் பிரிப்பர் எனறாகும். இதனால் சுற்றத்தார்களைப் பிரிந்து வாழும் வாழ்வு எவ்வளவு உயர்ந்ததாக இருப்பினும், அது ஒரு சிறந்த வாழ்வாக இராது என்பதையும், அத்தகைய ஒரு சிறந்த வாழ்வைப் புறங்கூறும் ஒருவன் அடைய முடியாது என்பதையும் இக்குறள் கூறி, நம்மை எச்சரிக்கை செய்வதாக எண்ணவேண்டியிருக்கிறது.
கேளிர்ப் பிரிப்பர் என்பது கேளிரையும் பிரிப்பர் என்றுமாகும். இதனால் புறங்கூறும்கொடுஞ்செயலானது தன்மீது பற்றுக்கொண்டுள்ள உற்றார் உறவினரையும் பிரித்து வைத்துவிடும் என்றாகிறது. “சுற்றத்தார்களையும் பிரித்து வைத்துவிடும்” என்பதனால், பிறரை என்னென்ன செய்யும் என்பதையும் இக்குறள் கூறாமற் கூறியிருப்பதாகக் கொள்ளவேண்டியிருக்கிறது.
உற்றார் உறவினர்களிடம் இருந்து பிரிவதால் தமக்கு ஒரு கேடுமில்லை என எவரும் எண்ணிவிட முடியாது. ஏனெனில், சுற்றத்தார்களிடமிருந்து ஒருவன் எவ்வளவு தூரம் பிரிந்து செல்லுகிறானோ, அந்த அளவிற்கு அவன் வேண்டாதவர்களை நெருங்கிவிடுகிறான். எனவே, “சுற்றத்தார்களிடமிருந்து பிரியாயிலிருக்க வேண்டும் என்பதற்காகவாவது புறங்கூறாதே” எனப் புறங்கூறும் மக்களின் நலன்களைக் கருதியும், இக்குறள் அறம் கூறும் தன்மையில் அமைந்திருப்பது வியக்கக்கூடியதாகும்.
ஒத்த பண்பும், பணியும், நட்பும் உடைய சுற்றத்தார் இருவருக்கிடையில், ஒருவன் சென்று புறங்கூறுவானாயின், அது அவர்களில் ஒருவரை ஒருவர் பகைக்கச் செய்து, அவர்களிருவரையும் பிரித்து வைத்துவிடும். ஆதலின் ‘கேளிர்ப் பிரிப்பர்’ என்பதை, “கேளிரிற் பிரிப்பர்” என்றும் கொள்ளலாம்போலத் தெரிகிறது.
வீரமற்றோர், ஈரமற்றோர், பொய்யர், வஞ்சகர், பொறாமை கொண்டோர் ஆகியவரே புறங்கூறித் திரிவர். ஆதலின், அத்தகைய மக்களை அவர்களது சுற்றத்தார் தங்களில் ஒருவராக ஏற்க அஞ்சி வெறுத்தொதுக்கிப் பிரித்துவிடுவர். இதனால் புறங்கூறு வோரைப் ‘கேளிரும் பிரிப்பர்’ எனவும் கொள்ள வேண்டியிருக்கிறது.
புறங்கூறுகின்ற ஒருவனை அவனது சுற்றத்தாரும் பிரித்துவிடுவர் என்பதிலிருந்து, புறங்கூறுவார்க்குத் துணையாவார் இவ்வுலகில் எவருமில்லை என இக்குறள் அறுதியிட்டுக் கூறுவதாகவும் தெரியவருகிறது.
உறவினர்களுடைய குற்றங்களைக் கூறுவதே இத்தகைய விளைவுகளை உண்டாக்கிவிடுமானால், பிறருடைய, அதிலும் பகைவர்களுடைய குற்றங்களைக் கூறுவது என்னென்ன விளைவுகளை உண்டாக்கும் என்பதையும், இக்குறள் நம்மைச் சிந்தித்துப் பார்க்கும் படி தூண்டிக்கொண்டிருக்கிறது.
உள்ள குறைகளைப்பற்றிக் கூறுவதனாலேயே புறங்கூறும் ஒருவனுக்கு இத்தகைய தீமைகள் விளையுமானால், இல்லாத குற்றங்களை ஒருவர்மீது ஏற்றிக் கூறுவதன் மூலம் என்னென்ன விளைவுகள் உண்டாகும் என்பதையும் இக்குறள் நம்மை எண்ணிப்பார்க்கும்படி செய்கிறது.
புறங்கூறும் மக்களை வள்ளுவர் தமக்கு அறிமுகம் செய்துவைக்கும் சொல்லே ஒரு நல்ல சொல். அது கொடியர், தீயர், பொய்யர், வஞ்சகர், பொறாமையாளர் என்பதல்ல; அது "அறியாதவர்" என்பதே, இதனை இக்குறளின் ஈற்றிலுள்ள "தேற்றாதவர்" என்ற சொல்லால் அறியலாம். இது அவரது பண்பட்ட உள்ளத்தையே நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறது.
அறியாதவரைக் காட்டுவதிலும், "நகச்சொல்லி நட்பாடலை அறியாதவர்" என விளக்கத்தோடு காட்டுகிறார். நட்பாடல் என்பது நட்புக்கொள்ளுதல் என்றும், நகச்சொல்லுதல் என்பது பிறர் மகிழும்படி சொல்லுதல் என்றும் ஆகும். எனவே, புறங்கூறும் கொடுமையானது பிறரை நட்புக்கொள்ளத் தெரியாதவரின் செயல் என இக்குறள் கூறுவது ஒரு பெரிய உண்மையை வெளியிடுவதாகவும் காணப்படுகிறது.
"தேற்றாதவர்" என்ற சொல்லின் பொருள், ஒன்றுமே தெரியாதவர், எதையுமே அறியாதவர் என்பதல்ல; "தெரிந்தும் அதைச் செய்ய அறியாதவர்" என்றே ஆகும்.
பிறர் மகிழும்படி இனிய சொற்களைச் சொல்லி நட்புக்கொள்ளத் தெரியாதவர்களே, பிறர் வெறுக்கும் படி புறங்கூறிச் சுற்றத்தார்களையும் பகைத்துக் கொள்வர் என்பதே இக்குறள் முழுவதும் பரவி நிற்கும் கருத்தாகும்.
பகச்சொல்வது கேளிரையும் பிரிக்கும் என்று இக்குறள் கூறுவதால் நகச்சொல்வது பகைவரையும் நட்பாக்கும் என்பது கூறாமலேயே விளங்கும்.
நகச்சொல்லும் பண்புடையாளர் பகச்சொல்லத் தெரியாதவர். பகச்சொல்லும் பழக்கம் உடையவர் நகச்சொல்லத் தெரியாதவர். ஆகவே இக்குறள் இந்தத் தெரியாதவரையும் தெளியாதவரையும், அவரது சொல்லோடும், செயலோடும், விளைவோடும் நமக்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது.
புறத்தில் துாற்றுவர் என்பதால், “நேரிற் புகழ்வர்” என்றாகிறது. இதனை வள்ளுவர் மற்றொரு குறளில் “புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்தல்” என்கிறார். அத்தகைய மக்கள் வாழ்வதைவிட மடிவது நல்லது என்பதும் அவரது கருத்து.
“புறங்கூறுதல் என்பது மக்கட்கு வேண்டாத ஒன்று. புறங்கூறி வாழ்கின்ற வாழ்வு நல்வாழ்வு ஆகாது. அதன் விளைவு மிகக் கொடியது! அதனைச் செய்பவர் தெளிவற்றவர்! அதிலும் நல்லவைகளைக் கூறி நட்புக் கொள்ளத் தெரியாதவர்” என்பதே இக்குறளின் முடிவு.
படியுங்கள் குறளை மறுபடியும்...
"பகச்சொல்லி கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்."
எப்படி இக் குறள்? இந்த குறளே நமக்கு இவ்வளவு அறிவுரைகளை வழங்குமானால், மற்ற ஆயிரத்து முன்னுாற்று இருபத்தொன்பது குறள்களும் எவ்வளவு அறிவுரைகளை வழங்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்.
எடுங்கள் கு ற ளை ! படியுங்கள் நன்றாக! திருக்குறளைப் படிப்பதும் கட்டுரைகள் எழுத, சொற்பொழிவுகள் நிகழ்த்த, நூல்கள் வெளியிட, புலவன் ஆக, பொருள் திரட்ட, மேற்கோள்கள் காட்ட என எண்ணிப் படிப்பது பயனற்றதாகும். படித்து அறிந்து, அதன்படி நடந்து ஒழுகவேண்டும் என எண்ணிப் படிப்பதே பயனுள்ளதாகும்.
புறங்கூறுதல் என்பது ஒரு கொடிய நோய். அதை எளிதிற் போக்க இயலாது. அதை ஒழிக்கும் மருந்து மருத்துவ நூல்கள் எதிலுமேயில்லை. திருக்குறள் ஒன்றே அதனை ஒழிக்கும் ஒரே மருந்தைக் கூறுகிறது. அது எது தெரியுமோ? “எவரிடமும் இனியதைக் கூறு” என்பதே! செய்வீர்களா?
வாழட்டும் தமிழ்மொழி!
வளரட்டும் குறள் நெறி!!