திருக்குறள் மணக்குடவருரை/கடவுள் வாழ்த்து
திருவள்ளுவர்
திருக்குறள்.
மணக்குடவருரை.
அறத்துப்பால்.
பாயிரம்.
[பாயிரமாவது, நூன்முகம்.]
முதலாவது.--கடவுள் வாழ்த்து,
[கடவுள் வாழ்த்தாவது, கடவுளை வாழ்த்தும் வாழ்த்து.)
அகர முதல எழுத்தெல்லாம்; ஆதி
பகவன் முதற்றே உலகு.
இதன் பொருள்:- எழுத்தெல்லாம் அகரம் முதல - எழுத்துக்களெல்லாம் அகரமாகிய எழுத்தைத் தமக்கு முதலாக உடையன; (அவ்வண்ணமே), உலகு ஆதிபகவன் முதற்று - உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக உடைத்து,
உலககாரணன் ஆதிபகவ னென்றார். ௧
கற்றதனா லாய பயனென்கொல், வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்?
இ-ள்:- கற்றதனால் ஆய பயன் என் - (மேற்கூறிய எழுத்தினானாகிய சொற்களையெல்லாம்) கற்றதனானாகிய பயன் (வேறு)யாது, வால் அறிவன் நற் றாள் தொழார் எனின் - விளங்கின அறிவினையுடையவன் திருவடியைத் தொழாராயின்? [கொல்- அசை.]
சொல்லினானே பொருள் அறியப்படுமாதலான், அதனைக் கற்கவே மெய்யுணர்ந்து வீடு பெறலாகும். "கற்பக் கழிமட மஃகும்" என்றாரு முளர்.
மீண்டும் வணக்கம் கூறிய தெற்றுக் கென்றார்க்கு, கற்றதனால் பயன் இது வென்பதூஉம், வேறு வேறு பயன் இல்லை யென்பதூஉம் கூறிற்று. ௨
மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்,
நிலமிசை நீடுவாழ் வார்.
இ-ள்:- மலர் மிசை ஏகினான் மாண் அடி சோந்தார் - மலரின் மேல் நடந்தானது மாட்சிமைப்பட்ட திரு வடியைக் சோந்தவரன்றே, நிலம்மிசை நீடு வாழ்வார் - நிலத்தின்மேல் நெடுங்காலம் வாழ்வார். [சோந்தவரன்றே-சோந்தவரே, அன்று - அசை.]
நிலமென்று பொதுப்படக் கூறியவதனான், இவ்வுலகின்கண்ணும் மேலுலகின் கண்ணும் என்று கொள்ளப்படும்.
'தொழுதாற் பயன் என்னை' என்றாக்குப் போகம் நுகர்தலும், வீடு பெறுதலும் என்று கூறுவார், முற்படப் போகம் நுகர்வா ரென்று கூறினர். ௩
தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்,
மனக்கவலை மாற்றல் அரிது,
இ ள்:- தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் - தனக்கு நிகரில்லாதானது திருவடியைச் சேர்ந்தவர்க்கல்லது (ஒழிந்த பேர்களுக்கு), மனக்கவலை மாற்றல் அரிது-மனத்து உண்டாம் கவலையை மாற்றுதல் அரிது. [நிகர் - ஒப்பு.] வீடுபெறலாவது, அவலக் கவலைக் கையாற்றின் நீங்கிப் புண்ணிய பாவ மென்னும் இரண்டினையும் சாராமல், சாதலும் பிறத்தலு மில்லாததொரு தன்மையை யெய்துதல், [அவலம் - கிலேசம். கையாறு - துன்பம்].
வீடு பெறுமென்பார் முற்படக் கவலை கெடுமென்றார், அதனால் எல்லாத் துன்பமும் வருமாதலில், ௪
அறவாழி யந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்,
பிறவாழி நீந்தல் அரிது,
இ-ள்:- அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் - அறமாகிய கடலை யுடைய அந்தணனது திருவடியைச் சேர்ந்தவர்க் கல்லது (ஒழிந்த பேர்களுக்கு), பிற ஆழி நீந்தல் அரிது - பிற ஆழியை நீந்தல் ஆகாது. [பிற ஆழி - காமமும் பொருளும்.]
அவலம் நீங்கப்பெறுதல் அரிது என்றவாறு.
இது காமமும் பொருளும் பற்றிவரும் அவலம் கெடு மென்றது. ௫
வேண்டுதல் வேண்டாமை யில்லான் அடிசேர்ந்தார்
யாண்டும் இடும்பை யிலர்,
இ-ள்:- வேண்டுதல் வேண்டாமை இல்லான் அடி - இன்பமும் வெகுளியும் இல்லாதானது திருவடியை, சேர்ந்தார் - சேர்ந்தவர், யாண்டும் இடும்பை இலர் - எவ்விடத்தும் துன்பம் இல்லா தவர்.
காமமும் கோபமும் ஆகா என்றற்கு "வேண்டுதல் வேண்டாமை யில்லான்” என்று பெயரிட்டார். (இன்பமும் வெகுளியும் - காமமும் கோபமும்].
இது, கையாறு கெடு மென்றது. ௬
இருள்சேர் இருவினையுஞ் சேரா, இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு,
இ-ள்:- இருள்சேர் இருவினையும் சேரா - மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினை யென்னும் இரண்டு வினைகளும் சேரா, இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார்மாட்டு - தலைவனதாகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு,
இது, புண்ணிய பாவங்கள் சேராவென்றது. ௭.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார், நீடுவாழ் வார்.
இ-ள்:- பொறிவாயில் ஐந்து அவித்தான் - (மெய் - வாய் - கண் - மூக்கு - செவி என்னும் ஐம்) பொறிகளின் வழியாக வரும் (ஊறு - சுவை - ஒளி - நாற்றம் - ஓசை என்னும்) ஐந்தின் கண்ணும் செல்லும் மனநிகழ்ச்சியை அடக்கினானது , பொய்தீர ஒழுக்க நெறி நின்றா - பொய்யற்ற ஒழுக்க நெறியிலே நின்றாரன்றே, நீடுவாழ் வார்-நெடிதுவாழ்வார்,
இது, சாவு இல்லை யென்றது. ௮.
பிறவிப் பெருங்கடல் நீந்துவார்; நீந்தார்
இறைவனடி சேரா தவர்.
இ-ள்:- (இறைவன் அடி சேர்ந்தவர்) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் - இறைவனது அடியைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெரிய கடலை நீந்தி யேறுவர், இறைவன் அடி சேராதார் நீந்தார் - இறைவனது அடியைச் சேராதவா அதனுள் அழுந்துவா.
இது, பிறவி இல்லை யென்றது. ௯.
கோளில் பொறியின் குணமிலவே, எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை,
இ-ள்:- கோள் இல் பொறியின் - அறிவு இல்லாத (பொறிகளையுடைய) பாவைகள்போல், குணம் இல - ஒரு குணமும் உடையனவல்ல. எண்குணத்தான் தாளை-எட்டுக் குணத்தினை யுடையவன் திருவடியினை வணங்காத தலை-வணங்காத தலை யினையுடைய உடம்புகள், [வணங்காத என்பது ஈறு கேட்டு நின்றது.]
அவை உயிருண்டாகில் வணங்கும். அவை வணங்காமையால் அவற்றை இழித்து உடம்புக ளென்றார்.
இது, வணங்காத உடம்புகள் பிணங்க ளென்றது. ௧0.