திருக்குறள் மணக்குடவருரை/புகழுடைமை

௨௪-வது.-புகழுடைமை.

அஃதாவது, புகழ்பட வாழ்தல். [புகழ், வள்ளியோரால் செய்யப்படுவதொன் றாதலின், இவ்வதிகாரம் செல்வரால் செய்யப்படும் ஈகையின்பின் கூறப்பட்டது.]

தோன்றின் புகழொடு தோன்றுக; அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

இ-ள்:- தோன்றின் புகழொடு தோன்றுக-பிறக்கின் புகழ் உண்டாகப் பிறக்க; அஃது இலார் தோன்றலின் தோன்றாமை நன்று-புகழ் இல்லார் பிறத்தலின் பிறவாமை நன்று.

இது, புகழ்பட வாழவேண்டு மென்றது. ௨௩௧.

தல் இசைபட வாழ்தல்; அதுவல்ல
தூதிய மில்லை உயிர்க்கு.

இ-ள்:- இசைபட வாழ்தல் ஈதல்-புகழ்பட வாழ்தலாவது கொடுத்தலே; அது அல்லது உயிர்க்கு ஊதியம் இல்லை-கொடையான் அல்லது உயிர்க்கு இலாபம் (வேறொன்று) இல்லை.

இது, புகழ் உண்டாம் ஆறு கூறிற்று. ௨௩௨.

ரைப்பார் உரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன்
றீவார்மேல் நிற்கும் புகழ்.

இ-ள்:- உரைப்பார் உரைப்பவை எல்லாம்-சொல்லுவார் சொல்லுவன எல்லாம்; இரப்பார்க்கு ஒன்று ஈவார்மேல் நிற்கும் புகழ்-இரந்து வந்தார்க்கு அவர் வேண்டிய தொன்றைக் கொடுப்பார் மேல் நில்லாநின்ற புகழையே.

இஃது, ஈகையே புகழுக்குச் சிறந்த காரண மென்றது. ௨௩௩.

ன்றா உலகத் துயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்.

இ-ள்:- உயர்ந்த புகழ் அல்லால்-உயர்ந்த புகழல்லது, உலகத்து ஒன்றாக-உலகத்து இணையின்றாக, பொன்றாது நிற்பது ஒன்று இல்-கெடாது நிற்பது பிறிது இல்லை. .

இது, புகழ் மற்றுள்ள பொருள் போலன்றி அழியாது நிற்கு மென்றது. ௨௩௪.

நிலவரை நீள்புகழ் ஆற்றின், புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.

இ-ள்:- நிலவரை நீள்புகழ் ஆற்றின்-நிலத்தெல்லையின் கண்ணே நெடிய புகழைச் செய்வானாயின், புத்தேள் உலகு புலவரைப் போற்றாது-தேவருலகம் புலவரைப் போற்றாது (இவனைப் போற்றும்),

புலவரென்றார் தேவரை, அவர் புலனுடைய ராதலான்.

இது, புகழ்செய்தாரைத் தேவருலகம் போற்று மென்றது. ௨௩௫.

புகழ்பட வாழாதார், தம்நோவார், தம்மை
இகழ்வாரை நோவ தெவன்.

இ-ள்:- புகழ்பட வாழாதார்-புகழ்பட வாழமாட்டாதார்,

தம் நோவார்-தம்மை நோவாது, தம்மை இகழ்வாரை நோவது எவன்-தம்மை இகழ்வாரை நோகின்றது யாதினுக்கு?

இது புகழ்பட வாழமாட்டார் இகழப்படுவ ரென்றது. ௨௩௬.

சையென்ப வையகத்தார்க் கெல்லாம், இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.

இ-ள்:- இசை என்னும் எச்சம் பெறாவிடின்-புகழாகிய ஒழிபு பெறாவிடின், வையகத்தார்க்கு எல்லாம் வசை என்ப-(அப்பெறாமைதானே) உலகத்தார்க் கெல்லாம் வசையாம் என்று சொல்லுவர் (நல்லோர்).

[ஒழிபு-ஒருவன் இறந்தபின் இறவாது (ஒழியாது) நிற்பது.]

மேல் புகழ் இல்லாதாரை இகழ்ப வென்றார். அவர் குற்றமில்லாராயின் இகழப்படுவாரோ என்றார்க்கு, வேறு குற்றம் வேண்டா, புகழின்மைதானே அமையும் என்று ஈண்டுக் கூறினார். ௨௩௭.

சையொழிய வாழ்வாரே வாழ்வார்; இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.

இ-ள்:- வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார்-வசை ஒழிய வாழ்வாரே உயிர் வாழ்ந்தாராவார்; இசை ஒழிய வாழ்வாரே வாழாதவர்-புகழ் ஓழிய வாழ்வாரே உயிர் வாழாதாராவர்.

இது, புகழில்லார் பிணத்தோ டொப்ப ரென்றது. ௨௩௮.

சையிலா வண்பயன் குன்றும், இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.

இ-ள்:- இசை இலா யாக்கை பொறுத்த நிலம்-புகழ் இல்லாத உடம்பைப் பொறுத்த நிலத்தின் கண், வசை இலா வண்பயன் குன்றும்-பழியற்ற நல்விளைவு குறையும்.

இது, புகழில்லாதான் இருந்த இடத்தில் விளைவு குன்று மென்றது. ௨௩௯.

த்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகற் கல்லால் அரிது.

இ-ள்:- நத்தம்போல் கேடும்-ஆக்கம்போல் கேடும், உளதாகும் சாக்காடும்-உளதானாற் போல் சாதலும், வித்தகற்கு அல்லால் அரிது-வல்லவற் கல்ல தரிது,

இது, புகழ்பட வாழ்தல் மக்களெல்லார்க்கும் அரி தென்றது, ௨௪0.