திருக்குறள் மணக்குடவருரை/கொல்லாமை

௧௮-வது-கொல்லாமை

கொல்லாமையாவது, யாதோர் உயிரையும் கொல்லாமை. இது, வெகுட்சி முதிர்ந்துழி நிகழ்வதொன்றாதலின், அதன்பின் கூறப்பட்டது.

ன்னுயிர் நீப்பினும் செய்யற்க, தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை.

இ-ள்:- தன் உயிர் நீப்பினும்-(ஊனை உட்கொள்ளாக்கால்) தன் உயிர் நீங்குமாயினும், பிறிது இன் உயிர் நீக்கும் வினை செய்யற்க - பிறிதொன்றினுடைய இனிய உயிரை நீக்கும் தொழிலினைச் செய்யற்க.

உயிர்க்கேடு வருங் காலத்து நோய் மருந்தாக ஊனை உடகொள்ளற்குக் கொல்லுதல் குற்றமன் றென்பார்க்கு இது கூறப்பட்டது. ௧௭௧.

ல்லா றெனப்படுவ தியாதெனின், யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.

இ-ள்:- நல் ஆறு எனப்படுவது யாதெனின் - நல் வழி என்று சொல்லப்படுவது யாதென வினாவின், யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி- யாதோர் உயிரையும் கொல்லாமையைச் சிந்திக்கும் வழி (என்க).

இது, நன்னெறியாவது கொல்லாமை யென்றது. ௧௭௨.

ன்றாக நல்லது கொல்லாமை; மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.

இ-ள்:- ஒன்றாக நல்லது கொல்லாமை; - இணையின்றாக நல்லது கொல்லாமை; அதன் பின்சாரப் பொய்யாமை நன்று-அதன் பின்பே அணையப் பொய்யாமை நன்று,

[ஒன்றாக-இரண்டாவதின்றாக - இணையின்றாக. நல்லது-நல்லஅறம். மற்று என்பது அசை.]

இது, பல் அறங்களினும் பொய்யாமை நன்று; அதனினும் கொல்லாமை நன்றென்றது. ௧௭௩.

றவினை யாதெனின் கொல்லாமை. கோறல்
பிறவினை யெல்லாம் தரும்.

இ-ள்:- அறவினை யாதெனின்- நல்ல வினை யாதெனின், கொல்லாமை-கொல்லாமை (என்க), கோறல் எல்லா பிறவினையும் தரும்-கொல்லுதல் எல்லாத் தீவினைப் பயனையும் தருமாதலான்.

[அறவினை என்றதனால், பிறவினை தீவினையென்று கொள்ளப்பட்டது. பிறவினையும் என்பது உம்மை கெட்டுநின்றது. பிறவினை என்பது ஆகுபெயர், அதன் பயனுக்காயினமையால்,]

இஃது, அறத்தொழிலாவது கொல்லாமை யென்றது. ௧௭௪.

நிலைஅஞ்சி நீத்தாரு ளெல்லாம், கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.

இ-ள்:- நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் - (மனைவாழ்க்கையில்) நிற்றலை அஞ்சித் துறந்தவ ரெல்லாரினும், கொலை அஞ்சி கொல்லாமை சூழ்வான் தலை-கொலையை அஞ்சிக் கொல்லாமையைச் சிந்திப்பவன் (இல்வாழ்க்கையில் நிற்பினும்) தலைமை யுடையவன்.

இது, கொல்லாமை துறவினும் நன்றென்றது. ௧௭௫.

குத்துண்டு பல்லுயிர் ஓம்புதல், நூலோர்
தொகுத்தவற்று ளெல்லாம் தலை.

இ-ள்:- பல் உயிர் பகுத்து உண்டு ஓம்புதல்-பல உயிர்களுக்குப் பகுத்துண்டு (அவற்றைப்) பாதுகாத்தல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை-நூலுடையார் திரட்டின அறங்க ளெல்லாவற்றிலும் தலையான அறம்,

[பகுத்து உண்டல்-தன் உணவைப் பல உயிர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துத் தான் உண்டல்.]

இது, கொல்லாமை எல்லாச் சமயத்தார்க்கும் நன்றென்றது. ௧௭௬.

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லா துயிருண்ணும் கூற்று,

இ-ள்:- கொல்லாமை மேற் கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல்-கொல்லாமையை மேலான விரதமாகக் கொண்டு ஒழுகுமவன் வாழ்நாளின் மேல், உயிர் உண்ணும் கூற்று செல்லாது-உயிரை உண்ணும் கூற்றுச் செல்லாது.

பிறவாமை உண்டா மாதலால், கூற்றுச் செல்லா தென்றார்.

இது, கொல்லாமையின் பயன் கூறிற்று, ௧௭௭.

யிருடம்பு நீக்கியார் என்ப, செயிருடம்பூண்
செய்யாத வாழ்க்கை யவர்.

இ-ள்:- செயிர் உடம்பு ஊண் செய்யாத வாழ்க்கை யவர்-குற்றமான உடம்பினையும் ஊணைச் செய்யாத மனைவாழ்க்கையினையும் உடையாரை, உயிர் உடம்பு நீக்கியார் என்ப-(முற்பிறப்பின் கண்) உயிரை உடம்பினின்று நீக்கினரென்று கூறுவர் (பெரியோர்).

[குற்றமான உடம்பு-உறுப்புக் குறைந்ததும் நோய் கூடியதுமான உடம்பு.]

இது, கொலையினால் வரும் குற்றம் கூறிற்று. ௧௭௮.

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவார் அகத்து.

இ-ள்:- புன்மை தெரிவார் அகத்து-பொல்லாமையை ஆராய்வாரிடத்து, கொலைவினைய ராகிய மாக்கள் வினைப்புலையர்-கொலைத்தொழிலினை யுடைய மாக்கள் தொழிற்புலையராகுவர்.

[மனவறி வின்றி ஐம்பொறி யறிவை உடைய மனித உருவினரை மாக்களென்பர் தொல்காப்பியனார்.]

இது, கொலைவினையரை உலகத்தார் கன்ம சண்டாள ரென்ப ரென்றது. ௧௭௯.

ன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை.

இ-ள்:- கொன்று ஆகும் ஆக்கம் - (ஓர் உயிரைக்) கொன்று தின்ற ஆக்கமானது, நன்று ஆகும் பெரிது ஆக்கம் எனினும்நன்மையைத் தரும் பெரிதான ஓர் ஆக்கமேயாயினும், சான்றோர்க்கு கடை-உயர்ந்தோர்க்கு ஆகாது.

வேள்வியின் வரும் கொலையும் ஆகாது, பெரியோர் வீடுபேற்றை விரும்பிக் கன்மத்தை விடுத்தலால் என்று கூறினார். ௧௮0.