திருக்குறள் மணக்குடவருரை/இனியவைகூறல்

௨௬-வது.-இனியவை கூறல்.

இனியவை கூறலானது, கேட்டார் மனம் மகிழும் சொற்களைக் கூறுதல். [இஃது, அருளுடையாரிடத்து நிகழ்வ தொன்றாதலின், அருளுடைமையின் பின் கூறப்பட்டது.]

கனமர்ந் தீதலின் நன்றே, முகனமர்ந்
தின்சொல னாகப் பெறின்.

இ-ள்:- அகன் அமர்ந்து ஈதலின் நன்று-மனம் பொருந்திக் கொடுத்தலினும் நன்று; முகன் அமர்ந்து இன்சொலன் ஆக பெறின்-முகம் பொருந்தி இன்சொல் சொல்லவல்லவ னாயின்.

[ஏகாரம் அசை.]

இஃது, இனிய பார்வையோடு இன்சொல் கூறுதல் அன்போடு ஈதலினும் சிறந்த தென்றது. ௨௫௧.

முகத்தான் அமர்ந்தினிது நோக்கி, அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.

இ-ள்:- முகத்தான் அமர்ந்து-கண்ணாலே பொருந்தி, இனிது நோக்கி- இனிதாக நோக்கி, அகத்தான் ஆம் இன்சொலினதே-மனத்தோடே பொருந்திய இன்சொல்லையுடையதே, அறம்-அறமாம்.

இஃது, இனிய பார்வையையும் இனிய சொல்லையு முடையதே அறமா மென்றது. ௨௫௨.

ல்லவை தேய அறம்பெருகும், நல்லவை
நாடி இனிய சொலின்.

இ-ள்:- நல்லவை நாடி இனிய சொலின்-நல்லவான சொற்களை ஆராய்ந்து இனியவாகச் சொல்லுவானாயின், அல்லவை தேய அறம் பெருகும்- அதனானே அறமல்லாதன தேய அறம் வளரும்.

இது, நல்ல பொருள்களை இன்சொற்களால் சொல்லின் மறம் கெடுமெனவும் அறம் வளருமெனவும் கூறிற்று. ௨௫௩.

ணிவுடையன் இன்சொல்ல னாதல், ஒருவற்
கணி;அல்ல மற்றுப் பிற.

இ-ள்:- ஒருவற்கு அணி-ஒருவனுக்கு அழகாவது, பணிவுடையன் இன்சொல்லன் ஆதல்-தாழ்ச்சியுடையனாய் இனிய சொற்களைக் கூற வல்லவன் ஆதல்; பிற அல்ல-பிறவாகிய அழகெல்லாம் அழகெனப்படா. [மற்று - அசை.]

இது, தாழ்ந்தொழுக வேண்டு மென்பதும், அதனாலாம் பயனும் கூறிற்று. ௨௫௪.

சிறுமையுள் நீங்கிய இன்சொல், மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.

இ-ள்:- சிறுமையுள் நீங்கிய இன்சொல்-புன்மையுள் நின்று நீங்கிய இனிய சொற்கள், இம்மையும் மறுமையும் இன்பம் தரும்-இம்மையின் கண்ணும் மறுமையின் கண்ணும் இன்பத்தைத் தரும்.

இஃது, இன்சொல்லும் புன்மை யற்றதா யிருத்தல் வேண்டுமென்பதூஉம், அதனால் இம்மையிலும் மறுமையிலும் இன்பம் சித்திக்கு மென்பதூஉம் கூறிற்று. ௨௫௫.

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும், யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.

இ-ள்:- துன்பு உறும் அவ்வாமை இல்லாகும்-துன்பம் உறுவிக்கின்ற நுகராமையாகிய நல்குரவு இல்லையாகும், யார்மாட்டும் இன்பு உறும் இன்சொல் அவர்க்கு-யாவர் மாட்டும் (கூறும்) இன்பம் உறுவிக்கின்ற இனிய சொல்லை உடையார்க்கு.

இஃது, இன்சொல் இம்மையில் கேடுறாமல் செய்யு மென்றது. ௨௫௬.

யனீன்று நன்றி பயக்கும் பயனீன்று,
பண்பின் தலைப்பிரியாச் சொல்.

இ-ள்:- நயன் ஈன்று-பிறரால் விரும்பப்படுதலையும் பயந்து, பயன் ஈன்று -பொருளையும் பயந்து, நன்றி பயக்கும்-அறத்தினையும் பயக்கும், பண்பின் தலைப்பிரியா சொல்-குணத்தினின்று நீங்காத சொல். [குணம் - இனிமை.]

இஃது, இன்சொல் நட்பையும் பொருளையும் அறத்தையும் பயக்கு மென்றது. ௨௫௭.

ன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

இ-ள்:- செம்பொருள் கண்டார் வாய்ச்சொல் இன்சொலால்-(இருவர் மாறுபடச் சொன்ன மாற்றத்தினது) உண்மைப் பொருளைக் கண்டார் கூறும் மெய்யாகிய சொற்களும் இன்சொல்லாதலானே, ஈரம் அளைஇ படிறு இலவாம்-(அவை) அருளோடு பொருந்திக் குற்றம் இலவாம்.

இஃது, ஒருவனைக் கடிந்து சொல்ல வேண்டும் இடத்தும் இன்சொல்லாலே கடிய வேண்டு மென்றது. ௨௫௮.

ன்சொல் இனிதீன்றல் காண்பான், எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.

இ-ள்:- இன்சொல் இனிது ஈன்றல் காண்பான்-(பிறனொருவன்) இனியவாகச் சொல்லும் சொற்கள் தனக்கு இன்பத்தைப் பயத்தலைக் காண்பான், வன்சொல் வழங்குவது எவனோ-(அவற்றிற்கு மறுதலையாகிய) வன்சொற்களை வழங்குவது எப்பயனை நோக்கியோ? [கொல் - அசை.]

இது, வன்சொல் சொல்லுதல் மடமை யென்றது. ௨௫௯.

னிய உளவாக இன்னாத கூறல்,
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

இ-ள்:- இனிய உளவாக இன்னாத கூறல்-(இனியவாகச் சொல்லும் சொற்கள் பிறர்க்கு இன்பத்தைத் தருதலைக் கண்டவன்) இனிய சொற்கள் இருக்க (அவற்றை விட்டு)க் கடிய சொற்களைக் கூறுதல், கனி இருப்ப காய் கவர்ந்த அற்று-(பழமும் காயும் ஓர் இடத்தே கண்டவன்) பழங்கள் இருக்க (அவற்றை விட்டு)க் காயைக் கொண்ட தன்மைத்து.

[கவர்ந்து என்பது ஈற்றகரம் கெட்டு நின்றது.]

இஃது, இனிய சொற்களை விட்டுக் கடிய சொற்களைக் கூறுதல் தமக்கும் துன்பத்தை விளைக்கு மென்றது. ௩00.